தீட்சை

வழிபடுவதற்கு விதிப்படி தகுதியளித்தல்

தீட்சை என்பது சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக் கிரியைகளில் ஒன்று. சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும். சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்காக வழங்கப்படும் கிரியை இதுவாகும். அருட்பாக்களை ஓதுவதற்கும், புராணங்களைப் படிப்பதற்கும், ஞான சாத்திரங்களைக் கேட்டல், படித்தலுக்கும், பிரதிஷ்டை, விவாகம், அந்தியேட்டி, சிரார்த்தம் போன்ற நம் சமயக் கிரியைகளைச் செய்தவற்கும், செய்விப்பதற்கும் தகுதியுடையவர்கள் தீட்சை பெற்றவர்களே.

சொல்லிலக்கணம்

தொகு

'தீக்ஷா' என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருளாகும்.[1]'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.

தீக்கை

உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்).

நமது முயற்சி, உடம்பின் உள்ளும் புறமும் உள்ள அழுக்குளை நீக்குதலும், ஆகாரம் ஊட்டிச் சுத்தமாய் வளர்த்தலுமாம். நீரினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்யலாம்; உள்ளிருக்கும் உடம்பு சூக்கும உடம்பு; அதில் உள்ள தீய அழுக்குகளை, ஆசமனம், மந்திர செபம், அகமர்சணம் முதலிய அனுட்டானக் கிரியைகளினாலேயே போக்க முடியும். இந்த உண்மைகளை அறிந்தே நம் சமயத்தில் ஏழு வயதில் தீட்சை பெற வேண்டும் என்ற விதி சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் கால் கைகளை அடக்கி ஆளும் பக்குவம், மனதில் இச்சைகள் தோன்றி விருத்தியாகக் கூடிய காலமும், அப்பருவகாலத்திலிருந்துதான் உதிக்கின்றன என்பது கருதியே. அவ்வயதில் தீட்சை பெற்றிருந்தால், அனுட்டான சாதனைகளினால், தேகத்தையும் மனதையும் அடக்கி நம் வசப்படுத்தவும், தீச் செயல்கள் தோன்றாமலும் செய்ய முடியும். படிப்படியாய்ச் சொல்லப்பட்ட தீட்சைகளைப் பெற்று அந்தந்த தீட்சைகளுக்குரிய கிரியைகளையும் சாதனங்களையும் அப்பியாசப்படுத்திவர, இறைவன் திருவடியடைதல் இலகுவாகும்.

தீட்சை பெற தகுதியுடையவர்கள்

தொகு

சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தீட்சை பெற தகுதியுடையவர்கள். அதுமட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் தீட்சை பெற்று சைவசமயிகளாகலாம். மனிதர்கள் மாத்திரமன்றி புல், பூண்டு, பறவை, மிருகங்களுக்கும் தீட்சை செய்யப்படுகின்றன. உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஆசாரியனுடைய ஞானநிலை எவ்வளவோ அவ்வளவு ஆற்றலால் அவரால் தீட்சிக்கப்படும் ஆன்மாவிற்கு மல மாசு நீங்கித் தூய்மை உண்டாகும். தீட்சை பெற விரும்புவோர் ஒழுக்க சீலராக இருப்பதோடு பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். உலகப் பற்றுக்களைக் குறைத்துத் தியானத்தில் ஈடுபடுகின்றவராக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

தீட்சை அளிக்கும் சிவாசாரியாரின் தகமைகள்

தொகு

சைவ மக்கள் சைவ சமய ஆசாரங்களை அனுசுடிப்பதற்கு வேண்டிய தகுதியை அளிப்பது தீட்சை ஆகும். இத் தீட்சையை அளிக்கின்ற சிவாசாரியார் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை, ஆசார்யாபிசேகம் எனும் நான்கையும் பெற்றவராக இருக்க வேண்டும் என சிவாகமங்கள் கூறுகின்றன.

சமய தீட்சை

தொகு

சைவசமயி ஆகும் உரிமையைத் தருவது சமய தீட்சை எனப்படுகின்றது. சமய தீட்சை பெற்றவன் "சமயி" எனப் பெயர் பெறுகிறான். சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூலமந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாய நம: எனும் பஞ்சாட்சரத்தை) தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும். இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.

விசேட தீட்சை

தொகு

சிவலிங்க பூசை செய்வதற்கான தகுதியளிப்பது விசேட தீட்சை ஆகும். சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் வலுவிலக்க, சிவனைச் சிவலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியைநெறியில் விருப்பு உண்டாக, முன்னர் சமய தீட்சை பெற்றுக்கொண்ட ஆசாரியரிடமோ அல்லது வேறொருவரிடமோ விசேட தீட்சை பெறலாம். இதன் மூலம் சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை, புறப்பூசை செய்யும் முறைகளோடு யோக முறைகளைச் செய்யும் உரிமையையும் பெறலாம்.

நிர்வாண தீட்சை

தொகு

சமய தீட்சையும், விசேட தீட்சையும் பெற்றவர்கள் இறுதியாகப் பெறும் தீட்சை நிர்வாண தீட்சை எனப்படும். இதன் மூலம் அத்துவாக்களை அடக்கும் கலையும், முப்பொருள் உண்மையை உணரும் தன்மையும், உயிரை ஞான நிலைக்கு உய்யச் செய்யும் நிலையும் ஞானாசிரியனிடமிருந்து கிடைக்கும். நிர்வாண தீட்சை சத்தியோ நிர்வாண தீட்சை, அசத்தியோ நிர்வாண தீட்சை என

ஆசாரிய அபிடேகம்

தொகு

நிர்வாண தீட்சை பெற்ற ஒருவர் குருப்பட்டம் தரிப்பதற்காகச் செய்யப்படும் கிரியை ஆசாரிய அபிடேகம் ஆகும். குருப்பட்டம் பெற்றோர் பிறருக்குத் தீட்சை கொடுக்கவும், பரார்த்த பூசை செய்யவும் தகுதியைப் பெறுகின்றார். இவர் சிவாசாரியார் எனவும் அழைக்கப்படுவார்.

சிவாசாரியாருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்

தொகு
  • திருமணம் முடித்து இல்லறம் நடத்துபவராக இருத்தல்.
  • உடல், உளக் குற்றமற்றவராக இருத்தல்.
  • கல்வியறிவும் ஒழுக்க மேம்பாடும் மிக்கவராக இருத்தல்.
  • சைவ நாற்பாதங்களில் பயிற்சியுடையோராயிருத்தல்.
  • சீடர்களுக்குச் சிறந்த ஒழுக்கத்தையும் சைவப் பாரம்பரிய நெறிகளையும் போதிக்கக் கூடியவராயிருத்தல்.
  • பதினாறு தொடக்கம் 70 வயதிற்குட்படோராயிருத்தல்.

தீட்சையின் வகைகள்

தொகு

தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும். இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். [2]

நயன தீட்சை

தொகு

குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.

பரிச தீட்சை

தொகு

குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணாக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.

வாசக தீட்சை

தொகு

குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.

மானச தீட்சை

தொகு

குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.

சாத்திர தீட்சை

தொகு

குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.

யோக தீட்சை

தொகு

குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.

ஒளத்திரி தீட்சை

தொகு

பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. தியானம் பழக 100 சிந்தனைகள் - பானுகுமார் - ராஜம் பதிப்பகம்
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=4779 7 வகை தீட்சை!

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீட்சை&oldid=3807285" இலிருந்து மீள்விக்கப்பட்டது