பாடலரசன் அரசகேசரி பண்டாரம் (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார்.

வாழ்க்கை குறிப்பு

தொகு

அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.

இலக்கியப் பங்களிப்பு

தொகு

தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-[1]..

ஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள
திநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா

என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:-

கனைகழல் வீரனுங் காவ லான்றரு
புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான்
றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய
வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே

இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள அரசடிப்பிள்ளையார் கோவிலின் தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-

கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க
ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்
பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்

இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-

பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கில்

என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,

அறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக்
கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச்
சுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க
பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்

என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.

மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.[2]..

மேற்கோள்கள்

தொகு
  1. குமாரசுவாமிபுலவர் இரகுவமிச கருப்பொருள் (கட்டுரை) ., 1910. .
  2. குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசகேசரி&oldid=2450036" இலிருந்து மீள்விக்கப்பட்டது