அரசியல் கருத்துக்கள்-ரோம்

உரோம் நாட்டில் வளர்ந்த அரசியல் கருத்துக்கள்

அரசியல் கருத்துக்கள், ரோம் அல்லது உரோமானிய அரசியற் கருத்துருக்கள் (Political thoughts of Rome) தொடக்கத்தில் ஒரு நகர ஆட்சியாக இருந்த ரோம், முதலில் இத்தாலி மீதும், பிறகு நாளடைவில் கடல் கடந்தும் படையெடுத்துப் பெரிய ஆட்சி ஒன்றை கி. மு. முதல் நூற்றாண்டில் நிறுவிக்கொண்டது. ஆட்சிப் பளுவினால் நகரராச்சியம் மறைந்துபோய், சூலியசு சீசரின் படைப் பலத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி ஓங்கிற்று.[1] இதன் விளைவாக, ரோமானியக் குடிமை ஆட்சி, மக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. சிறு சிறு மக்கள் குடிமைஆட்சிப்பகுதிகளின் ஒன்றியத்தினை, ரோமானியப் பேரரசர் தங்கள் ஆளுமையின் கீழ் வைத்திருந்தினர். அரசப் பரம்பரையினர், தங்கட்கு ஒரு தெய்விக ஆட்சி உரிமையுண்டென்று கருதலாயினர். இக்கருத்து நீண்ட நாள் நிலவி வந்தது. ரோமானியச் ஆட்சிக் காலத்தில் அரசியல் ஒற்றுமை, அமைதி, உலகக் குடிமை, வாழ்க்கையின் எல்லாவற்றையும் உளப்படுத்திய சட்டம் முதலிய கருத்துக்கள் தோன்றின.[2]

சீனோ என்ற கிரேக்க அறிஞரே, உரோமனிய அரசியல் கருத்துருக்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
(Zeno of Citium, the founder of Stoicism)

சட்டம்தொகு

கிரேக்கர்களுடைய மக்களாட்சி, அரசியல் விடுதலைக் கருத்துக்கள், சிறிது பின்னடைந்தன. ரோமானியர்கள் அரசியலையும், அறநிலையையும் வேறுபடுத்தினர். சமுதாயம் வேறு, நாட்டின் ஆட்சியுரிமை வேறு என்னும் கருத்தும் அவர்களால் உருவாயிற்று. நாட்டினுள் அடங்கிய தனி மனிதர்கள் வேறு, ஆட்சியுரிமை வேறு என்பதும் இவர்களுடைய கருத்தாகத் திகழ்ந்தது. தனி மனிதனின் உரிமைகளைக் காப்பது, அரசரின் கடமையேயன்றி, அவ்வுரிமையில் தலையிடுவது அல்ல என்று அவர்கள் கண்ட முடிவிலிருந்து, ரோமானிய தனிநபர்ச் சட்டம் தோன்றிற்று. சுடோயிக்குகளுடைய[3] கருத்தான இயற்கைச் சட்டமும், இவர்கள் கருத்துக்களில் தோன்றிற்று. மனிதர்களிடையே சமத்துவத்தைப்பற்றிய கொள்கையும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டது.

அறிஞர்தொகு

சிசரோ : ரோமானிய அரசியல் அறிஞர்களில், சிசரோ (கி. மு. 106-43) குறிப்பிடத்தக்கவர். இவர் பன்னூல்களைப் பயின்றனவர் ; சட்ட அறிஞர் ; குடியரசு அமைப்புகளை நிலைபெறச் செய்வதில் ஊக்கம் கொண்டவர். அரிஸ்டாட்டில் கருதியது போலவே இவரும் மனிதனுடைய சமுதாய இயல்பூக்கமே, ஒரு நாடு அமைவதற்குக் காரணமாயிருக்கிறது என்று கூறினார். நாட்டின் கருத்துக்களை நிறைவேற்றுவதே, அரசாங்கத்தின் அலுவல் என்றார். இயற்கையறிவையும் அற நெறியையும் ஒட்டியே, அரசியல் செயல்களும், சட்டங்களும் அமைய வேண்டும் என்றார். இவர் வற்புறுத்திய உலக ஐக்கியக் கொள்கையும், உலகப் பொதுச்சட்டக் கொள்கையும் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பாலிபியசு: (சு. கி. மு. 205-சு. .122) என்னும் கிரேக்க அறிஞர்[4], இத்தாலியில் வாழ்ந்து வந்தவர். கிரேக்கக் கருத்துக்களாகிய அரசாட்சிப் பாகுபாட்டு முறைகளையும், அரசியல் அமைப்புகள் நிலைத்து இருக்கவேண்டியதன் அவசியத்தையும் இவர் வற்புறுத்தினார். கிரேக்க நாட்டினை, ரோமானியர் வென்று ஆண்டது நியாயம் என்று காட்டுவதே, அவர் "இயற்றிய வரலாறு" என்னும் நூலின் நோக்கமாக இருந்தது.

சுடோயிக்குகள் : உலகப் பொதுமையுணர்ச்சியே (Cosmopolitanism) ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கருத்தாகும். சுடோயிக்குகளின் கருத்துக்களையும், ரோமானியர்கள் ஏற்றுக்கொண்டு மேலும் வளர்த்தனர். முழுப்பலம் பொருந்திய ஆட்சிக் கோட்பாடுகளும், அரசுத் தலைமைக் கோட்பாடும், சட்டத்தலைமைக் கோட்பாடும் ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியல் கோட்பாடுகளாம்.

செனிக்கா[5] : கி. பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 15-ஆம் நூற்றாண்டு வரை, ரோமானியச் ஆட்சி சிதைந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ மதம் பரவிற்று. கிறித்தவ அறிஞர்களுடைய அரசியல் கருத்துக்கள், செனிக்கா (Seneca சு. கி.மு. 4-கி. பி. 65) என்னும் ரோமானிய அறிஞர் சுடோயிக்குகளுடைய அரசியற் கருத்துக்களை, மாற்றி வகுத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அரசாங்கமும் சட்டமும் வேண்டப்படுவதற்குக் காரணம், மனிதனுடைய தீக்குணமே என்றும், இயற்கைச் சட்டம் என்று ஒன்று உண்டு என்றும், மனிதனுடைய அறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இச்சட்டமே, அரசாங்கச் சட்டத்துக்கு அளவுகோலாகக் கொள்ளத்தக்கது என்றும் இவர் கூறினார்.

மேற்கோள்கள்தொகு