அருச்சுன் முண்டா
அருச்சுன் முண்டா (Arjun Munda) (பிறப்பு சனவரி 5, 1968) இந்திய மாநிலம் சார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஆவார்.
அரசியல் வாழ்வு
தொகுமுண்டாவின் அரசியல் பிரவேசம் 1980களில் பீகாரின் தென்பகுதியில் அமைந்திருந்த மலைவாழ் மக்கள் மிகுந்த சார்க்கண்ட்டை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி நடந்த (சார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) "சார்க்கண்ட் விடுதலைப் போராட்டத்தில்" நிகழ்ந்தது. பழங்குடியினர் மற்றுமு பிற பிற்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட முண்டாவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்தது.1995ஆம் ஆண்டு பீகாரின் சட்டப்பேரவைக்கு கார்சுவான் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 2000 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடத் துவங்கினார்.
சார்க்கண்ட் 2000ஆம் ஆண்டு உருவானது. முதல் அரசின் முதல்வராக பாஜகவின் பாபுலால் மராண்டி பதவி ஏற்றார்.அவருடைய அமைச்சரவையில் சமூகநல அமைச்சராக முண்டா பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவு அளித்த பாஜக அல்லாத உறுப்பினர்கள் மராண்டியின் நீக்கத்தைக் கோரியதால், கட்சித் தலைமை பழங்குடியினரிடம் செல்வாக்கு மிகுந்த அருச்சுன் முண்டாவை முதலமைச்சராக்க பரிந்துரைத்தது. அதன்படி மார்ச்சு 18, 2003 அன்று சார்க்கண்ட் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆயினும் சட்டப்பேரவையில் சரியான பெரும்பான்மை அமையாததாலும் ஆளுநர் சயித் சிப்தே ராசியின் தலையீட்டாலும் மார்ச்சு 2,2005 அன்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
பத்து நாட்கள் கழித்து, மார்ச்சு 12, 2005அன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மார்ச்சு 15,2005 அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கைப் பெற்றார்.இம்முறை அவரது அரசு பல சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவில் நிலையற்று இருந்தது.இறுதியில் செப்டம்பர் 14,2006 அன்று அரசியல் காரணங்களுக்காக மீண்டும் பதவி விலகினார்.
தற்போது மத்திய அமைச்சராக 2019 முதல் உள்ளார்.