அருள் (கிறித்தவம்)

கிறித்தவ இறையியலில் அருள் (Grace) என்பது கடவுள் தாமாகவே விருப்பம் கொண்டு மனித குலத்திற்குக் கொடையாக அளிக்கின்ற இறை அன்பையும் இரக்கத்தையும் குறிக்கும். இக்கொடையானது மனிதர் புரியும் செயல்களுக்குக் கைம்மாறு என்றிராமல் கடவுளின் சொந்த விருப்பின் படியே நிகழ்வதாகும்.[1] கடவுள் மனிதர் மட்டில் கொண்டுள்ள பரிவு, கனிவுடைமை ஆகியவற்றின் வெளிப்பாடே "அருள்"[2]

உலகத்தை மீட்கும் கடவுளின் அன்பிலிருந்து தோன்றுகின்ற அருள். கிறிஸ்துவின் சிலை. இடம்: ரியோடி ஜெனேரோ, பிரேசில்

அருள் கடவுளின் தாரள மனதால், சுதந்திரமாக, மனிதரின் தகுதியின்மையைப் பாராமல், வியப்புறும் வகையில் வழங்கப்படுகின்ற கடவுளின் கொடை.[3] இவ்வாறு கடவுள் மனிதர் மட்டில் தம் அன்பையும் பரிவையும் எண்பிக்கிறார்.

கடவுளின் கட்டளைகளை மீறி, தீச்செயல் புரியும் மனிதரின் பாவங்களைக் கடவுள் மன்னிப்பதன் வழியாகத் தம் மீட்பை மனிதருக்கு வழங்கும்போது அங்கே துலங்கி நிற்பது கடவுளின் தலைசிறந்த பண்பாகிய அருள் ஆகும்.

அருள் என்பது கடவுள் தரும் கொடை

தொகு

கிறித்தவக் கொள்கைப்படி, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான உறவில் முதல் அடி எடுத்து வைப்பவர் கடவுளேயன்றி மனிதர் அல்ல. இரக்கத்தையும் நட்பையும் அடித்தளமாகக் கொண்ட கடவுளின் அருள் மனிதருக்கு வழங்கப்படும்போது மனிதர் அக்கொடையைச் சுதந்திரமாக ஏற்க அழைக்கப்படுகிறார்கள். கடவுளின் கொடையை மனிதர் ஏற்கவோ மறுக்கவோ கூடும். கடவுள் மனிதரை அவர்களது உள்ளார்ந்த சுதந்திரத்தின்படி செயல்பட விடுவாரே ஒழிய அவர்களைக் கட்டாயப்படுத்தி தம் கொடையை ஏற்கச் செய்வதில்லை.

கால்வின் கருத்து

தொகு

கிறித்தவ சமய சீர்திருத்தவாதியான ஜான் கால்வின் என்பவர் கடவுள் தம் அருளை யாருக்கு வழங்குகிறார் என்பது பற்றி "முன்குறித்தல் (கிறித்தவம்)|முன்குறித்தல்]] என்னும் கொள்கையைப் பரப்பலானார். அதன்படி, எல்லா மனிதரும் தம் இயல்பிலேயே ஆன்மிக முறையில் இறந்தவர்களாக உள்ளார்கள்; கடவுளால் மட்டுமே அம்மனிதருக்கு ஆன்ம உயிர் வழங்கி அவர்களுக்குப் புத்துயிர் அளிக்க முடியும். ஆனால் கடவுள் மீட்படைவதெற்கென்று தாம் "முன்குறித்து" வைத்த மனிதருக்கு மட்டுமே அவ்வாறு புத்துயிர் வழங்குவார். ஏனையோர் தண்டனைக்கு உள்ளாவர். இது கால்வினின் போதனை.

அருள் வழங்கப்படுகின்ற வழி பற்றி கிறித்தவ சபைகளிடையே ஒற்றுமை வேற்றுமைகள்

தொகு

எவ்வழியாய்க் கடவுளின் அருள் மனிதருக்கு வழங்கப்படுகிறது என்பதைக் குறித்த மட்டில் கிறித்தவ சபைகளிடையே வேற்றுமைகள் உள்ளன.[4] கத்தோலிக்க திருச்சபை, கடவுளின் அருள் மனிதரைப் பல வழிகளில் வந்தடைகிறது என்றும், குறிப்பாக திருமுழுக்கு, நற்கருணை போன்ற அருட்சாதனங்கள் வழியாகக் கடவுள் தம் அருளை மக்களுக்கு வழங்குகிறார் என்றும் கற்பிக்கிறது.

இயேசு கிறிஸ்துவில் மனிதர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும், கடவுள் கொடையாகத் தருகின்ற அந்த நம்பிக்கையின் வழியாகவே மனிதர் மீட்படைகின்றனர் என்றும் எல்லாக் கிறித்தவ சபைகளும் ஏற்கின்றன: "நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை" (எபேசியர் 2:8).

மார்ட்டின் லூதரின் கருத்துப்படி, கடவுளின் அருள் இறைவார்த்தை வழியாகவும் அருட்சாதனங்கள் வழியாகவும் மனிதருக்கு வழங்கப்படுகிறது[5][6]

அருட்சாதனங்கள் கடவுளின் அருள் மனிதரை வந்தடையும் வழி என்பது ஜான் வெஸ்லியின் (John Wesley) கருத்துமாகும்.[7] கடவுளின் பிள்ளைகளுக்கு தூய ஆவியின் அருள் வழங்கப்படுவதற்கு அருட்சாதனங்கள் சிறப்பான வாய்க்கால் போன்று உள்ளன என்று அவர் கூறுகிறார்.[8]

கால்வின் சபையினர் கருத்துப்படி, கடவுளின் அருளின்றி மனிதர்கள் கையறு நிலையிலேயே உள்ளனர். கால்வினின் கருத்திலிருந்து மாறுபட்ட ஆர்மீனியப் பிரிவினர் (Arminians), மனிதர் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதால் கடவுளின் அருள் மனித முயற்சியோடு இணைந்து செயலாற்றுவது பற்றி போதித்தனர். பொதுவாக, கடவுளின் அருள் மட்டுமே மனித மீட்பை நிர்ணயிக்கிறதா, மனிதர்கள் தம் கதியை அடைவதற்குக் கடவுளின் அருள் தேவைப்படாமல் தம் சொந்த முயற்சியையே நம்பலாமா என்பது கிறித்தவ சபைகளிடையே விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறது.[4]

அருள் பற்றிய போதனையின் விவிலிய அடிப்படை

தொகு

கிறித்தவ சமயத்தில் கடவுளின் அருள் பற்றிய போதனைக்கு வலுவான விவிலிய அடித்தளம் உண்டு. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் "அருள்" என மொழிபெயர்க்கப்படும் சொல்லுக்கு இணையான மூல கிரேக்கச் சொல் "charis" (கிரேக்கம்:χάρις) என்பதாகும். இச்சொல்லுக்கு "மகிழ்ச்சி, நிறைவு, இன்பம், நலம் கொணர்வது" என்பது நேர் பொருளாகும்.[9]

பழைய ஏற்பாடு

தொகு

எபிரேய விவிலியத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்துவசிந்தா (Septuaginta) என்னும் ஏடு எபிரேயத்தில் "கருணை, தயை, பரிவு" எனப் பொருள்படும் சொல்லை χάρις (charis) என்று கிரேக்கத்தில் பெயர்க்கிறது (காண்க: தொடக்க நூல் 6:8 "ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.")[9]

ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவுகின்ற செயலும் "அருள் நிறைந்த" செயலாக பழைய ஏற்பாட்டில் அடையாளம் காணப்படுகிறது.[9]

கடவுள் மனிதர் மட்டில் இரக்கமும் பரிவும் காட்டுவதைப் பழைய ஏற்பாடு பல இடங்களில் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, இணைச்சட்டம் 7:8 கடவுள் தம் மக்கள் மட்டில் "அன்புகூர்ந்ததை"க் குறிப்பிட்டு உரைக்கிறது. திருப்பாடல்கள் நூலில் பல இடங்களில் கடவுளின் அன்பும் அருளும் போற்றப்படுகின்றன. கடவுள் தம் மக்களுக்குத் தம் நீதிநெறிகளை எடுத்துரைப்பதும் (திருப்பாடல்கள் 119:29), மக்களின் வேண்டுதல்களைக் கேட்பதும் (திருப்பாடல்கள் 27:7) அவர் மக்கள் மட்டில் கொண்டுள்ள அன்பின், அருளின் வெளிப்பாடே.[9] நாடுகடத்தப்பட்ட மக்களை விடுவித்து, அவர்களுக்குப் புது வாழ்வு வழங்கிய கடவுளின் "பேரன்பு" போற்றப்படுகிறது (திருப்பாடல்கள் 85).

கத்தோலிக்க திருச்சபை அருள் பற்றி வழங்கும் போதனை

தொகு

கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி, "அருள் என்பது கடவுள் நமக்கு தாமாகவே விரும்பி அளிக்கின்ற கொடை. கடவுளின் பிள்ளைகளாக, அவருடைய குழந்தைகளாக நாம் மாறிட நாம் பதில்மொழி வழங்குவதற்கு, கடவுள் தன்மையில் நாம் பங்கேற்பதற்கு, நிலைவாழ்வை நாம் அடைந்துகொளவதற்கு அருள் என்னும் இறைக்கொடை நமக்குத் துணைபுரிகின்றது."[10] கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற அருள் என்னும் கொடை மனிதரைப் பாவ நிலையிலிருந்து அகற்றி, அவர்களைப் புனிதப்படுத்தி, அவர்கள் கடவுளின் வாழ்வில் பங்கேற்க துணையாக உள்ளது.[11]

கடவுளின் அருள் மனிதர்களைப் பல வழிகளில் வந்தடைகிறது.[12] கடவுள் மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற அனைத்துமே மனிதருக்கு அருளை வழங்குகின்ற வழிகளே. சிறப்பாக திருவருட்சாதனங்களும் திருச்சபையின் பணியும் கடவுளின் அருள் மனிதரை வந்தடையும் வழிகளாம்.[12][13] கடவுள் தம் அருளை வழங்கும் சிறப்பு வழிகளான திருவருட்சாதனங்களுள் நற்கருணை என்னும் திருவருட்சாதனம் தலையாயது. அவை தவிர, மனிதர் ஒப்புக்கொடுக்கும் இறைவேண்டல், புரிகின்ற நற்செயல்கள் ஆகியனவும் கடவுளின் அருள் மனிதருக்கு அளிக்கப்படுகின்ற வழிகள் ஆகும்.[14][15] திருவருட்சாதனங்களைப் பெறுவோர் தகுந்த உள நிலையோடு அவற்றைப் பெற வேண்டும். அவற்றை நிறைவேற்றும் திருப்பணியாளரும் கடவுளுக்கு உகந்த நிலையில் இருக்கவேண்டும். ஆயினும் திருப்பணியாளரின் தகுதிக் குறைவால் திருவருட்சாதனத்தின் விளைவு பாதிக்கப்படுவதில்லை. ஆனால் திருவருட்சாதனத்தைப் பெறுவோரின் உளப்பாங்குக்கு ஏற்ப கடவுளின் அருள் அவரது வாழ்வில் பயன் நல்கும்.[16]

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி ஏடு திருச்சபையின் போதனையைக் கீழ்வருமாறு எடுத்துரைக்கிறது: "மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்கவும் அவரது அன்பினால் செயல்படவும் கடவுள் நமக்கு இலவசமாக வழங்கும் கொடையே ஏற்புடைமை ஆக்கும் அருள் ஆகும். நம்மைத் தூய்மைப்படுத்தி இறைமயமாக்கும் இவ்வருள் 'நிலையான' (habitual) 'தூய்மைப்படுத்தும்' (sanctifying) அல்லது 'இறைமைப்படுத்தும் அருள்' (deifying grace) என அழைக்கப்படுகிறது. மனிதரின் அறிவுத்திறனை, ஆற்றலை விஞ்சி நிற்பதாலும் இறைவனின் இலவச முன் முயற்சியை முற்றிலும் சார்ந்து இருப்பதாலும் இது இயற்கைக்கும் நம் அனுபவத்திற்கும் அப்பாற்பட்டது (supernatural)"[17][18]

திருச்சபை வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களும் மேற்கூறிய போதனையை வழங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, 529இல் ஆரஞ்சு நகரில் நிகழ்ந்த சங்கமும், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த திரெந்து பொதுச்சங்கமும், "மனிதர் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுதல் அவர்கள் புரியும் நற்செயல்களாலோ அவர்களின் நம்பிக்கையாலோ தானாகவே நிகழ்வதல்ல, மாறாக கடவுளின் அருள் கொடையாலேயே நிகழ்கிறது" என்று போதித்தன.[19]

தூய்மைப்படுத்தும் அருள்

தொகு

கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடையாகிய அருள் இருவகையதாகப் பிரித்து அறியப்படுகிறது. முதலில் வருவது "தூய்மைப்படுத்தும் அருள்" (Sanctifying Grace). கடவுளுக்கு ஏற்புடையோராய் மனிதர் ஆக்கப்படும்போது, அதாவது பொதுவாக, திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனத்தைப் பெறும்போது, கடவுள் மனிதரின் ஆன்மாவில் விளைவிக்கின்ற இறைவாழ்வு இதனால் குறிக்கப்படுகிறது. தூய்மைப்படுத்தும் அருள் மனிதரைப் பாவிகள் என்னும் நிலையிலிருந்து மீட்டு, அவர்களைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. இவ்வாறு மனிதர்கள், கடவுளின் ஒரே மகனான இயேசுவில் கடவுளின் பிள்ளைகளாகவும் உரிமைப் பேறு உடையவர்களாகவும் மாறுகிறார்கள் (காண்க: கலாத்தியர் 4:5). கடவுளின் பிள்ளைகள் என்னும் நிலையைப் பெறுவதால் கடவுளுக்கு ஏற்புடையோராய் மாற்றப்பட்டவர்கள் கடவுளை "அப்பா, தந்தையே" என அழைக்கும் உரிமை பெறுகிறார்கள் (காண்க: உரோமையர் 8:15).

இக்கருத்தைப் புனித பவுல் கீழ்வருமாறு கூறுகிறார்:

"கடவுள் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம்" (எபேசியர் 1:5-6).

இவ்வாறு, கடவுளின் பிள்ளைகளாக மனிதர் மாறும்போது அவர்களின் உள்ளங்களில் தூய ஆவி குடிகொள்கிறார்:

"நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி "அப்பா, தந்தையே", எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப் பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே" (கலாத்தியர் 3:6-7).

இவ்வாறு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆன ஒருவர் அந்த ஏற்புடைமை நிலையைக் சாவான பாவம் (mortal sin) புரிவதன்மூலம் இழக்காதவரை அவரிடம் "தூய்மையாக்கும் அருள்" குடிகொள்ளும். சாவான பாவம் மனிதரைக் கடவுளின் அன்பிலிருந்து துண்டித்துவிடுகிறது.

கனமான பாவம் அல்லாத பிற சிறிய குற்றங்கள் "அற்பப் பாவம்" (venial sins) என அழைக்கப்படுகின்றன. இவை மனிதர் புரிகின்ற நற்செயல்களால் விளையும் பயனைத் தடுக்கின்றன. ஆனால் கடவுள் இரக்கமும் பரிவும் மிகுந்தவர் ஆதலால், பாவம் புரிந்து தூய்மையாக்கும் அருளை இழந்த மனிதர் மீண்டும் ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாகவோ, மனதார வருத்தம் தெரிவித்து மீண்டும் பாவம் புரியாதிருக்க தீர்மானம் எடுப்பதின் வழியாகவோ பெறும் வழியைக் கொடுத்துள்ளார்.

செயலாற்றும் அருள்

தொகு

செயலாற்றும் அருள் என்பது தூய்மையாக்கும் அருளைப் போன்று "நிலையானதாக" அல்லாமல், தனிப்பட்ட சூழல்களுக்கான கொடையாக வழங்கப்படுவது ஆகும். செயலாற்றும் அருள் என்பது தூய்மையாக்கும் அருளை உறுதிப்படுத்தி மேன்மையுறச் செய்கிறது. எனவே, பொதுவாக "அருள்" என்னும்போது தூய்மையாக்கும் அருளே குறிக்கப்படுவதுண்டு. "அருள்நிலையில் இருத்தல்" அல்லது "அருளை இழத்தல்" என்பது தூய்மையாக்கும் அருளுக்குப் பொருத்தி உரைக்கப்படுகிறது.

அருளுக்கும் மனித சுதந்திரத்துக்கும் உள்ள தொடர்பு

தொகு

கடவுள் மனிதருக்கு வழங்கும் அருளை மனிதர்கள் தமக்கு வேண்டாம் என்று மறுத்துக் கூறமுடியுமா என்னும் கேள்விக்கு இறையியலார் பதில் தேடியுள்ளார்கள். புனித அகுஸ்தீன், புனித அக்வீன் தோமா ஆகியோர் கருத்துகள் சிறப்புவாய்ந்தன. இப்பொருள் பற்றி "கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் கூறுவது:

"அருள் நமது சுதந்திரமான மறுமொழிக்கு முந்தியது; அதற்கு நம்மைத் தயாரிப்பது, தூண்டுவது; நமது சுதந்திரத்தின் உள்ளார்ந்த ஏக்கங்களுக்குப் பதிலளிக்கிறது; அதனை தன்னுடன் ஒத்துழைக்க அழைக்கிறது; அந்த சுதந்திரத்தை அதன் நிறைவை நோக்கி வழிநடத்துகிறது" (எண் 425).

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Our Wesleyan Theological Heritage
  2. "John Hardon, Modern Catholic Dictionary". Archived from the original on 2013-03-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-18.
  3. 'Grace', Komonchak et al (eds), Joseph A (1990). The New Dictionary of Theology. Dublin: Gill and Macmillan. p. 437. {{cite book}}: |last= has generic name (help)
  4. 4.0 4.1 Ryrie, Charles C. The Grace of God. (Chicago: Moody Press, 1963), pp. 10-11.
  5. Wisconsin Evangelical Lutheran Synod, "The means of grace"
  6. The Means of Grace
  7. What is a sacrament?
  8. John Wesley, "Sermon on the Mount—Discourse Six", III.11, quoted in "This Holy Mystery: A United Methodist Understanding of Holy Communion"[தொடர்பிழந்த இணைப்பு]
  9. 9.0 9.1 9.2 9.3 Roetzel, Calvin J., PhD. The HarperCollins Bible Dictionary, Paul J. Achtemeier, General Editor. HarperCollins, 1996. P.386-387
  10. Catechism of the Catholic Church, 1996
  11. Catechism of the Catholic Church, 1997-1999
  12. 12.0 12.1 Catholic Bishops' Conferences of England & Wales, Ireland and Scotland, One Bread One Body பரணிடப்பட்டது 2013-06-12 at the வந்தவழி இயந்திரம், p. 7
  13. George Joyce, "The Church" in The Catholic Encyclopedia
  14. Matthew Bunson, 2009 Catholic Almanac (Our Sunday Visitor 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781592764419), p. 143[தொடர்பிழந்த இணைப்பு]
  15. Richard Brennan, The Means of Grace (Benziger Brothers 1894), p. 25
  16. The sacraments "bear fruit in those who receive them with the required dispositions" (Catechism of the Catholic Church, 1131).
  17. Joint Declaration on the Doctrine of Justification, 15
  18. "Deal W. Hudson, "Grace Alone"". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.
  19. "Richard A. White, "Sola Gratia, Solo Christo: The Roman Catholic Doctrine of Justification"". Archived from the original on 2013-08-02. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.

மேல் ஆய்வுக்கு

தொகு

மரபு வழி திருச்சபை

தொகு

உரோமன் கத்தோலிக்க திருச்சபை

தொகு

புரட்டஸ்தாந்தம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_(கிறித்தவம்)&oldid=4041044" இலிருந்து மீள்விக்கப்பட்டது