ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்வதனைப் பொதுவாகப் அறிதுயில், பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால ஒடுக்கம் (hibernation) என்பார்கள். இளஞ்சூட்டுக் குருதியுடைய உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கமே இது. குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும். அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினைத் தேர்வு செய்து உடலினைச் சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும். இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது. இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக அவற்றின் தாக்கத்திற்குள்ளாகும்.

நீள் உறக்கத்தின் போது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும். இதுபோன்ற உறக்கத்தின்போது சிறுநீர் கழிப்பதில்லை. மலம் கழிப்பதில்லை.[1] உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது. உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினைக் கொண்டு வரவே இந்த செயல்பாடுள். சாதாரணமாக வெப்ப இரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாகையில் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. என். ராமதுரை (30 ஆகத்து 2017). "பூமி என்னும் சொர்க்கம் 8: நீண்ட தூக்கம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிதுயில்&oldid=3891730" இலிருந்து மீள்விக்கப்பட்டது