அறிவியல் மொழிகள்

தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக வெளியிடப்படுன்றனவோ அம்மொழிசார் மக்களுக்கு இந்த அறிவு இலகுவில் கிட்டிவிடுகின்றது. எந்த மொழிகளில் அறிவியல் ஆய்வு ஏடுகள் ஓரளவாவது வெளிவருகின்றனவோ அவற்றை அறிவியல் மொழிகள் என்றும், எதில் கூடுதலாக வெளிவருகின்றனவோ அதை அறிவியலின் மொழி என்றும் கூறலாம். அறிவியல் மொழி என்ற தரம் எந்த ஒரு மொழியின் தனிப்பட்ட தன்மையிலும் இல்லை, அதன் பயன்பாட்டில்தான் தங்கியிருக்கின்றது.

வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.

ஆங்கிலத்தின் அறிவியல் மேலாண்மை உறுதியானது. ஆனால் அது தொடர்ந்து தனிப்பெரும் அறிவியல் மொழியாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சீனம், யப்பானிய மொழி,உருசியன்,பிரேஞ்சு, அரபு,ஸ்பானிஸ்,இந்தி போன்ற மொழியினரின் அறிவியல் பங்களிப்பு கூடும் பொழுது அவர்கள் அவர்களது மொழியிலேயே கருத்து பரிமாற முயலலாம். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறையலாம். மேலும் பொறிமுறை மொழிபெயர்ப்பு விருத்தி பெறும் பொழுது மொழி இடைவெளிகள் குறையும்.

அறிவியல் மொழியாக தமிழ்

தொகு

முதன்மைக் கட்டுரை: அறிவியல் தமிழ்

தமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. இதற்கு தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுரைகளை படைப்பது இதற்கு ஒப்பானது.

இன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை.

தாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை வலு அடுக்கமைவு உண்டு. தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_மொழிகள்&oldid=2740781" இலிருந்து மீள்விக்கப்பட்டது