ஆசிரிய விருத்தம்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.

எடுத்துக்காட்டு

இதந்தரு மனையின் நீங்கி
  இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
  பழிமிகுந் திடருற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
  விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
  தொழுதிடல் மறக்கி லேனே!

பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன. கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி, பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சீறாப்புராணம் போன்ற பெருங்காப்பியங்களில் மிகப்பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே. சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன. அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை. தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே. இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளேயாகும்.

ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம்

தொகு
  • நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
  • நான்கடியும் ஒரே வகையான சந்த ஒழுங்கைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது முதலாம் அடி‘விளம் மா தேமா விளம் மா தேமா’எனும் சீர் அமைப்பைப் பெற்றிருந்தால் எஞ்சிய மூன்றடிகளும் அதே விதமான சீர் அமைப்பையே பெற்று வரவேண்டும். இதுவே சந்த ஒழுங்கு எனப்படுவது.
  • கழிநெடிலடிகள் என்பதனால் ஓர் அடியில் ஆறுசீர்களும் ஆறுக்கு மேற்பட்ட எத்தனை சீர்களும் வரலாம். ஆயினும் ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனவும்,அதற்கு மேல் வருவன சிறப்பில்லாதவை எனவும் கூறுவர்.

வகைகள்

தொகு

சீர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம், பதினான்கு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் எனப் பலவகைப்படும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தொகு

அறுசீர் அடிகள் நான்கு ஒரே எதுகைஅமைப்பில் வருவது. முதலடியின் சந்த ஒழுங்கு ஏனைய அடிகளிலும் வரும். சந்த ஒழுங்குகள் பலவகையாக அமையும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை,

  • விளம் மா தேமா விளம் மா தேமா
  • மா மா காய் மா மா காய்
  • காய் காய் காய் காய் மா தேமா

என்பன. சில இடங்களில் மாங்காய்ச்சீர் வரும்.

சான்று

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
    வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
    கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
    தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமன்றி
    வாழும் சொர்க்கம் வேறுண்டோ

[2]

மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தம் ‘மா மா காய் மா மா காய்’ எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்துள்ளது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தொகு

எழுசீரடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. எழுசீர் விருத்தச் சந்தங்களுள் சிறப்பானது ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ என்னும் சந்தமாகும். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம்.

சான்று

தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்
      தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப்
       பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
    புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
   அம்மையப் பாவினி ஆற்றேன் [3]

மேற்காட்டிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது. ‘அணைப்பள்தாய்’ என ஒரு சீர் மட்டும் புளிமாங்காய்ச்சீர். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீர் வந்துள்ளது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தொகு

எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. பாரதிதாசன் போன்றோர் எண்சீர் விருத்தத்தால் முழுக் காவியங்கள் (பாண்டியன்பரிசு) பாடியுள்ளனர். மிகுந்த பெருவழக்குடைய எண்சீர் விருத்தத்தில் இருவகைச் சந்தங்கள் சிறப்பானவை.

  • காய் காய் மா தேமா காய் காய் மா தேமா எனவருவது ஒருவகை எண்சீர் விருத்தம்.

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
     கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
     தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
     மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
     தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.

[4]


  • காய் காய் காய் மா காய் காய் காய் மா’ என வருவது மற்றொருவகை எண்சீர் விருத்தம்.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
     குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
    உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
     மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
     ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே.

[5]

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. " விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது"- (யாப்பருங்கலக் காரிகை, 30)
  2. உமர்கய்யாம் பாடல், கவிமணி
  3. திருவருட்பா, 3386
  4. பாரதிதாசன், அழகின் சிரிப்பு
  5. திருவருட்பா, 4091
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரிய_விருத்தம்&oldid=3062134" இலிருந்து மீள்விக்கப்பட்டது