அலன் ஆபிரகாம்

அலன் ஆபிரகாம் (Allen Abraham, 1865 - 9 சூலை 1922) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வானியலாளரும் ஆவார்.[1]

அலன் ஆபிரகாம்
Allen Abraham

FRAS
பிறப்புசுப்பிரமணியர் அம்பலவாணர்
1865
காரைநகர், இலங்கை
இறப்புசூலை 9, 1922 (அகவை 56–57)
இனம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிகல்விமான்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில்[2][3] கந்தப்பர் சுப்பிரமணியர், பார்வதி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய வாந்திபேதி நோயழிவில் இறந்து போனதை அடுத்து அம்பலவாணர் அவரது தந்தை வழி சகோதரர் கந்தப்பு சரவணமுத்துவின் ஆதரவில் வளர்ந்தார்.[2] கிராமப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் 1881 டிசம்பரில் தெல்லிப்பழையில் நிதியுதவிப் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்து படித்தார்.[2] அங்கு அவர் கிறித்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டு அலன் ஆபிரகாம் என்ற பெயரைப் பெற்றார்.[2] 1883 டிசம்பரில் அங்கு கல்வியை முடித்துக் கொண்ட பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை மேற்கொண்டார்.[2] 1888 இல் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.[2] 1889 இல் மெட்ராசு மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தி அடைந்தார்.[4]

சுப்பர் சங்கரப்பிள்ளை என்பவரின் மகள் முத்தாச்சி என்பவரை அலன் ஆபிரகாம் திருமணம் புரிந்தார்.[4] இவர்களுக்கு கனகசுந்தரம், அருளையா, ஜேன் நல்லம்மா, ரோஸ் ராசம்மா என நான்கு பிள்ளைகள்.[4] முத்தாச்சியின் இறப்பின் பின்னர் தையமுத்து பொன்னையா என்பவரை மறுமணம் புரிந்தார்[4].

யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்கும் போது அங்கு அவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.[2] பட்டப் படிப்பின் பின்னர் தெல்லிப்பழை பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4] 1891 இல் மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4]

1893 ஆம் ஆண்டில் ஆபிரகாம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் First Arts சோதனை எடுத்துச் சித்தியடைந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து ஆங்கிலம், மெய்யியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4][5] அதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4] அங்கு அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் எஃப்.ஏ, பி.ஏ சோதனைகளை எடுக்கும் மாணவர்களுக்குக் கணிதமும், வானியலும் படிப்பித்தார்.[4] 1914 இல் கல்லூரி அதிபர் வண. பிரவுண் பதவியில் இருந்து இளைப்பாறியதை அடுத்து ஆபிரகாமும் தனது பதவியைத் துறந்தார்.[6] பின்னர் வண. பின்னெல் என்பவர் அதிபராகப் பதவியேற்ற போது மீண்டும் கல்லூரியில் இணைந்தார்.[6]

வானியலில் ஆர்வம்

தொகு

ஆபிரகாம் தனது வாழ்நாள் முழுவதும் வானியலில் ஆர்வம் காட்டி வந்தார்.[4] மோர்னிங் ஸ்டார், மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி ரோயல் வானியல் கழக இதழ்களில் வானியல் குறித்துக் கட்டுரைகள் எழுதி வந்தார்.[4] ஏலியின் வால்வெள்ளி 1910 மே 19 காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பூமிக்குக் கிட்டவாக வரும் என்பதை அவர் முன்கூட்டியே துல்லியமாக கணித்தார். அத்துடன் அது பூமியைத் தாக்காது என்றும், வெள்ளிக் கோளின் சுற்றுப் பாதைக்குள் சென்று விடும் என்றும் கணித்தார்.[4][3][7] அவரது ஆய்வுகளுக்காக ஏ. வி. ஜக்கா ரோவ் என்பவரின் பரிந்துரையின் பேரில் 1912 சனவரி 12 இல் ரோயல் வானியல் கழகத்தின் ஆய்வாளராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][7][8][9] வானியல் கழகத்திற்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆய்வாளர் இவரே.[5][10]

சமூகப் பணிகள்

தொகு

வானியலைத் தவிர்த்து இசை, தமிழ் இலக்கியம், வேளாண்மை, சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டினார்.[4] இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணக் கோவில்களில் இன்றும் படிக்கப்படுகின்றன.[4] 1915 முதல் 1922 இல் இறக்கும் வரை தென்னிந்திய திருச்சபைகளின் ஒன்றியத்தின் யாழ்ப்பாணப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றினார்.[11] 1897 முதல் 1909 வரை உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.[11]

மறைவு

தொகு

ஆபிரகாம் 1922 சூன் மாதத்தில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1922 சூலை 9 இல் காலமானார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 1.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Jaffna College 1985, ப. 7.
  3. 3.0 3.1 Puvanendran, K. (2013). The Curious Adventures of a Doctor from Jaffna: From Old World Charm to Majulah Singapura. Editions Didier Millet. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4385-67-1.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 Jaffna College 1985, ப. 8.
  5. 5.0 5.1 5.2 Jaffna College 1985, ப. 1.
  6. 6.0 6.1 Jaffna College 1985, ப. 9.
  7. 7.0 7.1 Pathiravitana, S. (27 ஆகத்து 2005). "Ceylankan - a melange of many minds". டெய்லிநியூஸ். http://archives.dailynews.lk/2005/08/27/fea09.htm. 
  8. "Society Business: Fellows elected; Meetings of the Royal Astronomical Society, Ordinary; Candidates proposed". Monthly Notices of the Royal Astronomical Society LXXII (1): 1. 10 நவம்பர் 1911. http://adsabs.harvard.edu/full/1911MNRAS..72....1.. 
  9. "Society Business: Fellows elected; Meetings of the Royal Astronomical Society, Ordinary; Candidates proposed". Monthly Notices of the Royal Astronomical Society LXXII (3): 12. 12 சனவரி 1912. http://mnras.oxfordjournals.org/content/72/3/169.full.pdf+html. 
  10. Martyn, John H. (1923). Notes on Jaffna – Chronological, Historical, Biographical (PDF). தெல்லிப்பழை: அமெரிக்க இலங்கை மிசன். p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
  11. 11.0 11.1 Jaffna College 1985, ப. 3.
  12. Jaffna College 1985, ப. 10.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_ஆபிரகாம்&oldid=3327594" இலிருந்து மீள்விக்கப்பட்டது