அலிகார் அறிவியல் சங்கம்

அலிகார் அறிவியல் சங்கம் (Scientific Society of Aligarh) என்பது 1864 ஆம் ஆண்டு சையது அகமது கானால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.[1] 1862 ஆம் ஆண்டில், சையத் ஒரு மொழி பெயர்ப்பு சங்கத்தை உருவாக்கியிருந்தார். இச்சங்கம் ஆங்கிலம் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் இருக்கும் அறிவியல் படைப்புகளை உருது மற்றும் இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியை செய்து கொண்டிருந்தது[2]. இச்சங்கமே பின்னாளில் அலிகார் அறிவியல் சங்கமாக மாறியது.[3][4] இந்தியாவிலுள்ள இசுலாம் சமூகத்தினரிடம் தாராளமய நவீன கல்வி மற்றும் மேற்கத்திய அறிவியல் அறிவு ஆகியனவற்றைப் புகுத்துவது இச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது.

சூரியக் குடும்பம், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை, மனித பரிணாம வளர்ச்சி போன்ற அறிவியல் தொடர்பான தலைப்புகளில் சையது கான் பல கட்டுரைகளை எழுதினார். சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை அகற்ற பல்வேறு முறைகளிலும் பாலம் அமைக்க சையது முயற்சி மேற்கொண்டார்.

இந்துமதத்தைச் சார்ந்த இவருடைய இணை செய் கிசான்தாசு 1867 ஆம் ஆண்டு முதல் 1874 ஆம் ஆண்டு வரை இச்சங்கத்தின் செயலாளராக சேவையாற்றினார்.[2][5][6]

அலிகார் அறிவியல் சங்கத்திற்கென்று சொந்தமாக ஒரு நூலகமும் படிப்பகமும் இருந்தது. நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை பல்வேறு இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டுப் பெருமக்களும் நன்கொடையாக வழங்கினர். சையது அகமது கானும் தன்னுடைய செலவில் ஏராளாமான புத்தகங்களை நூலகத்திற்காக நன்கொடையாக அளித்துள்ளார். 1866 ஆம் ஆண்டிலேயே இந்நூலகத்தில் 44 வகையான இதழ்களும் பத்திரிகைகளும் வரவழைக்கப்பட்டன. அவற்றில் 18 இதழ்கள் ஆங்கிலத்திலும் மற்றவை உருது, பெர்சியன், அரபிக் மற்றும் சமசுகிருதம் ஆகிய மொழிகளிலும் இருந்தன. சங்கத்தின் வெளியிடூகளை இதே நோக்கத்துடன் லாகூரில் பண்டிட் அர்சோக் ராய் உருவாக்கிய பயனுள்ள அறிவைப் பரப்பும் சங்கம் மற்றும் கொல்கத்தாவில் மௌல்வி அப்துல் லத்தீப்கான் தொடங்கிய முகமதியன் நூலகச் சங்கம் ஆகிய சங்கங்களுடன் பரிமாற்றம் செய்து கொண்டது. இச்சங்கங்கள் தவிர மேலும், கொல்கத்தாவில் செயல்பட்ட வங்காள ஆசிய சங்கத்துடனும் இச்சங்கத்தின் வெளியீடுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Arnold P. Kaminsky, Roger D. Long (2011). India Today: An Encyclopedia of Life in the Republic Vol 1. ABC-CLIO. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313374630.
  2. 2.0 2.1 "Remembering Sir Syed Ahmed Khan, the great educationist and secular nationalist". India TV News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  3. Om Prakash Sharma (1962). Trends in Scientific Terminology. National Bureau of Educational Publications.
  4. Hafeez Malik (1993). Political Profile of Sir Sayyid Ahmad Khan: A Documentary Record. Adam Publishers. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174351029.
  5. Dildār ʻAlī Farmān Fatiḥpūrī; Dild−ar ʻAl−i Farm−an Fatiḥp−ur−i (1987). Pakistan movement and Hindi-Urdu conflict. Sang-e-Meel Publications.
  6. Muhammad Moj (1 March 2015). The Deoband Madrassah Movement: Countercultural Trends and Tendencies. Anthem Press. pp. 47–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78308-388-6.
  7. . http://nptel.ac.in/courses/109103024/pdf/module5/SM%20Lec%2026.pdf. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்_அறிவியல்_சங்கம்&oldid=3736961" இலிருந்து மீள்விக்கப்பட்டது