அல்கைலேற்றம்

அல்கைலேற்றம் (Alkylation) என்பது அல்கைல் தொகுதியானது ஒரு மூலக்கூற்றிலிருந்து மற்றொரு மூலக்கூற்றுக்கு மாற்றமடையும் செயல்முறையாகும். அல்கைல் தொகுதியானது கார்பன்நேரயனியாகவோ, மூலிகமாகவோ, கார்பன்எதிரயனியாகவோ அல்லது ஒரு காபீனாகவோ (அல்லது சமானமான வேறு ஏதாவது வடிவிலோ) இடம் மாற்றப்படலாம்.[1] அல்கைல் தொகுதியானது ஒரு மூலக்கூறொன்றின் பகுதியாக, CnH2n+1,என்ற பொதுவான மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடையதாகவும் உள்ளதாகும். இதில் n என்ற முழு எண் மூலக்கூற்றோடு எத்தனை கார்பன் அணுக்கள் இணைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு மெதில் தொகுதியானது (n = 1, CH3) என்ற அளவிலான மெத்தேன் மூலக்கூற்றின் (CH4) பகுதியாக உள்ளது. அல்கைலேற்ற காரணிகள் தெரிவு செய்யப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அல்கைலேற்றத்தை தேவையான அலிபாட்டிக் கார்பன் சங்கிலியை முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கரியணுத்தொடரைக் கொண்ட தொடக்க மூலக்கூற்றுடன் சேர்ப்பதால் நிகழ்த்தப்படுகிறது. இது நன்கறியப்பட்ட வேதித்தொகுப்பு முறைகளுள் ஒன்றாகும். அல்கைல் நீக்க வினைகள் என்று அறியப்படும் செயல்முறைகளின் மூலம் அல்கைல் தொகுதிகள் ஒரு மூலக்கூற்றிலிருந்து நீக்கப்படவும் கூடும். அல்கைலேற்றக் காரணிகள் பெரும்பாலும் அவற்றின் கருக்கவர் அல்லது இலத்திரன்கவர் பண்புகளினடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைப் பொறுத்தவரை அல்கைலேற்றம் என்பது ஆல்க்கீன்களுடனான ஐசோபியூட்டேனின் குறிப்பிட்ட அல்கைலேற்றமேயாகும். கல் நெய் அல்லது பெட்ரோலியத்தை மேம்படுத்தும் நோக்கில் அல்கைலேற்றமானது பெட்ரோலியத்திற்கான முதல்தரமான கலவை மூலப்பொருளை உற்பத்தி செய்து தருகிறது.[2]

மருத்துவத்துறையில், புற்றுநோய் செல்களைச் சிதைக்கப் பயன்படும் வேதிச்சிகிச்சையில் டி. என். ஏ -இன் அல்கைலேற்றம் பயன்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்கள் என்றழைக்கப்படும் மருந்து வகைப் பொருட்களால் அல்கைலேற்றமானது நிறைவேற்றப்படுகிறது.

எத்திலீன் மற்றும் ZSM-5 போன்ற பலபடித்தான வினைவேகமாற்றியுடன் பென்சீன் அல்கைலேற்றம் செய்யப்படும் வகைமாதிரி வழிமுறை

கருக்கவர் அல்கைலேற்ற காரணிகள்

தொகு

கருக்கவர் அல்கைலேற்ற காரணிகள் அல்கைல் எதிரயனிக்குச் (கார்பன்எதிரயனி) சமானமான வேலையைச் செய்கிறது. உதாரணங்களில், கரிம உலோகச் சேர்மங்களான கிரின்யார்டு காரணிகள், கரிம மக்னீசியம், கரிம லித்தியம், கரிம தாமிரம் மற்றும் கரிம சோடியம் சேர்மங்கள் ஆகியவை அடங்கும்.  இத்தகைய சேர்மங்கள் கார்போனைல் தொகுதியில் உள்ள இலத்திரன்-பற்றாக்குறையுடைய கார்பன் அணுவோடு சேர முடியும். கருக்கவர் அல்கைலேற்றக் காரணிகளால், கார்பன் அணுக்களோடு உள்ள ஆலைடு பதிலிகளையும் இடப்பெயர்ச்சி செய்ய முடியும். வினைவேகமாற்றிகளின் முன்னிலையில், இவை, மேலும், சுசுகி இணைப்பு வினைகளால் முன்னுதாரணமாய் விளங்குகின்ற வினைகளைப் போன்று, அல்கைல் மற்றும் அரைல் ஆலைடுகளையும் அல்கைலேற்றம் செய்கின்றன.

 
அரைல் ஆலைடின் ஆக்சிசனேற்ற சேர்க்கை மற்றும் அதைத் தொடர்ந்த கருக்கவர் அல்கைலேற்ற வினை இரண்டையுமே பயன்படுத்திக்கொள்ளும் குமாடா இணைப்பு வினை (L = ஈந்தணைவி, Ar = அரைல்).

மேற்கோள்கள்

தொகு
  1. March Jerry; (1985). Advanced Organic Chemistry reactions, mechanisms and structure (3rd ed.). New York: John Wiley & Sons, inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  2. Stefanidakis, G.; Gwyn, J.E. (1993). "Alkylation". In John J. McKetta (ed.). Chemical Processing Handbook. CRC Press. pp. 80–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8701-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கைலேற்றம்&oldid=2749732" இலிருந்து மீள்விக்கப்பட்டது