மைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ் (MITS) நிறுவனத்தின் அல்டைர் 8800 (Altair 8800) 1975ஆம் ஆண்டில் இன்டெல் 8080 மையச் செயற்பகுதியை அடித்தளமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நுண்கணிப்பொறி. சனவரி 1975இல் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் முகப்பில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டதால் இதில் மிகுந்த ஆர்வம் எழுந்தது. மேலும் பல பொழுதுபோக்கு மின்னணுவியல் தொழில்முறை இதழ்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. தாமே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கலப்பெட்டிகளை வடிவமைப்பாளர்கள் மின்னணுவியல் ஆர்வலர்களுக்கு விற்க முற்பட்டனர். நூறு கலப்பெட்டிகளை விற்றாலே பெரிது என்று எண்ணியிருந்த காலத்தில் முதல் மாதத்திலேயே ஆயிரக் கணக்கான கலப்பெட்டிகளுக்கு எழுந்த தேவை வடிவமைப்பாளர்களை மலைக்கச்செய்தது.[1] மேலும் கணினித் தேவைப்பட்ட தனிநபர்களும் வணிக நிறுவனங்களும் தயார்நிலை கணினிகளை வாங்கினர்.[2] நுண்கணிப்பொறி புரட்சிக்கான வித்தை அல்டைர் இட்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[3] அல்டைரில் வடிவமைக்கப்பட்ட தரவுப் பாட்டை நடைமுறைப்படி சீர்தரமாக எஸ்-100 பாட்டை (S-100 Bus) என உருவாகியது. இதன் முதல் கணிமொழியாக மைக்ரோசாப்ட்டின் துவக்கநிலை மென்பொருளான, அல்டைர் பேசிக் பயன்படுத்தப்பட்டது.[4][5]

8 அங் நெகிழ் வட்டு அமைப்புடன் கூடிய அல்டைர் 8800 கணினி
அல்டைர் 8800 கணினியுடன் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் சனவரி, 1975 அட்டை

வரலாறு தொகு

 
இந்த மாதிரி ஏவூர்திகளின் தடங்காட்டி விளக்கு (Tracking Light for Model Rockets) மாதிரி ஏவூர்தியியல் மாத இதழின் செப்டம்பர் 1969 பதிப்பில் வெளிவந்தது; அதுவே மிட்ஸ் (MITS) நிறுவனம் விற்ற முதல் கலப்பெட்டியுமாம்.

எட்வர்டு ராபர்ட்ஸும் ஃபோரெஸ்ட் மிம்ஸும் அமெரிக்க விமானப்படையின் கர்ட்லாந்து விமானதளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களுடைய மின்னணுவியல் பின்புலத்தைப் பயன்படுத்தி ஏவூர்தி ஆர்வலர்களுக்குச் சிறு கலப்பெட்டிகளைத் தயாரிக்கத் தீர்மானித்தார்கள். 1969 இல் ராபர்ட்ஸும் மிம்ஸும் சேர்ந்து ஸ்டான் கேகிள், ராபர்ட் ஃசாலர் என்ற கூட்டாளிகளோடு சேர்ந்து மைக்ரோ இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம்ஸ் (MITS) நிறுவனத்தை ஆல்புகெர்க்கி_(நியூ_மெக்சிகோ)யில் இருந்த ராபர்ட்ஸின் வண்டிக் கொட்டகையில் (vehicle garage) நிறுவி, மாதிரி ஏவூர்திக்கான அலைபரப்பியையும் (radio transmitter) அளவைக்கருவிகளையும் (instruments) செய்து விற்கத் தொடங்கினார்கள்.

கணிப்பான்கள் தொகு

மாதிரி ஏவூர்திக் கலப்பெட்டிகள் சுமாராக விற்றன. மிட்ஸ் நிறுவனம் ஆர்வலர்களுக்குப் பிடிக்கக்கூடிய இன்னொரு கலப்பெட்டியை விற்க எத்தனித்தது. நவம்பர் 1970 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழில் மிட்ஸ் நிறுவனம் எல்.இ.டி. LED ஒளிக்கற்றையூடாகக் குரலை அனுப்பும் நுட்பம் கொண்ட ஆப்டிகாம் என்ற கலப்பெட்டி பற்றிய விவரங்களைச் சிறப்பாகக் காட்டியது. மிம்ஸுக்கும் கேகிளுக்கும் கலப்பெட்டி வணிகத்தின் மீதிருந்த விருப்பம் தணியவே ராபர்ட்ஸ் அவரது கூட்டாளிகளின் பங்கைத் தாமே வாங்கிக் கொண்டார். பிறகு கணிப்பான் கலப்பெட்டிகளைப் படைக்கத் தொடங்கினார்.

எலெக்ட்ரானிக் அர்ரேஸ் நிறுவனம் வெளியிட்ட நான்கு கணக்கு (+,-,×,÷ functions) தொகுசுற்றுச் சில்லுகள் (Integrated Circuit chips) மிட்ஸ் 816 கணிப்பானுக்கு வித்திட்டன. அதை பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் நவம்பர் 1971 பதிப்பு அட்டைப்படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியது. [6]

அதன் வெற்றியைத் தொடர்ந்து மிட்ஸ் பல மேம்படுத்திய கணிப்பான் மாதிரிகளை வெளியிட்டது. மிட்ஸ் 1440 கணிப்பானை ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஜூலை 1973 பதிப்பு சிறப்பாகக் காட்சிப்படுத்தியது. படிபடியாகக் கணிப்பான்களுக்கு ஆற்றலைக் கூட்டிய மிட்ஸ் நிறுவனம் கணிப்பான்களுக்கு 256 சிற்றடிகள் கொண்ட நிரலெழுதும் வசதியையும் அறிமுகப்படுத்தியது. [7]

சோதனைக் கருவிகள் தொகு

கணிப்பான்களை மட்டுமல்லாமல் மிட்ஸ் நிறுவனம் வரிசையாகச் சோதனைக்கருவிக் கலப்பெட்டிகள் பலவற்றையும் செய்தது. வாடிக்கையாளர்களின் தேவையைச் சமாளிக்க மிட்ஸ் நிறுவனம் ஒரு பெரிய கட்டடத்துக்குக் குடிபுகுந்தது. பல விலையுயர்ந்த கருவிகளையும் வாங்கிப் புது இடத்தில் நிறுவியது. ஆனால், 1972 இல் டெக்சஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் தானே ஒரு கணிப்பான் சில்லைப் படைத்தது மட்டுமல்லாமல் முழுக் கணிப்பான்களை ஏனைய போட்டியாளர்களின் கணிப்பான்களின் விலையில் பாதிக்கும் குறைவாக விற்கத் தொடங்கியது. மிட்ஸ் நிறுவனமும் மற்ற போட்டி நிறுவனங்களும் இதனால் நிலைகுலைந்து போயின. மிட்ஸ் நிறுவனம் கால் மில்லியன் டாலர் கடன்சுமையைச் சமாளிக்கத் திணறினார்.

பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் தொகு

 
ஜனவரி 1975 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அல்டைர் 8800 கணினியுடன். நவம்பர் 29, 1974 பதிப்பு.

ஜனவரி 1972இல் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் மாத இதழ் எலெக்ட்ரானிக்ஸ் வோர்ல்டு என்னும் இன்னொரு ஃசிப்-டேவிஸ் மாத இதழோடு ஒன்றியது. ஆசிரியர் குழு மாற்றத்தால் வருந்திய கட்டுரையாளர்கள் பலர் அதற்குப் போட்டி மாத இதழான ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் என்ற இதழுக்கு எழுதத் தொடங்கினார்கள். 1972, 1973 இல் பல சிறந்த கலப்பெட்டிக் கட்டுமானத் திட்டங்கள் ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழில் வந்தன.

1974 இல் ஆர்ட் சால்ஸ்பெர்க் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஆசிரியரானார். மின்னணுக் கட்டுத்திட்டங்களில் (electronic construction projects) மீண்டும் முன்னணி வகிக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள். அவர் டான் லன்காஸ்டரின் தொலைக்காட்சித் தட்டச்சுக்கருவி (ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ், செப்டம்பர் 1973) கட்டுரையைப் படித்து அசந்து போன அவர் தனது பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழுக்கும் கணினிக் கட்டுத்திட்டங்கள் (computer construction projects) வேண்டுமென்று விரும்பினார். ஏப்ரல் 1974 பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழில் டான் லன்காஸ்டர் ஒரு ஆஸ்கி (ASCII) விசைப்பலகைத் திட்டத்தை விவரித்தார்.

அடுத்து ரேடியோ-எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஜூலை 1974 பதிப்பில் ஜானத்தன் டைடஸ் மார்க்-8 8008 அடிப்படையில் உருவாக்கிய கணினியை அட்டைப்படத்தில் சிறப்பித்துக் காட்டியது. இன்டெல் 8008 ஐ விட மேம்பட்ட இன்டெல் 8080 இன் அடிப்படையில் ஒரு கணினியைப் படைக்க மிட்ஸ் ஈடுபட்டிருந்தது என்று அறிந்திருந்த பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் ஆசிரியர்களில் ஒருவரான லெஸ் சாலமன், அதன் ஜனவரி 1975 அட்டைப்படச் சிறப்புத்திட்டத்துக்கு அதுதான் சரியாக இருக்கும் என்று கருதினார். அவர்களுடைய தொலைக்காட்சித் தட்டச்சுக்கருவியையோ மார்க்-8 கணினியையோ கட்டுமானம் செய்ய ஆர்வலர்கள் திணறிக் கொண்டிருந்தார்கள். எல்லா உதிரிப்பாகங்களையும் வாங்கிச் சரியாகக் கட்டமைத்து அவற்றை வேலை செய்ய வைப்பதற்கு மிகக்கடுமையான முயற்சி தேவைப்பட்டது. அதனால் தங்கள் அடுத்த திட்டத்துக்குத் தொழில்முறை நேர்த்தியுடன் கூடிய பெட்டியிலுள்ள கலப்பெட்டி வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைத்தார்கள். [8]

எட்வர்டு ராபர்ட்ஸும் அவரது தலைமைப் பொறியாளர் பில் யேட்ஸும் தங்கள் கணினியின் முன்மாதிரிப் பெட்டியை அக்டோபர் 1974 இல் நிறைவு செய்து நியூ யார்கில் இருந்த பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அலுவலகத்துக்குத் தொடர்வண்டி விரைவுப்பொதி மூலம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், சரக்கக நிறுவனத்தில் வேலைநிறுத்தம் நடந்ததால் அவர்கள் அனுப்பிய பொதி பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அலுவலகத்துக்கு வந்து சேரவில்லை. அந்தக் கணினியின் பலவேறு நிழற்படங்கள் பத்திரிக்கை ஆசிரியர் சாலமனிடம் ஏற்கனவே இருந்ததால் அவற்றை வைத்தே அவர்கள் அட்டைப்படக் கட்டுரையை எழுதத் தொடங்கினார்கள். தன்னிடமிருந்த ஒரே முன்மாதிரியை இழந்த ராபர்ட்ஸ் இன்னொரு முன்மாதிரிப் பெட்டியைக் கட்டத் தொடங்கினார். இதழின் அட்டையிலிருந்த கணினி வெறும் குமிழ்களும் விளக்குகளும் கொண்ட வெற்றுப் பெட்டிதான். முழுநிறைவு பெற்ற அல்டைர் கணினி இதழின் அட்டைப்படத்திலிருந்த கணினியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுற்றுப்பலகை தளவமைப்பைக் (circuit board layout) கொண்டிருந்தது. [9] பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் ஜனவரி 1975 பதிப்பு ஒரு வாரத்துக்கு முன்பே 1974 கிறிஸ்துமஸ் சமயத்தில் செய்தித்தாள் கடைகளில் வந்திருந்தது. விற்பதற்குப் போதிய பெட்டிகள் இல்லாவிட்டாலும் அல்டைர் 8800 கணினிக் கலப்பெட்டியும் அப்போதே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. [10]

பெயர்க்காரணம் தொகு

மிட்ஸ் நிறுவனத்தின் வழக்கமான படைப்புகள் "மாடல் 1440 கால்குலேட்டர்" அல்லது "மாடல் 1600 டிஜிட்டல் வோல்ட்மீட்டர்" என்பது போன்ற பொதுப்படையான பெயர்களைத்தான் கொண்டிருந்தன. தனது புதிய படைப்பை வடிவமைப்பதில் முனைப்பாக இருந்த எட் ராபர்ட்ஸ் தன் கணினிக்குப் பெயர் வைக்கும் பொறுப்பை பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் இதழின் ஆசிரியர் குழுவிடமே விட்டிருந்தார். இதற்கும் பெயரை PE-8 (பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் - 8 பிட்டு) என்ற பெயரை வைக்கலாமா என்று நினைத்த ஆசிரியர் குழு, அது மிகவும் சலிப்பூட்டும் பெயர் என்று அதைக் கைவிட்டுவிட்டு, ஒரு தனிக்கணினியைப் படைப்பது ஒரு நட்சத்திர நிகழ்வு என்று கருதி விண்ணில் ஒளிரும் வெளிச்சமான தாரகைகளில் 12 வது இடத்திலிருக்கும் "அல்டைர்" நட்சத்திரத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள். [8][11]

மென்பொருள் தொகு

அல்டைர் பேசிக் (Altair BASIC) தொகு

ஒரு நாள் எட் ராபர்ட்ஸுக்கு உங்கள் கணினிக்கு பேசிக் கணிமொழி BASIC programming language வாங்க விருப்பமா என்று ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால் அழைப்பு ஒரு தனியார் வீட்டுக்குச் சென்றது. அங்கே யாருக்கும் பேசிக் கணிமொழி பற்றி ஏதும் தெரியவில்லை. உண்மையில் அந்தக் கடிதத்தை அனுப்பியவர்கள் பில் கேட்ஸும் Bill Gates பால் ஆலனும் Paul Allen. உண்மையில் அவர்களிடமும் அப்போது பேசிக் கணிமொழி ஏதுமில்லை. தாங்கள் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து மிட்ஸின் ராபர்ட்ஸை அவர்கள் அழைத்துப் பேசியபோது ராபர்ட்ஸ் விருப்பம் தெரிவித்தார். அப்போதுதான் பேசிக் கணிமொழியை உருவாக்கத் தொடங்கினார்கள். ஒரு மாதத்துக்குள் முடிக்காவிட்டால் வேறு யாராவது அதை முடித்து விடுவார்கள் என்று சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்களிடம் அல்டைர் கணினி இல்லாவிட்டாலும், அதன் இன்டெல் 8080 மையச்செயற்பகுதியைத் தம் பிடிபி-10 சிறுகணினியில் நிகர்நிலைச் செயலியை வடித்து அதில் தங்கள் பேசிக் கணிமொழியை ஓட வைத்தார்கள். ஓரளவுக்கு அது வேலை செய்யத் தொடங்கியதும் ஆலன் ஆல்புகெர்க்கி_(நியூ_மெக்சிகோ)க்குப் பறந்து சென்று ஒரு காகிதச் சுருளில் பதிவு செய்த பேசிக் கணிமொழியைக் கொடுத்தார். அதில் 2+2 கணக்கைச் செய்து காட்டினார். லூனர் லேண்டர் 'Lunar Lander விளையாட்டையும் ஆடிக் காட்டினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பில் கேட்ஸும் ஹார்வர்ட் பல்கலையில் படிப்பதை நிறுத்தித் தம் கூட்டாளியான பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். பின்னால் அது இன்டெல் சில்லுகளுக்கு மென்பொருள் எழுதி உலகின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமாக உயர்ந்தது வரலாறு.

அல்டைர் வட்டு இயங்குதளம் (Altair DOS) தொகு

1975 இன் இறுதியில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்டு 1977 இல் விற்பனைக்கு வந்தது.

மேற்சான்றுகள் தொகு

 1. Newscientist Sept 21 gallery: March of the outdated machines
 2. Young, Jeffrey S. (1998). Forbes Greatest Technology Stories: Inspiring Tales of the Entrepreneurs. New York: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-24374-4. https://archive.org/details/forbesgreatestte00youn.  Chapter 6 "Mechanics: Kits & Microcomputers"
 3. Garland, Harry (March 1977). "Design Innovations in Personal Computers". Computer (IEEE Computer Society) 10 (3): 24. http://www.computer.org/csdl/mags/co/1977/03/01646402-abs.html. "There is little question that the current enthusiasm in personal computing was catalyzed by the introduction of the MITS Altair computer kit in January 1975.". 
 4. Ceruzzi, Paul E. (2003). A History of Modern Computing. Cambridge, MA: MIT Press. பக். 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-262-53203-4. https://archive.org/details/historyofmodernc00ceru_0.  "This announcement [Altair 8800] ranks with IBM's announcement of the System/360 a decade earlier as one of the most significant in the history of computing."
 5. Paul Freiberger; Michael Swaine (author) (2000). Fire in the Valley: The Making of the Personal Computer. New York, NY: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-135892-7. https://archive.org/details/fireinvalleymaki00frei. 
 6. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 7. Ed Roberts (computer engineer) (1974). Forrest M. Mims. ed. Electronic Calculators. Howard W. Sams. பக். 128–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-672-21039-8. 
 8. 8.0 8.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 9. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
 10. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value). "The break through in low-cost microprocessors occurred just before Christmas 1974, when the January issue of Popular Electronics reached readers … "
 11. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value). Salsberg states that the Altair was named by John McVeigh
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டைர்_8800&oldid=3585983" இருந்து மீள்விக்கப்பட்டது