அளவி

கண்ணாடி ஆய்வுக்கூட கருவி

அளவி (burette) என்பது, கண்ணாடியால் செய்யப்பட்ட ஆய்வுகூடக் கருவிகளில் ஒன்று. நீண்ட குழாய் வடிவமான இதன் ஒரு முனை திறந்தும், கூம்பிச் செல்லும் மறுமுனை நீர்மங்கள் (திரவம்) குறைந்த அளவில் வெளியேறக்கூடியதாக குறுகிய துளை ஒன்றைக் கொண்டிருக்கும். இத் துளைவழியூடாக வெளியேறும் நீர்மத்தின் அளவைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இத் துளையைத் திறந்து மூடக்கூடிய ஏற்பாடு உள்ளது. இதன் உடற்பகுதியில் அளவுக் குறிகள் இடப்பட்டிருக்கும். இந்த அளவீடுகள் அளவியின் உள்ளே வைக்கப்படுகின்ற நீர்மத்தின் கன அளவைக் குறிக்கும். இதைப் பயன்படுத்தும்போது, குறுகலான துளை கீழிருக்கும்படி நிலைக்குத்தாகத் தாங்கியொன்றில் பொருத்தப்படுகின்றது. இந்த நிலையில், மேலே பூச்சியத்தில் தொடங்கி கீழ்நோக்கி அதிகரித்துச் செல்லும் வகையிலேயே அளவிடப்படுகின்றன. இதனால், நீர்மம் வெளியேறும் போது வெளியேறும் அளவை நேரடியாகவே அறியமுடிகின்றது. உயர்தரமான அளவிகள், நீர்ம வெளியேற்றத்தை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்த வல்லன. "A" வகுப்பைச் சேர்ந்த அளவிகள் ±0.05 அளவுக்குத் துல்லியம் கொண்டவை.

அளவி

பயன்பாடு

தொகு

அளவிகள், சோதனைகளின் போதோ அல்லது வேறு தேவைகளுக்கோ, துல்லியமான அளவில் நீர்மங்களை அளந்து எடுக்க வேண்டியிருக்கும் போது பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கரைசல்களின் வலுவறிதல் (titration) சோதனைகளில், அளவியின் பங்கு இன்றியமையாதது.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவி&oldid=3502670" இலிருந்து மீள்விக்கப்பட்டது