அ. சந்திரசேகர பண்டிதர்

மொழிபெயர்ப்பாளர்

அ. சந்திரசேகர பண்டிதர் (இறப்பு: அக்டோபர் 26, 1879) மானிப்பாய் அகராதியைத் தொகுத்து வெளியிட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர்களிடம் பணியாற்றி நதானியேல் என்ற பெயரைப் பெற்று கிறித்தவரானார். வண. ஸ்பால்டிங் என்பவருக்கு ஆசிரியராக இருந்து, பல நூல்களை மொழிபெயர்த்தும், இயற்றியும் உள்ளார். நல்லூரில் வாழ்ந்த வண. ஜெ. நைட் என்பவர் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்று எழுதிய போது அவருக்கு உதவியிருந்தார்.[1] விவிலிய நூல் மொழிபெயர்ப்புக்காக ஸ்பால்டிங்கு பாதிரியார், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோருடன் 1848 ஆம் ஆண்டில் சென்னை சென்றார்.[1]

மானிப்பாய் அச்சியந்திரசாலையில் மதப்போதகர்கள் அச்சிட்ட பல கிறித்தவ வேத மொழிபெயர்ப்புகளுக்கு இவர் பல வகைகளிலும் உதவியுள்ளார்.[1]

மானிப்பாய் அகராதி

தொகு

சந்திரசேகர பண்டிதர் மானிப்பாய் அகராதி என்ற பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இது The Manual Dictionary of the Tamil Lanuage என்ற பெயருடன் ஸ்பால்டிங் பாதிரியாரால் 1942 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.[1] இது யாழ்ப்பாண அகராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் வழங்கப்பட்டது. இவ்வகராதியில் 58,500 பதிவுகள் இடம்பெற்றுள்ளன.[2] இவ்வகராதியின் தொகுப்பில் இருபாலை சேனாதிராச முதலியார், நவாலி வி. வைரமுத்துப்பிள்ளை ஆகியோரும் உதவியுள்ளனர்.[1] தமிழ் அகராதிகளில் இதுவே முதலாவது பெரிய அகராதியாகும்.[3]

குடும்பம்

தொகு

சந்திரசேகர பண்டிதரின் மூத்த மகன் உவைமன் நதானியேல் சுவாமிநாதர் பாம்பனில் மருத்துவராகவும், மற்றுமொரு மகன் தில்லையம்பலம் நதானியேல் உவெசுலிய மிசன் பாடசாலை ஆசிரியராகவும், இளையவர் அம்பலவாணர் நதானியேல் யாழ்ப்பாணம் காவல்துறை நீதிமன்றத்திலும் பணியாற்றினர்.[1] சந்திரசேகரப் பண்டிதர் 1879 அக்டோபர் 26 இல் தனது 79வது அகவையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சதாசிவம்பிள்ளை, அ (1979) [1800கள்]. பூலோகசிங்கம், பொன். (ed.). பாவலர் சரித்திர தீபகம் பகுதி 2. கொழும்புத் தமிழ்ச் சங்கம். pp. 164–165.
  2. "யாழ்ப்பாண அகராதி". Archived from the original on 2015-01-01. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2015.
  3. முனைவர் ஆ. மணி. "இலக்கணம் -நிகண்டு - அகராதிகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2015.
  4. மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சந்திரசேகர_பண்டிதர்&oldid=4112689" இலிருந்து மீள்விக்கப்பட்டது