அ. ஸ்டீபன்
அ. ஸ்டீபன் (A. Stephen) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரியாகவும், பொருள் அறிவியல் துறையின் பொறுப்புத் துறை தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ரூசா 2.0 என்ற தொழில் முனைவு மற்றும் தொழில் மையத் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.[1]
அ. ஸ்டீபன் A. Stephen | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, கூத்தலூர் சிவகங்கை மாவட்டம். |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியலாளர், |
பணியிடங்கள் | சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை |
கல்வி கற்ற இடங்கள் | கூத்தலூர், புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை-தே பிரித்தோ மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி. |
விருதுகள் | தமிழ்நாடு விஞ்ஞானி விருது, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பகுப்பாய்வின் படியான இயற்பியல் விருது. |
துணைவர் | முனைவர் ஷோபா |
பிள்ளைகள் | டெசி அர்வின், ஜெனிஷா கிறிஷ் |
ஆய்விதழ்களுக்கு மதிப்பாய்வாளராகப் பணியாற்றும் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் பன்னாட்டு இதழ்களில் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கை பெற்று காந்த மற்றும் ஒளிச்சேர்க்கை நானோதுகள்கள் பற்றிய ஆய்வு, ஒளியூக்கி மற்றும் மின்வேதியியல் பயோசென்சர்களுக்கான நானோகம்போசைட்டுகள் பற்றிய ஆய்வு, சுற்றுச்சூழல் கதிரியக்கம் தொடர்பான ஆய்வு, சுயக்கட்டுப்படுத்தப்பட்ட நானோதுகள்களின் தொகுப்பு மற்றும் குணாதிசயம், மன்னார்குடி வளைகுடா சதுப்பு நிலத்தில் வெவ்வேறு பருவங்களில் கதிரியக்க ஐசோடோப்புகளின் இயக்கவியல், ஒளியூக்கி பயன்பாட்டிற்கான பாலிமர் குறைக்கடத்தி நானோகம்போசிட் என்பன உள்ளிட்ட ஆய்வுத்திட்டங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்தி தொடர்ந்து இயங்கி வருகிறார்.
பிறப்பு மற்றும் கல்வி
தொகு1965 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் கூத்தலூரில் அருமைநாதன், சாந்தா தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் கூத்தலூர் புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியிலும், தேவகோட்டை இராம்நகர் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை இயற்பியல் பயின்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இயற்பியல்-பொருள் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இத்தாலியில் உள்ள சிஎன்ஆர்-ஐஎம்ஈஎம் நிறுவனத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொருட்கள் என்ற தலைப்பில் தனது ஆய்வை மேற்கொண்டார்.
தொழில்
தொகு2000 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார். தற்பொழுது அணு இயற்பியல் துறை பேராசிரியராகவும் பொருள் அறிவியல் துறையின் பொறுப்புத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அணு இயற்பியல், அடிப்படைத் துகள் இயற்பியல், கதிரியக்கப் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை முதுநிலை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.[2]
அணுக்களின் நிலைத்தன்மை, சிதைவுப் பண்புகள் பற்றிய ஆய்வு, ஆற்றல் சேமிப்புப் பயன்பாட்டிற்கான பாலிகார்பசோல் அடிப்படையிலான நானோகம்போசிட் மின்முனைப் பொருட்களின் தொகுப்பு மற்றும் சிறப்பியல்பு, பயோசென்சர்களுக்கான நானோ கம்போசைட்டுகள், ஒளி படிச்சிதைவு, உயிர் இணக்கமான கைட்டோசானில் பாதிக்கப்பட்ட ஒளிரும் கார்பன் புள்ளிகள், நரம்பியக் கடத்தல் நோய்களுக்கான ஒரு நானோ மருந்து கடத்தியாக ஒளிரும் கைட்டோசோன், இராமேசுவரம் தீவுகள், சென்னையின் வடக்கு கடற்கரை மற்றும் தாமிரபரணி நதி, இந்தியாவின் நிலப்பரப்பு கதிரியக்கத்தின் ஆய்வு உள்ளிட்ட பொருண்மைகளில் ஆய்வு மாணவர்களை வழிநடத்தி 16 முனைவர்களையும் 29 ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியுள்ளார். சென்னை அறிவியல் அகாதமி சார்பில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் அணுவியல் நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.[3]
கௌரவங்கள்
தொகு- தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்.
- சென்னை அறிவியல் அகாதமியின் ஆயுட்கால உறுப்பினர்.[4]
- மின்வேதியியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்ற சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்.
- இந்திய கதிர்வீச்சு பாதுகாப்பு சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்.[5]
- இந்திய காந்தவியல் சங்க ஆயுட்கால உறுப்பினர்
- இந்திய இயற்பியல் சங்க ஆயுட்கால உறுப்பினர்.
விருதுகள்
தொகு- 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பகுப்பாய்வின் படியான இயற்பியல் விருது.[6]
- 2022 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் அறிவியலுக்கான சென்னை அறிவியல் அகாதமியின் மூத்த விஞ்ஞானி விருது
- இயற்பியல் பொருள் அறிவியல் துறையில் இவரது சிறந்த ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டி 2019 ஆம் ஆண்டுக்காக அளிக்கப்பட்ட தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தமிழ்நாடு விஞ்ஞானி விருது.[7]
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது.
- யுனெசுகோ மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தின் கோட்பாட்டு இயற்பியலுக்கான பன்னாட்டு மைய உறுப்பினர் தகுதி.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ரூசா". சென்னைப் பல்கலைக்கழகம். https://www.unom.ac.in/index.php?route=miscelleneous/rusa. பார்த்த நாள்: 10 September 2024.
- ↑ "அணுக்கரு இயற்பியல் துறை". சென்னைப் பல்கலைக் கழகம். https://www.unom.ac.in/index.php?route=department/department/profile&deptid=52&facultyid=169. பார்த்த நாள்: 11 September 2024.
- ↑ Bureau, The Hindu (2023-11-30), "Scientist urges students to take up research in nuclear energy", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-09-15
- ↑ Council – The Academy of Sciences, Chennai (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-09-15
- ↑ "IGCAR : Gallery", www.igcar.gov.in, பார்க்கப்பட்ட நாள் 2024-09-15
- ↑ "INDIAN RESEARCH INFORMATION NETWORK SYSTEM", irins.inflibnet.ac.in (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-09-15
- ↑ Correspondent, Special (2021-05-12), "Winners of the Tamil Nadu Scientist Awards 2019 announced", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-09-15