ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்)

ஆட்டமிழப்பு அல்லது வீழ்த்தல் (Dismissal) என்பது துடுப்பாட்டத்தில் ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்த பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரருள் ஒருவர் களமிறங்கி விளையாடுவார். இறுதியாக ஒரு அணி தனது 11 வீரர்களில் 10 வீரர்களை இழந்த பிறகு அதன் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும். இது அனைத்திழப்பு (All out) என்று அழைக்கப்படுகிறது.

வீசப்படும் பந்து இலக்கைத் தாக்குவது இலக்கு வீச்சு (bowled) என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: ஆஷஸ் தொடர் 2017-18)

பொதுவாக பிடிபடுதல், இலக்கு வீச்சு, ஓட்ட வீழ்த்தல், முன்னங்கால் இடைமறிப்பு மற்றும் இழப்புத் தாக்குதல் ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளரை வீழ்த்த இயலும். எனினும் வீசப்படும் பந்து பிழை வீச்சுாக (no ball) இருந்தால் ஓட்ட வீழ்த்தல் தவிர மற்ற முறைகளில் ஒரு மட்டையாளரை வீழ்த்த இயலாது.

பொதுவான ஆட்டமிழப்பு முறைகள்

தொகு

ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று இலக்கைத் தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இலக்கைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இலக்கைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.[1]

ஒருவேளை முறையான வீசப்படும் பந்தை மட்டையாடுபவர் தன் மட்டையால் (அல்லது மட்டையைப் பிடித்திருக்கும் கையுறைகளால்) அடித்த பிறகு, அந்தப் பந்து நிலத்தைத் தொடும் முன்பு எதிரணி வீரர்களுள் ஒருவர் பிடித்துவிட்டால் மட்டையாடுபவர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.[2]

ஒருவேளை முறையாக வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இலக்கு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இலக்கில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதுதவிர இந்த ஆட்டமிழப்பைக் கணிக்க மேலும் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன.

ஒரு மட்டையாளர் இலக்குகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் எல்லைக்கோட்டைத் தொடும் முன்பு அதன் அருகிலுள்ள இலக்கை எதிரணி வீரர்களுள் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.

ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அதன் அருகிலுள்ள இலக்கைத் தாக்குவதன் மூலம் அந்த மட்டையாளரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இது மன்கட் என்று அழைக்கப்படுகிறது.

ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக்கோட்டை தாண்டி முன்வரும்போது இலக்கு கவனிப்பாளர் அந்த பந்தைப் பிடித்து இலக்கைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Law 32.1 – Out Bowled". MCC. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
  2. "Law 33.5 – Caught to take precedence". MCC. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.