ஆட்டுக்கல்

ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்ட மாவு அரைப்பதற்கு உதவக்கூடிய கருவியாகும். இதன் நடுப்பகுதி குழியாக இருக்கும். அதில் அரைக்கவேண்டிய தானியத்தைப் போட்டு குழவியைக் கொண்டு கையால் சுழற்றினால் குழியில் இருக்கும் தானியம் அரைபடும். இது பெரும்பாலும் இட்லி, தோசை போன்ற உணவுப்பண்டங்களைச் செய்வதற்குத் தேவைபடும் மாவை அரைக்கப் பயன்படுகிறது.

ஆட்டுரலும் குழவியும்
ஆட்டுக்கல்லும் குழவியும்

இந்த ஆட்டு உரல் உருண்டை வடிவமான கல்லில் நடுவில் குழியைக் கொண்டிருக்கும். இந்தக் குழியின் அகலத்தை விட சிறிது குறைவான சுற்றளவில் சிறிது உயரமாக கையால் பிடித்து அரைக்கக் கூடிய வடிவமைப்பில் குழவிக் கல் ஒன்றும் இதனுடன் இருக்கும். குழியில் பொருத்தி சுற்றப் பயன்படும் சற்று நீண்டு உருட்டையாக இருக்கும் பகுதிக்குக் ”குழவி” என்று பெயர். ஆட்டுக்கல்லும் குழவியும் பயன்படப் பயன்பட நாளடைவில் மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு ஆட்டுக்கல் பொளிதல் என்று பெயர். ஆட்டுரல் குழி, குழவிக்கல் என இரண்டுக்குமிடைப்பட்ட இடைவெளியில் உள்ள இடத்தில் அரைக்கப்படும் பொருள் இருக்கும். குழவிக்கல்லை சுற்றும் பொழுது உணவுப் பொருள் அரைபடும். ஆட்டுக்கல்லையும் குழவியையும் பொளிதளலால் உராய்வு நன்றாக ஏற்பட்டு, பொருட்கள் நன்றாக அரைபடும். மின்சார ஆட்டுரல் வந்த பின்பு இந்த வகையான ஆட்டுரல்களின் பயன்பாடு குறைந்து போய் விட்டது.

மின்சார ஆட்டுக்கல்தொகு

1955-இல் கோயம்புத்தூரில் சபாபதி என்பவர் மின்சார ஆட்டுக்கல்லினைக் கண்டுபிடித்தார். பின்னர் அது சென்னை, மதுரை போன்ற ஊர்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவையில் மேலும் கல்லினை சாய்க்கக்கூடிய மின் ஆட்டுக்கல், மேசை மீது வைத்து ஆட்டும் வகையிலான சிறு மின் ஆட்டுக்கல் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன. 2005-06ஆம் கோவை மின் ஆட்டுக்கல்லுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டுக்கல்&oldid=2804820" இருந்து மீள்விக்கப்பட்டது