ஆண்ட்ரியசு வெசாலியசு

ஆண்ட்ரியசு வெசாலியசு (Andreas Vesalius) [1] 31 டிசம்பர் 1514 – முதல் 15 அக்டோபர் 1564 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பெல்சியம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். உடற்கூற்றியல், மருத்துவரான இவர் மனித உடற்கூற்றியல் பற்றி ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு இவருடைய நூல்கள் பெரிதும் உதவியதால் இவரை நவீன மனித உடற்கூற்றியலின் நிறுவனர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். பெல்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த பிரசெல்சு நகரில் வெசாலியசு பிறந்தார். பாதுவாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின்னர் பேரரசர் ஐந்தாம் சார்லசின் அவையில் மருத்துவராகவும் வெசாலியசு பணியாற்றினார்.

ஆண்ட்ரியசு வெசாலியசு
பிறப்பு(1514-12-31)31 திசம்பர் 1514
பிரசெல்சு
இறப்பு15 அக்டோபர் 1564(1564-10-15) (அகவை 49)
துறைஉடற்கூற்றியல்
கல்வி கற்ற இடங்கள்பவியா பல்கலைக்கழகம், படுவா பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
மேட்டியோ ரியால்டோ கொலம்போ
அறியப்படுவதுமனித உடற்கூற்றியலின் கட்டமைப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
காலென்
யாக்குவசு துபாயிசு
யீன் பெர்னெல்
பின்பற்றுவோர்காப்பிரியல் பாலோப்பியோ

ஆண்ட்ரியசு வெசாலியசு என்ற பெயர் ஆண்ட்ரீசு வான் வெசெல் என்ற பெயரின் டச்சு வடிவமாகும். அக்காலத்தில் ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் பெயர்களை இவ்வாறு இலத்தினாக்கம் செய்து கொள்வது பொதுவான பழக்கமாக இருந்தது. ஆண்ட்ரி வெசேல், ஆண்ட்ரியா வெசாலியோ, ஆண்ட்ரியாசு வெசெல், ஆண்ட்ரி வெசாலியோ, ஆண்ட்ரி வெசாலிப்போ என்று பலவறாக ஆண்ட்ரியா வெசாலியசு அழைக்கப்பட்டார்.

இளமைக் காலமும் கல்வியும் தொகு

வெசாலியசு 1514 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் பிரசெல்சில் ஆண்ட்ரியசு வான் வெசல் மற்றும் இசபெல் கிரெப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நெதர்லாந்து ஆப்சுபர்கு அரசமரபின் ஒரு பகுதியாக பிரசெல்சு அப்போது இருந்தது. வழிவழியாக வெசாலியசின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவப்பணி புரியும் அறிஞர்களாக இருந்துள்ளனர். இளம் வயதிலேயே வெசாலியசு லூவெயின் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டார்.

லூவெயின் பல்கலைக்கழகத்தில் கலையையும் இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளையும் வெசாலியசு கற்றார். 1533 ஆம் ஆண்டில் பாரிசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயிலுவதற்காகச் சேர்ந்தார். காலெனின் உடற்கூற்றியல் கோட்பாடுகளை யாக்குவசு துபாயிசு மற்றும் யீன் பெர்னெல் ஆகியோர் வெசாலியசுக்கு கற்பித்தனர். அந்த நேரத்தில்தான் வெசாலியசுக்கு உடற்கூற்றியல் பிரிவில் ஆர்வம் பிறந்தது. தன் கையில் கிடைத்த உயிரினங்களின் உடலை அறுத்து ஆராய்ச்சிகள் செய்தார்.

புனித ரோம் பேரசிற்கும் பிரான்சுக்கும் இடையேயான போர் தொடக்கம் காரணமாக வெசாலியசு 1537 ஆம் ஆண்டில் பாரிசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லூவெயின் திரும்பிய வெசாலியசு அங்கு தன்னுடைய பட்டப் படிப்பை முடித்தார். காலெனுக்கு எதிராக புதிய கருத்துகளை எடுத்துக் கூறியதால் அவருடைய பேராசிரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகையால் வெசாலியசு குறுகிய காலத்தில் லூவெயினிலிருந்து இத்தாலிக்குப் பயணமானார். பாதுவாப் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மருத்துவ மேற்படிப்பை முடித்தார்.

மருத்துவ வாழ்க்கை தொகு

வெசாலியசு பட்டம் பெற்ற தினத்திலேயே பாதுவாப் பல்கலைக்கழகம் உடற்கூறு பேராசிரியராகப் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டார். போலோக்னா பல்கலைக்கழகத்திலும் பிசா பல்கலைக்கழகத்திலும் கௌரவரப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இக்காலத்தில் வெசாலியசின் வாழ்க்கை சிறப்பாக இருந்தது. பாதுவாப் பல்கலைக்கழகத்தில் பணியேற்பதற்கு முன்னர் வெசாலியசு இத்தாலியில் பல இடங்களுக்கு பயணம் செய்தார். போப் நான்காம் பால் மற்றும் லொயோலா இஞ்ஞாசி ஆகியோருக்கு தொழு நோய்க்கான சிகிச்சையளித்தார். வெனிசு நகரில் யோகான் வான் கால்கர் என்ற ஓர் ஓவியரைக் கண்டு தன்னுடைய நூலுக்குத் தேவையான விளக்கப் படங்களை வரைந்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 1538 இல் உடற்கூறு பற்றிய இவருடைய முதலாவது நூல் வெளியிடப்பட்டது [2]

முன்னதாக இந்த தலைப்புகள் யாவும் முதன்மையாக காலெனின் பாரம்பரிய நூல்களை அடிப்படையாகக் கொண்டே போதிக்கப்பட்டன. அவை பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி ஒரு விலங்கை அறுத்து அதனடிப்படையிலே எழுதப்பட்ட நூல்கள் ஆகும். காலெனின் கூற்றுகளை உறுதிப்படுத்த எந்தவொரு முயற்சியும் அதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக வெசாலியசு முதன்மை போதனை கருவியாக அறுவை செய்தலை பயன்படுத்தினார். மாணவர்கள் தாங்களே அறுவை செய்து கற்பதையும் வலியுறுத்தினார்.

எசுப்பானிய சார்லசு சக்கரவர்த்தியின் அரண்மனையில் மருத்துவராக சிலகாலம் வெசாலியசு பணியாற்றினார். மீண்டும் இத்தாலிக்குத் திரும்பி சிலகாலம் பாதுவாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியை செய்து விட்டு யெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். பயணம் முடித்து வெசாலியசு திரும்பி வந்தபோது அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி விபத்துக்காளானது. இவ்விபத்தில் வெசாலியசு உயிரிழந்தார்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andreas Vesalius
என்பதின் ஊடகங்கள் உள்ளன.