ஆதாம் கான்
ஆதாம் கான் (Adham Khan) (1531 - 16 மே 1562) என்பவர் முகயலாயச் சக்கரவர்த்தி அக்பரின் தளபதியாக இருந்தார். இவர் மகாம் அங்கா என்பவரின் இளைய மகனாவார். இதனால் இவர் அக்பரின் சகோதரரானார். தனது நான்காவது ஆட்சியாண்டில், அக்பர் இவருக்கு பாகி கான் பக்லானியின் மகள் ஜாவேதா பேகத்தை திருமணம் செய்து வைத்தார்.[1]
மால்வாவின் வெற்றி
தொகுஅக்பரின் பிரதம மந்திரி பைராம் கான் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ஆதாம் கான் ஒரு தளபதியாக நியமிக்கப்பட்டு மால்வாவை கைப்பற்ற அனுப்பப்பட்டார்.
1561 இல், ஆதாம் கான் மற்றும் பிர் முகம்மது கான் தலைமையிலான முகலாய இராணுவம் மால்வா மீது படையெடுத்தது. 1561 மார்ச் 29, அன்று சாரங்பூர் போரில் மால்வாவின் சுல்தானான பஜ் பகதூரின் படையை அவர்கள் தோற்கடித்தனர். பஜ் பகதூரின் பொக்கிஷங்கள், யானைகள் மற்றும் அவரது அரண்மனை அனைத்தும் வெற்றியாளர்களால் கைப்பற்றப்பட்டன. ஆதாம் கான் பாஸ் பகதூரின் இந்து மனைவி இராணி ரூப்மதியையும் கைப்பற்ற முயன்றார். ஆனால் அவர் விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த போரில் தளபதிகளான ஆதாம் கான் மற்றும் பிர் முகம்மது கான் இருவரும் காட்டுமிராண்டித்தனமான கொடுமைச் செயல்களைச் செய்தனர் என்று வரலாற்றாசிரியர் பௌதனி கூருகிறார். கைதிகளை படுகொலை செய்தனர் என்றும் அவர்களது மனைவியையும் குழந்தைகளையும் கூட கொன்றனர் என்றும் கூறுகிறார். இந்த வெற்றிக்குப் பின்னர், ஆதாம் கான் பேரரசர் அக்பருக்கு ஒரு சில யானைகளுடன் வெற்றிச் செய்தியை அனுப்பினார். மீதமுள்ள கொள்ளைப் பொருட்களை தானே கையகப்படுத்திக் கொண்டார்.
இதனால் கோபமடைந்த அக்பர் தனிப்பட்ட முறையில் சாரங்பூருக்கு படைகளுடன் சென்றார். ஆதாம் கான் அக்பரிடம் சரணடைந்தார். அவரால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் மால்வாவிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார். பிர் முஹம்மது கானுக்கு பதவி வழங்கப்பட்டது.
ஆதாம் கானின் மரணதண்டனை மற்றும் அதன் பின்விளைவுகள்
தொகு1561, நவம்பர் மாதம் அக்பரின் விருப்பமான தளபதி அட்டகா கான், முனிம் கானுக்கு பதிலாக பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் ஆதாம் கானின் தாயார் மகாம் அங்காவை அதிருப்தியடையச் செய்தது. 1562 மே 16 ஆக்ரா கோட்டையில் பார்வையாளர்களின் மண்டபமான திவான்-இ-ஆமில் அமர்ந்திருந்த அட்டா கானை ஆதாம் கான் ஒரு கூட்டத்துடன் வந்து கொலை செய்தார்.[2] இந்தக் கொலையைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அக்பர், ஆதாம் கானை கோட்டையின் கோபுரங்களிலிருந்து தள்ளி கொல்ல உத்தரவிட்டார். இந்த முயற்சி ஆதாம் கானின் கால்களை மட்டுமே உடைத்தது, எனவே மேலும் கோபமடைந்த பேரரசர் ஆதான் கானை மீண்டும் கீழே தள்ளும்படி உத்தரவிட்டார். இரண்டாவது முயற்சி ஆதாம் கானை உடனடியாகக் கொன்றது.
ஆதாம் கானின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடல் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. ஆதாம் கான் இறந்ததை அறிந்த மகாம் அங்கா மனப்பிறழ்ச்சிக் கொண்டு நாற்பது நாளில் இறந்து போனார். அக்பரால் இருவருக்கும் மெக்ராலியில் ஒரு கல்லறை எழுப்பப்பட்டு அடக்கம் செய்யப்பட்டனர்.[3] பூல்-பூலையன் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த கல்லறை, உள்ளே ஒரு சிக்கலான புதிர்வழிகளுடன் குதுப் மினாரின் வடக்கே அமைந்துள்ள லால் கோட்டின் கோபுரங்களில் நிற்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஆதாம் கான் 1552 இல் பாகி கான் பக்லானியின் மகள் ஜாவேதா பேகத்தை மணந்தார். அவருக்கு 2 மகன்களும் 2 மகள்களும் இருந்தனர்.
குறிப்புகள்
தொகு- ↑ Beveridge, H. (1907, reprint 2000). The Akbarnama of Abu'l Fazl, Vol. II, Calcutta: The Asiatic Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7236-093-2, p.129
- ↑ The punishment of Adham Khan அக்பர்நாமா
- ↑ Beveridge, H. (1907, reprint 2000). The Akbarnama of Abu'l Fazl, Vol. II, Calcutta: The Asiatic Society, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7236-093-2, p. 274