ஆதிமந்தி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இது குறுந்தொகை பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது.

பாடல் தரும் செய்தி

தொகு

ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.

அவனை (தன் காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்(தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.

  • மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
  • துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.

அது மட்டும் அல்ல " "—உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோவடிகள் ஆதிமந்தியின் காதல் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார்.

ஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்

தொகு

நீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது.

ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.[1] ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).

மேற்கோள்கள்

தொகு
  1. சி. முத்துப் பிள்ளை. (2003). தமிழ்ப் பெண் கவிகள். சென்னை: பழனி நிலையம்.

இவற்றையும் காண்க

தொகு

ஆட்டனத்தி ஆடிப்பெருக்கு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிமந்தி&oldid=3486684" இலிருந்து மீள்விக்கப்பட்டது