ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809 — ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.
ஆபிரகாம் லிங்கன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1861 – ஏப்ரல் 15, 1865 | |
துணை அதிபர் | ஹன்னிபல் ஹாம்லின் (1861 முதல் 1865 வரை); ஆண்ட்ரூ ஜான்சன் (மார்ச்-ஏப்ரல்l 1865) |
முன்னையவர் | ஜேம்ஸ் புக்கானன் |
பின்னவர் | ஆண்ட்ரூ ஜான்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 12, 1809 ஹார்டின் வட்டம், கெண்ட்டக்கி |
இறப்பு | ஏப்ரல் 15, 1865. அகவை 56 வொஷிங்டன் டி.சி |
தேசியம் | அமெரிக்கன் |
அரசியல் கட்சி | விக் கட்சி, குடியரசுக் கட்சி |
துணைவர் | மேரி டாடு லிங்கன் |
கையெழுத்து | |
ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.
இளமை
தொகு1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ் (Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.
ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.
1833இல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.
பணிகள்
தொகுதனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.
அரசியல்
தொகுஅரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.[1]
அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!", "என நக்கலாக சொல்ல", அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும். "என்றார் அமைதியாக".
அடிமை முறை ஒழிப்பு
தொகுபதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.
லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்" (emancipation proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.
4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
மக்களாட்சி விளக்கம்
தொகு1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettysburg speech) "விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. "மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது". எனக் குறிப்பிட்டார்.
“ | மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி | ” |
என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (general grant) முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.
இறப்பு
தொகு1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ந் திகதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (John Wilkes Booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.[3] பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.
மத நம்பிக்கை மற்றும் கொள்கைகள்
தொகுபல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.
வரலாற்றுப் புகழ்
தொகுஅமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.
லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் "ஒரு தேசியத் தியாகி" என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார்.
நினைவகங்கள்
தொகுஅமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி. யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இவரது நினைவாக உலக கடிகார நிறுவனங்கள் இவர் சுட்டு கொல்லப்பட்ட நேரமான 10:10 என்பதை விளம்பர கடிகார நேரமாக வைத்துள்ளனர்.[4]
படக்காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தேசம் வலை தளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பிப்ரவரி 12: ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..விகடன்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
- ↑ "10:10 – The Myths And Realities Behind The Time On All Watches".