ஆயில் இந்தியா லிமிடெட்

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

ஆயில் இந்தியா லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை18 பிப்ரவரி 1959
தலைமையகம்துலியாஜன், திப்ருகார் மாவட்டம், அசாம்
முதன்மை நபர்கள்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு
உற்பத்திகள்பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோகெமிக்கல்ஸ்
உரிமையாளர்கள்இந்திய அரசு (66%)
இணையத்தளம்www.oil-india.com

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.

9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும்.

ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889ல் முதன் முதலில் பிரித்தானிய இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு தொடர்கிறது.

2014 ஆண்டு முடிய ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்துள்ளது.[1]

இந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80% வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும், இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபுக் கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, இந்நிறுவனம் ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை அரசிடமிருந்து பெற்றுள்ளது.

தற்போது இந்நிறுவனம் லிபியா, நைஜீரியா, சூடான், வெனிசூலா, மொசாம்பிக், ஏமன், ஈரான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எண்ணெய் துரப்பண மேடைகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றுள்ளது.

இந்நிறுவனம் அசாமின் துலியாஜான் நகரத்திலிருந்து பிகார் மாநிலத்தின் பரவுனி நகரம் வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு 1157 கிமீ நீளத்திற்கு குழாய்கள் பதித்துள்ளது.

இந்நிறுவனத்த்தின் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனையாகிறது.[2].[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "OIL India Annual Report 2013-2014" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
  2. Oil India Ltd
  3. https://economictimes.indiatimes.com/oil-india-ltd/stocks/companyid-4547.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயில்_இந்தியா_லிமிடெட்&oldid=4173105" இலிருந்து மீள்விக்கப்பட்டது