ஆரியர் (சங்ககாலம்)

(ஆரியர் (தமிழ்நாட்டில்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்க இலக்கியங்களில் ஆரியர் என்னும் சொல் காணப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் ஆரியர் தொகு

ஆரியர் - நற்றிணை 170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, பதிகம் 2, அகநானூறு 276, 336, 396, 398, சிலப்பதிகாரம் 23-கட்டுரை-14, 25-158
ஆரியன் - மணிமேகலை 25-6
ஆரியப் பொருநன் - அகநானூறு 386
ஆரிய அண்ணல் - பதிற்றுப்பத்து பதிகம் 5
ஆரியநாடு - சிலப்பதிகாரம் 29-1
ஆரியப் பேடி - சிலப்பதிகாரம் - 27-186
ஆரிய அரசர் - சிலப்பதிகாரம் - 26-211, 217, 28-195
ஆரிய மன்னர் - சிலப்பதிகாரம் - 25-162, 27-6, 22, 177, 28-88, 98, 120, 153, 29-1-6, 30-157

இவற்றின் செய்தித் தொகுப்பு தொகு

ஆரியர் என்னும் சொல் சங்கப்பாடல்களில் யாரைக் குறிக்கிறது என்பதைக் காண்பது இந்தத் தொகுப்பு.

இமயமலைச் சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர்.
கங்கைப் பெருவெளியில் ஆண்ட அரசர்குடி மோரியர்.
சங்கப்பாடல்கள் தரும் இந்தத் தெளிவான குறிப்பினை உள்ளத்தில் கொண்டு இந்தச் செய்திகளை அணுக வேண்டும்.

சேரன் செங்குட்டுவன் வென்ற கனக, விசயர் வடபுலத்து அரசர். அதாவது இமயச் சாரல் வடபுலத்து அரசர்.
மோரியரையோ, நந்தரையோ அன்று.

சேர அரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது. [1][2][3]

சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது. [4]

முள்ளூர் என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். மலையன் ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது. [5]

பறை முழக்கத்துடன் கயிற்றின்மீது ஏறி ஆடி வித்தை காட்டி ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். [6]

பெண்யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பயிற்சி அளித்து மன்னர்களுக்கு விற்றும் ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். [7]

தமிழ்நாட்டில் ஆரியர் வாழ்ந்த இடம் பொன்படு நெடுவரை. பொன்னைப்போல் பூத்துக் குலுங்குவது பொன்படு நெடுவரை. இவர்களின் தொல்குடி வாழ்ந்த இடம் பேரிசை இமயம். [8]

சான்று தொகு

  1. ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் – பதிற்றுப்பத்து 11
  2. பேரிசை மரபின் ஆரியர் வணக்கி பதிற்றுப்பத்து பதிகம் 2,
  3. ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி - அகநானூறு 396 பரணர்
  4. மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என் தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 பாவைக்கொட்டிலார்
  5. ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170
  6. ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறுந்தொகை 7 பெரும்பதுமனார்
  7. ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல (தலைவனை ஆட்டிப் படைப்பேன் என்கிறாள் ஒரு பரத்தை) – அகநானூறு 276 பரணர்
  8. ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகநானூறு 398

இணைத்துப் பார்க்கவேண்டியவை தொகு

ஆரிய அண்ணல் என்னும் ஆரிய அரசர்
ஆரியப் பொருநன்
ஆரிய அரசன் பிரகத்தன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
ஆரியர்

மேற்கோள்கள் தொகு

  • INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு) திரட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியர்_(சங்ககாலம்)&oldid=3381144" இலிருந்து மீள்விக்கப்பட்டது