ஆரோவில்
ஆரோவில் (Auroville) என்பது தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.
ஆரோவில் Auroville | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 2,288 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அசுஎ | 605101 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | TN-16, PY-01 |
இணையதளம் | http://www.auroville.org/ |
தோற்றம்
தொகுஎல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும்’ என்ற பிரகடனத்தோடு ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம் திருக்கனவில் உதித்ததாகும்.
‘பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது’ என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.
அமைவிடம்
தொகுஆரோவில் நகரத்திற்காக, அன்னை சுட்டிய இடம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் வட்டப் பகுதியில் அமைந்துள்ளது. அது இன்றைக்குப் புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உலகப்புகழ் பெற்ற ஆரோவில்லாக மலர்ந்துள்ளது. ஆரோவில் ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு.
இது சித்தர் பூமி. கடுவெளிச் சித்தர் தவம் செய்த புண்ணியபூமி. இந்த இடத்தில் ஆரோவில் உருவாகும் என்று கடுவெளிச் சித்தர் கூறியிருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்வதுண்டு. ஆரோவில்லைச் சுற்றிலும் பழஞ்சிறப்புக்குரிய சிவாலயங்கள், சிறுதெய்வக் கோயில்கள் அமைந்துள்ளன. 18 சிவன் கோயில்கள் உள்ளனவாக இப்பகுதி மக்களால் சுட்டப் பெறுகின்றன. குறிப்பாக, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இரும்பை மாகாளம், திருவக்கரை, அரசிலி ஆலயங்களை ஒட்டி ஆரோவில் அமைந்துள்ளது.
கட்டுமானத் தொடக்கம்
தொகு1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இந்தியாவிலிருந்தும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து 5000 பேர் வந்து குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது. இந்த உலக நகரில் சுமார் 50,000 பேர் வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்று வருகிறது. நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (Peace) என்று பெயர்.
அமைப்பு
தொகுஇந்த மையத்திலிருந்து நாற்புறமும் சுருள் சுற்று வடிவத்தில் விரிந்த நான்கு பகுதிகள் உள்ளன. அதன் தென்கிழக்குத் திசையில் குடியிருப்பும், வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும் வடமேற்குத் திசையில் தொழிற்கூடங்களும் அமைந்துள்ளன. புதிய கட்டடக் கலைகள் பலவற்றின் உறைவிடமாகத் திகழும் ஆரோவில்லின் குடியிருப்புகள் இயற்கைச் சூழ்நிலையோடு அழகு நிறைந்து விளங்குகின்றன.
பன்னாட்டுப் பகுதியானது ஒரு மைய அரங்கம், அனைத்து நாட்டு இசை, நடனம், நாடகம் முதலியன பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைஅரங்குகள், நூலகங்கள், பரிசோதனைக் கூடங்கள், கல்வி பற்றிய ஆய்வுக்கூடங்கள், விளையாட்டரங்குகள் கொண்டதாக அமையும். பன்னாட்டுப் பகுதியில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் அரங்கு இருக்கும். அங்கு அந்தந்த நாட்டின் கலை, பண்பாடு, வாழ்க்கை முதலானவற்றை மற்றவர்கள் கண்டு அறிந்து கொள்ள, ஆய்ந்துணர உதவியாக அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. இந்தியப் பகுதியான பாரத்நிவாஸ் முதல் அங்கமாக அமைந்துள்ளது. அதன் அங்கமாகச் செயல்படும் ஆரோவில் தமிழ் மரபு மையம் குறிப்பிடத்தக்க பணிகளைச் சிறப்புற ஆற்றி வருகிறது.
தற்போது திபெத் கலாச்சார அரங்கு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் தங்களுக்கான அரங்குகளை நிறுவ முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு மாசுஉண்டாக்காத வகையில் அமைந்துள்ள தொழிற்கூடப் பகுதிகளில் உயர்தரத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. சிறிய, நடுத்தரத் தொழிற்கூடங்களாக அவை அமைகின்றன.
சமூகம்
தொகுநகரப்பகுதியைச் சுற்றிலும் மரங்களும், பூங்காக்களும், பூந்தோட்டங்களும் பசுமை வளையங்களாக நகரை எழிலூட்டி வருகின்றன. ஆரோவில்லைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் வசிக்கும் மக்கள் இப்பகுதியின் ஆதிமுதல் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். நவம்பர் 10, 2005 கணக்கீட்டின்படி 1780 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 736 பேர் இந்தியர்கள் ஆவார்கள். ஆரோவில் சமூகத்தில் 35க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். ஆரோவில்லின் நோக்கினைப் புரிந்து கொண்டு, அவர்கள் இயங்க வழிவகை செய்வதன் முதற்கட்டமாக இங்குள்ள கிராமங்களின் வளர்ச்சி, கல்வி, நல்வாழ்வு, நல்ல குடிநீர், சத்துணவு, பொது சுகாதாரம், சூழல்காப்பு மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. தன்னிறைவு பெற்ற, கைத்தொழில் அறிந்த கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்டதாக அந்தக் கிராமங்கள் வளர்ந்து வருவதை இன்று காண முடிகிறது.
பன்னாட்டு மக்களிடையே நல்லிணக்கமாகவும் கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன்மிகத்தின் அடிப்படையில் ஓருலகக் கருத்துணர்வை வளர்க்கும் வகையிலும் வளர்ந்து வரும் இந்நகரில் நான்கு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. முதல்மொழி தமிழ். அடுத்து பிரெஞ்ச், சமஸ்கிருதம், மற்றும் ஆங்கிலம் இங்கு பேச்சு மற்றும் எழுத்து மொழிகளாக விளங்குகின்றன. ‘ஆரோவில் டுடே’ என்னும் இதழ் (1988 ஆம் ஆண்டிலிருந்து) ஆங்கில மொழியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் மூலமாக ‘ஆரோவில் ரேடியோ’ இயக்கப்படுகிறது.
பணிகள்
தொகுமுற்றிலும் வறண்ட பூமியான இதனைச் செழிப்பு மிகுந்த ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 40 நாட்டு மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்து வந்திருக்கிறார்கள். மழைநீர் சேகரிப்பு, இயற்கை வேளாண்மை, மாற்றுச்சக்தி மற்றும் மறுஉற்பத்தி செய்ய வல்ல (சூரிய சக்திப் பலகங்கள்வழி) பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வழங்குதல், விதைகள் சேகரிப்பு, மர நாற்றுப் பண்ணைகள், ஆராய்ச்சிப் பணிகள் எனப் பலவற்றைச் செய்து வரும் ஆரோவில்லின் நோக்கம் மானுடம் மேம்படைதல் என்பதேயாகும்.
சிதைவுக்குள்ளாகி வரும் பழங்காலக் கட்டடங்களைப் பாதுகாத்தல், மரபு மாறாமல் புதுப்பித்தல், இயற்கையோடு இசைந்தவண்ணம் கட்டடங்களை எளிமையாக அமைத்தல், உள்ளூர்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூர் விளையாட்டுகளை உயர்த்துதல் என்பதான நிலைகளில் விரிவாகவும், ஆழமாகவும் ஆரோவில் தன் பணிகளைத் தொடர்கின்றது.
இயற்கை கொலுவிருக்கும் எழிலார் சோலைகளுடன் அமைந்திருக்கும் ஆரோவில் தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களை முன்னேற்றம் செய்யும் முயற்சிகளிலும் முனைந்துள்ளது. இயற்கை சார்ந்த நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் உயர் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. கடற்கரை வளர்ச்சி மையம், உள்ளூர் அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து பல சீரிய பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.
சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்பர் போன்ற திட்டங்கள் மூலம் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பிற மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. 25 அறக்கட்டளைகளின் கீழுள்ள 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெறுகின்றன.
மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்றுமூலம் மின்சார உற்பத்தி, உயர்தர இயந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத 2 உலோகத் தொழிற்கூடங்கள், உயர்தரத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், பேக்கரிகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன. ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 2 சிறார் பள்ளிகள், 2 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் 16 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு தொழிற்பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் இயங்கும்.
நூலகம்
தொகு8 மொழிகளில் 25,000-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. பாரத்நிவாஸ் வளாகத்தில் ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது.
கலைவளர்ப்பு
தொகுநடனம், யோகா, தற்காப்புக் கலை, இசை, ஓவியம் முதலியவற்றிற்கான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன.
ஆரோவில்லிற்கும் வெளி நிறுவனங்களுக்கும் தங்கள் பங்களிப்பை நல்கி வரும் எழுத்தாளர்கள், இசை மற்றும் ஓவிய, நடன, கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள், நடிகர்கள், மட்பாண்டக் கலைஞர்கள் பலர் இயங்கி வருகின்றனர். பல நாடுகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தி வரும் கலைக்குழுக்களும் இங்கு உண்டு. அறிவியல் சாதனைகளும் ஆன்மிக வழியில் இங்கு நாள்தோறும் பொலிவு பெற்றிலங்குகின்றன.
சிறப்பம்சங்கள்
தொகு40க்கு மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள், மாணவர், இளைஞர் விடுதிகள் இங்கு அமைந்துள்ளன. ஆய்விற்காகவும், ஆன்ம பரிசோதனைகளுக்காகவும் இங்கு ஆண்டுதோறும் ஆரோவில் சபைகளைச் சார்ந்த பன்னாட்டினர் வந்து தங்குகின்றனர். ஆயிரம்பேர் அமர்ந்துண்ணும் வகையில் இங்கு இயங்கும் சூரியசக்தி உணவகம் (சோலார் கிச்சன்) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு வருகைதரும் யாரும் தமது உணவுக்காக விலை கொடுக்க வேண்டியதில்லை. எனினும், தம்மைப்போல் பின்னர் வரும் விருந்தினர்க்காகத் தாம் விரும்பும் தொகையையோ, பொருளையோ, உழைப்பையோ செலுத்தி மகிழலாம். ங்கு விருந்துண்ண வருபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.
ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி காவியத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள சாவித்ரி பவன், சிறப்பாக உருவாகி வரும் கலைக்கூடம், கண்காட்சிக் கூடம், நூலகம், கருத்தரங்க அரங்கு என்னும் பன்முகத் தன்மைகளோடு கட்டப்பெற்று வரும் இதன் முன் கம்பீரமாகக் காட்சி ஸ்ரீஅரவிந்தர் - ஏழரை அடி உயர வெண்கலச் சிலைவடிவில் தருகிறார். பன்னாட்டுச் சிறப்புகளும் ஒருங்கிணைந்த ஆரோவில்லின் கட்டடக்கலை முதலான அனைத்துலகக் கலைகளும் கண்டுகளிப்பதற்கு மட்டுமின்றிப் பின்பற்றுதற்கும், தலைமுறை கடந்து பேணுதற்கும் உரியவை எனலாம்.
உலக அரங்கில் ஆரோவில்
தொகு1968-இல் நடைபெற்ற ஆரோவில் தொடக்கவிழாவில் 124 நாடுகள் பங்கேற்று ஆரோவில் சாசனத்தை ஏற்றுக் கொண்டன. 1988-இல் இந்திய அரசு ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தை நிறைவேற்றி, நிர்வாகப் பேரவை, பன்னாட்டு ஆலோசனைக் குழு, ஆரோவில்வாசிகள் அவை ஆகியவற்றை அமைத்தது. ஆரோவில் நகரத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததோடு நிதியுதவியும் வழங்கி வருகிறது.
யுனெஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் முக்கியத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் நல்லுறவையும் அங்கீகாரத்தையும் ஆரோவில் பெற்றுள்ளது. 6 கண்டங்களில் உள்ள உலக அமைதிச் சின்னங்களின் வரிசையில் ஆசியாவிற்கான அமைதி மேசை ஆரோவில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மேசையை ஐ.நா. சபை நட்புக்குழு சார்பில் நியூயார்க் நகரில் வழங்கப் பெற்றபோது ஆரோவில்லின் பிரதிநிதியாக தமிழ்க்கவிஞர் இரா.மீனாட்சி அதனைப் பெற்றுக்கொண்டார்.
பல பன்னாட்டுக் கருத்தரங்குகள் இங்கு நடத்தப் பெறுகின்றன. ஆரோவில்லிற்கு ஆதரவு நல்கி வரும் ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் அமைந்துள்ளன.
ஆரோவில்லும் தலைவர்களும்
தொகுஉலகப் புகழ்பெற்ற தலைவர்களான இந்திராகாந்தி, புனித தலாய்லாமா, யுனெஸ்கோவின் பொதுச் செயலர், ஐக்கியநாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலர், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர், மாநில, மத்திய அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.
மாத்ரி மந்திர் (அன்னை ஆலயம்)
தொகு‘ஆரோவில்லின் ஆன்மா’ என்று ஸ்ரீஅன்னையால் வருணிக்கப் பெற்ற ‘மாத்ரி மந்திர்’ என்ற வடசொல்லுக்கு ‘அன்னை ஆலயம்’ என்று பொருள். எனினும், அதற்கெனச் சிலையோ, வழிபாடோ பூசனைகளோ இங்கு எதுவும் மேற்கொள்ளப் பெறுவதில்லை. சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு 1971ஆம் ஆண்டு ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. பிரபஞ்ச அன்னையின் நான்கு மகாசக்தியின் செயல்பாடுகளைக் குறிக்கும் வண்ணம் இங்கு நான்கு தூண்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
மாத்ரி மந்திரின் அமைப்பு
தொகுமாகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரி மந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் ஸ்ரீஅன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும் ஸ்ரீஅரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும்.
மாத்ரி மந்திர் தோட்டங்கள்
தொகுமாத்ரிமந்திரைச் சுற்றி உள்ள பூங்காக்களின் எண்ணிக்கை 12 ஆகும். அது, பராசக்தியின் சத், சித், ஆனந்தம், ஒளி, வாழ்க்கை, ஆற்றல், செல்வம், பயன்பாடு, முன்னேற்றம், இளமை, இசைவு, பூரணச் சிறப்பு ஆகிய பன்னிரு அம்சங்களைக் குறிப்பனவாக அமைகின்றன. ஒருவன், தன்னை, தன் இருப்பை, இறை உண்மையை, தன் வாழ்வின் உண்¬மான நோக்கத்தை அறிய விரும்பினால், தன் ஆன்மாவை, சைத்திய ஜீவனைக் கண்டுகொள்ள விரும்பினால், இறைவனை அடைய விரும்பினால், அவன் அதற்காக ஒருமுனைப்படுதற்காக மட்டுமே இருப்பது மாத்ரிமந்திரின் நோக்கமாகும். பூரணத்தை நாடும் மனிதனின் ஆர்வத்திற்கு இறைவனுடைய பதிலின் அடையாளமாக இருக்கவே மாத்ரிமந்திர் விரும்புகிறது. இறைவனிடம் ஏற்படும் ஐக்கியம், மேன்மேலும் வளர்ச்சியடையும் மனிதகுல ஒருமையாகவே வெளிப்படுதல் மாத்ரிமந்திர். ‘இது ஸ்ரீஅரவிந்தரின் கொள்கைப்படி பிரபஞ்ச அன்னையின் சின்னமாகவே விளங்குகிறது’ என்கிறார் ஸ்ரீஅன்னை. ஆரோவில் ஒரு சமய நிறுவனம் அல்ல. அது சடங்குகளையோ, சம்பிரதாயங்களையோ கொண்டதோ, அல்லது எந்த மதத்தினையும் சேர்ந்ததோ இல்லை.
ஆரோவில்லின் நோக்கம்
தொகு‘விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கைகோத்து மானுட குலம் தழைக்க உழைக்கும் கர்மபூமி, ஆரோவில். ‘ஊருக்குழைத்திடல் யோகம்’ என்றார் பாரதியார். இங்கு ‘உலகிற்குழைத்தலே பரிபூரண யோகமாக’க் கொள்ளப் பெறுகின்றது. போரே இல்லாத பொதுமை காண்பதற்கு ஆன்மிக நெறியில் அறிவியல் வளர்க்கும் ஞானபூமி, ஆரோவில் என்பதால், இங்கும் சோதனைகள் உண்டு. வளர்ச்சி குறித்த பிரச்னைகள் உண்டு. அவை கடந்து மேலே மேலே முன்னேறி வளரும் அனுபவத்தின் சாட்சியம் ஆரோவில். உலகத்தின் ஞானபூமியாக விளங்கும் இந்தியா, ‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையினை உலகிற் களிக்கும்’ என்று தீர்க்க தரிசனமாய் முன்மொழிந்த பாரதியாரின் சத்திய வாக்கை மெய்யாக்கும் வகையில் முன்னின்று இயங்கும் ஆரோவில், நல்லெண்ணம் உடைய அனைவரையும் வரவேற்கிறது.
ஆரோவில்லின் இருப்பிடம்
தொகுசென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், பொம்மையா பாளையம் & முதலியார் சாவடியிலிருந்து சுமார் 6.கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆரோவில்லைக் காண விரும்புகிறவர்களுக்கு...
தொகு- ஆரோவில்லின் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையம் (VISITORR’S INFORMATION CENTRE) உள்ளது. அங்கு ஆரோவில் பற்றிய கண்காட்சி, மற்றும் படக்காட்சி ஆகியவற்றைக் காணலாம்.
- உணவு விடுதி மற்றும் ஆரோவில்லில் உற்பத்தி செய்யப் பெறும் கைவினைப் பொருட்கள், விற்பனை செய்யும் அங்காடிகள் உள்ளன. மேலும், ஆரோவில் பற்றிய நூல்கள், துண்டறிக்கைகள், கையேடுகள் வழங்கும் சேவை மையங்களும் உள்ளன.
- அதனைப் பார்வையிடும் அன்பர்களுக்குத் தோட்டத்திற்குச் சென்று மாத்ரி மந்திரைத் தொலைவிலிருந்து பார்வையிட நுழைவுச்சீட்டு வழங்கப் பெறும். அதற்கென எந்தக் கட்டணமும் கிடையாது. அதனைப் பெற்றுக் கொள்வோர், ஆம்பித் தியேட்டர் வரை சென்று தோட்டங்களைப் பார்வையிடலாம்.
- அடுத்த கட்டமாக வரும் ஆன்மிக அன்பர்கள் மாத்ரிமந்திரின் 12 இதழ் அடுக்கு அறைகளுள் அமர்ந்து தியானம் புரிய அனுமதிக்கப் பெறுவர்.
- மைய உள் அறைக்குச் சென்று மன ஒருமையடைய வேண்டுவோர் மாத்ரி மந்திர் அலுவலகத்தில் தொலைபேசி வழியிலோ, நேரிலோ முன்பதிவு செய்து கொண்டு, முறையான அனுமதி பெற்றுச் செல்லலாம். மழைநாட்களில் அனுமதி இல்லை. மாத்ரிமந்திர் பகுதியில் நுழையும்போது பூரண அமைதிநிலைக்குத் தயாராகிக் கொள்வது நல்லது.
- பொதுவாக, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் 12.30 வரையிலும் அனுமதி உண்டு. ஏனைய நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரைக்கும் உண்டு.
- முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலேயே மாத்ரிமந்திரினுள் செல்ல அனுமதிக்கப் பெறுவதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. மழைநாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட தினங்களில் மாத்ரி மந்திருக்குள் செல்ல அனுமதிக்கப் பெறாத நிலையில் முன்கூட்டியே அதற்கான தகவல்களைத் தெரிந்து கொண்டு வருவது நல்லது. முக்கியமாக, சிறப்பு அனுமதி பெற்றுத் தருவதாகவோ, பிற சலுகைகள் செய்வதாகவோ சொல்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
விமர்சனங்கள்
தொகு- குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரத்தில் அரோவிலுடன் தொடர்புள்ள ஒரு சிலர் ஈடுபட்டிருக்கலாம் என பிபிசி நிகழ்ச்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[1] அதை அரோவில் அமைப்பு முற்றிலும் மறுத்துள்ளது.
- தமிழ்க் கிராமங்களுக்கும் ஆரோவில்லுக்கும் இருக்கும் ஏற்றதாழ்வு
- ஆரோவில்லுக்கு பொறுப்பான தலைமை இல்லை - இந்திய நடுவண் அரசே பொறுப்பு.
- வரி இல்லை
வெளி இணைப்புகள்
தொகு- Auroville.org Main site
- Auroville Cultural Exchange பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்
- Communities Directory பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம் Fellowship for Intentional Community listing for Auroville.
ஆரோவில் தமிழ் நோக்கிய இணைப்புகள்
தொகு- http://www.auroville.org/society/Language_tamil.htm பரணிடப்பட்டது 2006-05-15 at the வந்தவழி இயந்திரம் Tamil
- http://www.auroville.org/thecity/bharat_nivas/tamil_heritage_centre.htm பரணிடப்பட்டது 2006-10-04 at the வந்தவழி இயந்திரம் Tamil Heritage Centre (THC)
- http://www.auroville.org/journals&media/avtoday/may_2003/tamil_heritage.htm பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம் Why Tamil Nadu?
- Auroville Scientific Research[தொடர்பிழந்த இணைப்பு]