ஆர்எச் குருதி குழு முறைமை
ஆர்எச் குருதி குழு முறைமை (Rh blood group system) என்பது தற்போது அறியப்பட்டுள்ள 30 குருதிக் குழு முறைமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏபிஓ குருதி குழு முறைமைக்கு அடுத்தபடி முக்கியமானதாக இந்த முறைமை கருதப்படுகின்றது. இந்த ஆர்எச் குருதி குழு முறைமையில் தற்போது 50 குருதிக்குழு பிறபொருளெதிரியாக்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், D, C, c, E, e ஆகிய ஐந்து பிறபொருளெதிரியாக்கிகளே மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆர்எச் காரணி (Rh factor), ஆர்எச் நேர் (Rh positive), ஆர்எச் எதிர் (Rh negative) என்ற பதங்கள் பிறபொருளெதிரியாக்கி D ஐயே குறிக்கும். ஆர்எச் நேர் என்பது ஆர்எச் காரணி உள்ள குருதியையும், ஆர்எச் எதிர் என்பது ஆர்எச் காரணி அற்ற குருதியையும் குறிக்கும்.
இந்த ஆர்எச் குருதி குழு முறைமையின், முக்கியமாக D பிறபொருளெதிரியாக்கியின், முக்கியத்துவமானது குருதி மாற்றீட்டின்போது மட்டுமன்றி, குழந்தை பிறப்பில், புதிதாகப் பிறக்கும் குழந்தையில் ஏற்படக்கூடிய Hemolytic disease of the newborn or erythroblastosis fetalis என்ற நிலையிலும் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. தகுந்த சோதனைகள் மூலம், ஆரம்பத்திலேயே இந்நிலை தோன்றக்கூடும் என்பதை எதிர்வுசொல்வது இலகுவாக இருப்பதனால், இந்த நிலைக்கு முதலிலேயே தடுப்பு நடவடிக்கை செய்வது அவசியமாகும்.
ஆர்எச் காரணி
தொகுஒவ்வொரு மனிதனிலும் உள்ள குருதியிலுள்ள குருதிச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் ஆர்எச் காரணி இருக்கலாம், அல்லது இல்லாமல் போகலாம். ஆர்எச் காரணி இருக்குமாயின் அவர் ஆர்எச் நேர் (Rh+) உள்ளவர் என்றும், இல்லாதுவிடின் ஆர்எச் எதிர் (Rh-) உள்ளவர் என்றும் கூறுவோம். இங்கே முக்கியமாக D பிறபொருளெதிரியாக்கியே கருதப்படும். D பிறபொருளெதிரியாக்கி இருப்பின் ஆர்எச் நேர் என்றும், D பிறபொருளெதிரியாக்கி இல்லாதுவிடின் ஆர்எச் எதிர் என்றும் அமையும். இதனை குறியிடும்போது பொதுவாக ABO வகையினைக் குறிப்பிட்டு, அதனைப் பின்னொட்டாக நேர் அல்லது எதிர் குறியீட்டை வழங்குவர்.
எ.கா.:
- (A +) என்பது A வகைக்குருதியில் Rh + இருப்பது ஆகும். அதாவது A வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கியையும் கொண்ட குருதியாகும்.
- (B -) என்பது B வகைக்குருதியில் Rh - இருப்பது ஆகும். அதாவது B வகைக் குருதியாக இருக்கும் அதேநேரம், அங்கே ஆர்எச் காரணியான D பிறபொருளெதிரியாக்கி அற்ற குருதியாகும்.
D பிறபொருளெதிரியாக்கியே முதன்மையானதாகக் கருதப்படினும், இந்த குருதி குழு முறைமையில் உள்ள ஏனைய பிறபொருளெதிரியாக்கிகளும் தொடர்புடையவையே.
பாரம்பரியம்
தொகுD பிறபொருளெதிரியாக்கி உருவாகக் காரணமாக முதலாவது நிறப்புரியின் குறுங்கை இழையில் உள்ள ஒரு மரபணுவே (RHD) காரணமாக உள்ளது. இதில் வேறுபட்ட மாற்றுருக்கள் காணப்படும். குறிப்பிட்ட மரபணுவானது D பிறபொருளெதிரி புரதத்திற்கான குறியாக்க வரிசையைக் (coding sequence) கொண்டுள்ளது. அந்த மரபணு தொழிற்படும் நிலையில் இருக்கையில், அது ஆர்எச் நேராக (D+) இருக்கும். D- தனியன்களில், இந்த தொழிற்படும் புரதத்திற்கான மரபணுவில் குறைபாடு இருந்திருக்கும். இதனால் இவ்வகைத் தனியன்களில் அதற்கெதிரான பிறபொருளெதிரி உருவாகும்.
ஆர்எச் காரணியில் அடுத்து வரும் C, c, E, e என்னும் பொதுவான நான்கு பிறபொருளெதிரியாக்கிகளுக்கான எபிடோப்களில் (epitopes), வேறொரு மரபணுவினால் (RHCE) குறியாக்கம் செய்யப்படும் RhCE புரதத்தில் வெளிப்படுத்தப்படும். முதனி கூர்ப்பு நடைபெற்றபோது, RHCE இரட்டிப்பினால் RHD உருவாகியதாகக் ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. எலிகளில் RH மரபணு மட்டுமே உள்ளது [1].
குருதி மாற்றீடு
தொகுகுருதி மாற்றீட்டின்போது ABO குருதிவகையுடன் சேர்த்து ஆர்எச் (நேர் / எதிர்) வகையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகின்றது.
பெறுநர் | வழங்கி | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
O+ | A+ | B+ | AB+ | O- ** | A- | B- | AB- | |
O+ | • | • | ||||||
A+ | • | • | • | • | ||||
B+ | • | • | • | • | ||||
AB+ * | • | • | • | • | • | • | • | • |
O- | • | |||||||
A- | • | • | ||||||
B- | • | • | ||||||
AB- | • | • | • | • |
- * பொது வழக்கில் AB வகைக்குருதி ஒரு பொது வாங்கி என அழைக்கப்பட்டாலும், உண்மையில் AB+ மட்டுமே பொது வாங்கி. AB- பொது வாங்கி அல்ல.
- ** A-, A+, B-, B+, AB-, AB+, O-, O+ ஆகிய எவ்வகைக் குருதியுள்ளவருக்கும் O- குருதிவகை வழங்கப்பட முடியும் ஆதலினால் O- மட்டுமே பொது வழங்கியாக இருக்கலாம். பொது வழக்கில் O வகைக்குருதி பொது வழங்கி என அழைக்கப்படாலும், O+ பொது வழங்கி அல்ல.
பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்
தொகுகருத்தரிப்பின்போது, தாயின் குருதியும், சேயின் குருதியும் நேரடியாகக் கலப்பது இல்லையென்பதால் அவை இரண்டும் ஒவ்வாமை வகைகளாக இருப்பினும், வேறு ஏதாவது குறிப்பான நிலைகளில் குருதிக்கலப்பு ஏற்படாத வரையில், ஆபத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. பொதுவாக தாயிடமிருந்து முதிர்கருவிற்குத் தேவையான ஊட்டச்சத்து, ஆக்சிசன் போன்றன நஞ்சுக்கொடி ஊடான கடத்தலாலேயே நிகழும். ஆனாலும் கருச்சிதைவு, கருக்கலைப்பு, குழந்தை பிறப்பு போன்ற பிரத்தியேகமான நிலைமைகளில் தாயினதும், சேயினதும் குருதிகள் கலப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். அந்நிலையில் குருதியில் ஒவ்வாமை இருப்பின், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்நோய் நிலையானது மிதமான அளவிலிருந்து, தீவிரமான நிலைவரை வேறுபடலாம்.
பொதுவாக இந்நோய் நிலையானது Rh- தாய்க்கு Rh+ குழந்தை முதலில் உருவாகி (அதற்கு தந்தை Rh+ ஆக இருந்திருப்பார்), இரண்டாவது அல்லது அதைத் தொடர்ந்து வரும் கருத்தரிப்பிலேயே நிகழும். தாய்க்கு Rh- இருப்பதனால், முதலாவது குழந்தை பிறப்பின்போது தாய், குழந்தையின் குருதிக்கு வெளிப்படுத்தப்பட்டால், குழந்தையிலுள்ள Rh+ பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான எதிர்-Rh (anti-Rh antobody) பிறபொருளெதிரி தாயில் உருவாகும். இந்த பிறபொருளெதிரியானது IgG யாக இருக்க முடியும். தாயில் இருக்கும் அந்த பிறபொருளெதிரியானது, மீண்டும் ஒரு Rh+ குழந்தை உருவாகினால், நஞ்சுக்கொடியூடாக கடத்தப்பட்டு குழந்தையில் உள்ள Rh பிறபொருளெதிரியாக்கியுடன் தாக்கமுற்று நோய் நிலையை ஏற்படுத்தும்.
மக்கள்தொகையில் Rh பரம்பல் தரவுகள்
தொகுமக்கள்தொகையில் ஆர்எச்டி (RhD) காரணி அற்ற குருதிவகையும், ஆர்எச்-டி-எதிர் (RhD-) மாற்றுரு இருக்கும் அளவும் வேறுபடுகின்றது. காரணம் RhD- மாற்றுருவானது, RhD+ மாற்றுருவுடன் சேர்ந்திருக்கையில் RhD காரணியை உருவாக்குவதனால், RhD+ குருதி வகையையே தரும். இரு RhD- மாற்றுருக்கள் சேர்ந்திருக்கையில் மட்டுமே RhD factor ஐ உருவாக்க முடியாதநிலையில் RhD- ஆக இருக்கும்.
மக்கள்தொகை | Rh(D) எதிர் | Rh(D) நேர் | Rh(D) எதிர் மாற்றுரு |
---|---|---|---|
பாஸ்கு மக்கள்[3] | 21–36%[4] | 65% | அண்ணளவாக 60% |
ஏனைய ஐரோப்பியர்கள் | 16% | 84% | 40% |
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் | அண்ணளவாக 7% | 93% | அண்ணளவாக 26% |
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்கள் | அண்ணளவாக 1% | 99% | அண்ணளவாக 10% |
ஆப்பிரிக்கானர் பரம்பரையினர் | 1% ஐ விடக் குறைவு | 99% ஐ விட அதிகம் | 3% |
ஆசிய மக்கள் | 1% ஐ விடக் குறைவு | 99% ஐ விட அதிகம் | 1% |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wagner FF, Flegel WA (Mar 2002). "RHCE represents the ancestral RH position, while RHD is the duplicated gene". Blood 99 (6): 2272–3. doi:10.1182/blood-2001-12-0153. பப்மெட்:11902138. http://www.bloodjournal.org/cgi/pmidlookup?view=long&pmid=11902138. பார்த்த நாள்: 2011-11-14.
- ↑ Mack, Steve (March 21, 2001). "Re: Is the RH negative blood type more prevalent in certain ethnic groups?". MadSci Network.
- ↑ Basque_people
- ↑ Touinssi, Mhammed; Chiaroni, Jacques; Degioanni, Anna; De Micco, Philippe; Dutour, Olivier; Bauduer, Frédéric (2004). "Distribution of rhesus blood group system in the French basques: a reappraisal using the allele-specific primers PCR method". Human Heredity 58 (2): 69–72. doi:10.1159/000083027. பப்மெட்:15711086.