ஆர்க்டிக் வட்டம்

(ஆர்ட்டிக் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) என்பது ஐந்து முதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்களுள் ஒன்று. இது நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 66° 33′ 39″ (அல்லது 66.56083°) இல் அதற்கு இணையாக அமைந்துள்ளது. இவ்வட்டத்துக்கு வடக்கில் உள்ள பகுதி ஆர்க்டிக் எனவும், அதற்கு அருகே தெற்கில் அமைந்துள்ள பகுதி வட மிதவெப்ப வலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. இதை ஒத்துத் தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ள வட்டம் அந்தாட்டிக்கா வட்டம் எனப்படுகிறது.

உலகப் படத்தில் ஆர்க்டிக் வட்டம் செந் நிறக் கோடாகக் காட்டப்பட்டுள்ளது
அலாஸ்காவில் ஆர்க்டிக் வட்டத்தைக் குறிக்கும் ஒரு அறிவிப்புப் பலகை. டால்டன் நெடுஞ்சாலையில் உள்ளது.

ஆர்க்டிக் வட்டம் 24 மணிநேர சூரிய ஒளி இருக்கும் துருவ நாளினதும், 24 மணிநேரம் சூரியனே தென்படாத துருவ இரவினதும் தென் எல்லையைக் குறிக்கிறது. ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே ஆண்டுக்கு ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் சூரியன் அடிவானத்துக்கு மேலும், அதே போல் ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் அடிவானத்துக்குக் கீழும் இருக்கும். ஆர்க்டிக் வட்டத்தில் இந் நிகழ்வுகள் சரியாக ஆண்டுக்கு ஒருமுறை முறையே ஜூன் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் ஞாயிற்றுக் கணநிலை நேரத்தில் இடம்பெறும்.[1][2][3]

வளிமண்டல ஒளிமுறிவு காரணமாகவும், சூரியன் ஒர் புள்ளியாக அன்றி வட்டவடிவத் தட்டுப்போல் இருப்பதாலும், கோடைகால ஞாயிற்றுக் கண நேரத்தில் நள்ளிரவுச் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்குத் தெற்கே 50 (90 கிமீ) வரை தெரியும். இது போலவே மாரிகால ஞாயிற்றுக் கணநிலை நேர நாளில் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 50 வரை தெரியும். இது கடல் மட்டத்திலேயே உண்மையாக இருக்கும், உயரம் கூடும்போது இந்த எல்லைகள் மாறுபடும்.

புவியியலும் மக்கட் பரம்பலும்

தொகு

ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கில் முக்கியமாக ஆர்க்டிக் பெருங்கடலே காணப்படுகின்றது. இது பெரும்பாலும் பனிக் கட்டிகளினால் மூடப்பட்டு இருக்கும். எனினும், குறிப்பிடத்தக்க அளவு நிலப்பகுதிகளும் இவ் வட்டத்துள் அடங்குகின்றன. ஆர்க்டிக் வட்டம் எட்டு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது.

முதன்மை நெடுவரையில் தொடங்கி, ஆர்க்டிக் வட்டம் பின்வரும் நாடுகளூடாகச் செல்கிறது:

நாடு, ஆட்சிப்பகுதி அல்லது கடல் குறிப்புகள்
ஆர்க்டிக் பெருங்கடல் நார்வேக் கடல்
  நோர்வே
  சுவீடன்
  பின்லாந்து
  உருசியா
வெண் கடல் கண்டலாஸ்கா குடா
  உருசியா கோலா தீவக்குறை
வெண் கடல்
  உருசியா
ஆப் குடா
  உருசியா
ஆர்க்டிக் பெருங்கடல் சுக்சி கடல்
  ஐக்கிய அமெரிக்கா செவார்ட் தீவக்குறை, அலாஸ்கா
ஆர்க்டிக் பெருங்கடல் கொட்சேபு சவுண்ட்
  ஐக்கிய அமெரிக்கா செலாவிக் ஏரி உட்பட அலாஸ்கா
  கனடா யூகோன்
பெருங் கரடி ஏரி உட்பட்ட
வடமேற்கு ஆட்சிப்பகுதிகள்
நுனாவுத்
Foxe Basin
  கனடா பாஃபின் தீவு, நுனாவுத்
அத்லாந்திக் பெருங்கடல் டேவிஸ் நீரிணை
  கிறீன்லாந்து
அத்லாந்திக் பெருங்கடல் டென்பார்க் நீரிணை
  ஐசுலாந்து கிரிம்சே தீவு
ஆர்க்டிக் பெருங்கடல் நார்வேக் கடல்

குளிர் காரணமாக மிகக் குறைவான மக்களே ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே வாழ்கின்றனர். முர்மான்ஸ்க் (325,100 மக்கள்), நோரில்ஸ்க் (135,000 மக்கள்), வோர்குட்டா (85,000 மக்கள்) ஆகியோரே ஆர்க்டிக் வட்டத்துள் வாழும் மூன்று பெரிய இனத்தவர் ஆவர். இவர்கள் ரஷ்யாவில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர நார்வேயில், 62,000 மக்கள்தொகை கொண்ட டிரோம்சோ இனத்தவரும் உள்ளனர். ஏறத்தாழ 58,000 பேர் கொண்ட பின்லாந்தில் வாழும் ரோவனீமி இனத்தவர் வட்டத்துக்குச் சற்று தெற்கே வாழுகின்றனர்.

புவி சூடாதல் தொடர்பில் அண்மைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டப் பகுதிகள் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து வருகின்றன. புவியின் துருவப் பகுதிகளே விரைவில் சூடேறும் என்பதும் அதனால், வரப்போவதை முன்னரே அறிந்து கொள்ளக்கூடிய இடமாகத் துருவப் பகுதிகள் இருக்கும் என்பதனாலுமே முதலில் அறிவியலாளர் கவனம் இப் பகுதிகள் நோக்கித் திரும்பியது. ஆர்க்டிக் வட்டத்தினுள் பனிக்கட்டிகள் உருகுவதனால், கப்பல் போக்குவரத்துக்கான வடமேற்குப் பாதை கப்பல் பயணங்களுக்குக் கூடுதல் தகுதி வாய்ந்ததாக மாறி வருகிறது. இது, எதிர் காலத்தில் இப்பகுதி முக்கிய வணிகப் பாதையாக மாறக்கூடிய சாத்தியத்தைத் தோற்றுவித்துள்ளது. இது தவிர இப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளங்கள் இருக்கக்கூடும் என்றும், பனிக்கட்டி உருகும்போது இவற்றை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Arctic FAQ - Frequently Asked Questions about the Arctic".
  2. "40 days without the sun. How? Polar Night begins in Murmansk". Auroravillage.info. 3 December 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  3. Burn, Chris. The Polar Night (PDF). The Aurora Research Institute. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்டிக்_வட்டம்&oldid=4147900" இலிருந்து மீள்விக்கப்பட்டது