ஆர்னெம் சண்டை

ஆர்னெம் சண்டை (Battle of Arnhem) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் பிரித்தானிய வான்குடை வீரர்கள் நெதர்லாந்தில் ரைன் ஆற்றின் மீதமைந்திருந்த ஆர்னெம் பாலத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றனர்.

ஆர்னெம் சண்டை
மார்க்கெட் கார்டன் நடவடிக்கையின் (இரண்டாம் உலகப் போரின்) பகுதி

செப்டம்பர் 19ல் ஆர்னெம் பாலம்
நாள் செப்டம்பர் 17–26, 1944
இடம் நெதர்லாந்து
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 போலந்து
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ராய் உர்குஹார்ட்
போலந்து ஸ்டானிஸ்லா சொசாபோஸ்கி
ஐக்கிய இராச்சியம் ஜான் டட்டன் ஃபிராஸ்ட்
நாட்சி ஜெர்மனி வால்டர் மோடல்
நாட்சி ஜெர்மனி வில்லம் பிட்ரிக்
பலம்
பிரித்தானிய முதலாம் வான்குடை டிவிசன்
போலந்திய முதலாம் வான்குடை சுதந்திர பிரிகேட்
ஒரு காம்ப்குரூப்பே (சண்டையின் ஆரம்பத்தில்)
ஒரு கவச டிவிசன்
இழப்புகள்
~ 1,984 மாண்டவர்
6,854 கைப்பற்றப்பட்டவர்
~ 1,300 மாண்டவர்
2,000 காயமடைந்தவர்

1944ம் ஆண்டு நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியைத் தாக்கத் திட்டமிட்டன. ஜெர்மானிய எல்லை அரண் கோடான சிக்ஃபிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக நெதர்லாந்தில் உள்ள முக்கிய பாலங்களைக் கைப்பற்றி குறுகிய முனையில் தாக்குதல் நிகழ்த்துவது என்று நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். இதற்காக மார்க்கெட் கார்டென் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வான்குடை வீரர்கள் நெதர்லாந்து வான்வெளியிலிருந்து குதித்து பாலங்களை முதலில் கைப்பற்ற வேண்டும். முன்னேறி வரும் நேசநாட்டுத் தரைப்படைகள் பாலங்களை அடையுவரை அவற்றை ஜெர்மானியர்கள் குண்டு வைத்து தகர்க்காமல் பாதுகாக்க வேண்டும். இதுவே இந்த நடவடிக்கையின் நோக்கம். மார்க்கெட் கார்டனின் இலக்குகளில் ஒன்று ஆர்னெம் நகரில் ரைன் ஆற்றின் மீது அமைந்திருந்த பாலம். குறிவைக்கப்பட்ட பாலங்களுள் அதுவே நேசநாட்டுப் படை நிலைகளிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருந்தது. அதனைக் கைப்பற்றும் பொறுப்பு பிரித்தானிய முதலாம் வான்குடை டிவிசன் மற்றும் போலந்திய சுதந்திர வான்குடை பிரிகேட் ஆகிய படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

செப்டம்பர் 17ம் தேதி நேச நாட்டு வான்குடை வீரர்கள் வான் வழியாக ஆர்னெம் பாலத்தைத் தாக்கினர். ஆனால் தரையிறங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தால், திட்டமிட்டவற்றுள் ஒரு சிறு படை மட்டுமே ஆர்னெம் பாலத்தை அடைய முடிந்தது. ஏனைய படைகள் அப்பகுதியில் ஓய்வு எடுப்பதற்காக தங்கியிருந்த எஸ். எஸ் படைப்பிரிவுகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. எதிர்பார்த்ததை விட ஜெர்மானிய எதிர்வினை கடுமையாக இருந்ததால், நேசநாட்டுத் தரைப்படைகளாலும் (முப்பதாவது கவச [[கோர் (படைப்பிரிவு)|கோர்) திட்டமிட்டபடி முன்னேறி ஆர்னெம் பாலத்தை அடைய முடியவில்லை. ஆர்னெம் பாலத்தின் ஒரு முனை பிரித்தானிய வீரர்கள் வசமும் மற்றொரு முனை ஜெர்மானியர் வசமும் இருந்தன. நான்கு நாட்கள் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களைச் சமாளித்த பிரித்தானிய படையினர் செப்டம்பர் 21ம் தேதி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் எஞ்சியிருந்த நேச நாட்டுப் படைகளை ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைத்து அழிக்க முயன்றன. ஆர்னெம் நகரத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கடும் சண்டை நடந்தது. செப்டம்பர் 25-26ல் மிஞ்சியிருந்த நேசநாட்டுப் படைகள் பின்வாங்கி ரைன் ஆற்றைக் கடந்து தப்பின. இச்சண்டை ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது. பின்னாளில் இச்சண்டையை பற்றி எ பிரிட்ஜ் டூ ஃபார் என்ற பெயரில் புத்தகம் வெளியாகி அதன் அடிப்படையில் ஒரு ஆங்கிலத் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னெம்_சண்டை&oldid=4071807" இலிருந்து மீள்விக்கப்பட்டது