ஆர். முத்தையா
ஆர். முத்தையா (24 பெப்ரவரி 1886 - ) தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார்.[1] இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
ஆர். முத்தையா | |
---|---|
தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா | |
பிறப்பு | சுண்டிக்குளி, யாழ்ப்பாணம், இலங்கை | 24 பெப்ரவரி 1886
இறப்பு | சிங்கப்பூர் |
அறியப்படுவது | தமிழ்த் தட்டச்சுப்பொறியை உருவாக்கியவர் |
பெற்றோர் | இராமலிங்கம் |
பிறப்பும் வாழ்க்கையும்
தொகுமுத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் 1886 பெப்ரவரி 24 இல் பிறந்தார்.[2] இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கத்திற்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்ணியோவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வணிக நிறுவனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம எழுத்தராக உயர்ந்து, 1930 வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார்.
தட்டச்சுப்பொறி உருவாக்கம்
தொகுஇவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
தொழினுட்பம்
தொகுமுத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக் கையின் சிறு விரலால் இயக்குவர்.
முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
உற்பத்தி
தொகுமுதலாம் உலகப் போர் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை செருமனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வணிக நிறுவனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ்", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.
சமூக சேவைகள்
தொகுமுத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாமணி ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு உழைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் அச்சாவதற்கு முன்னரே அவர் காலமாகிவிட்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆர்.முத்தையா 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
- ↑ "தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886". Maalaimalar (in English). 2021-02-24. Archived from the original on 2021-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "பிப்ரவரி-24.📃 📜 *தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய-ஆர்.முத்தையா (R.Muttiah) பிறந்த தினம்". Tamil Science News. Archived from the original on 2021-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.