இசுப்பைனோசோரசு
இசுப்பைனோசோரசு (Spinosaurus) என்பது, தெரோபாட் டைனோசோரின் ஒரு பேரினம் ஆகும். இது, ஏறத்தாழ 112 முதல் 93.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், கிரேத்தாசியசுக் காலத்தின், மேல் அல்பிய நிலைக்கும் துரோனிய நிலைக்கும் இடையில், இன்று வட ஆப்பிரிக்கா இருக்கும் இடத்தில் வாழ்ந்தது. 1912 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 1915 இல் செருமானியத் தொல்பழங்காலவியலாளரான ஏர்ணெஸ்ட் இசுட்ரோமர் என்பவரால் விளக்கம் கொடுக்கப்பட்ட எகிப்திய எச்சங்கள் மூலமாகவே இப்பேரினம் முதன் முதல் அறியப்பட்டது. முதல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அழிந்து போனாலும், இப்பேரினத்தின் புதிய எச்சங்கள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அறிவியல் எழுத்துக்களில் வெளிவந்துள்ள புதைபடிவங்கள் ஒரு இனத்தையா அல்லது இரண்டு இனங்களைச் சேர்ந்தவையா என்பது தெளிவில்லை. எகிப்தில் கிடைத்த, பெரிதும் அறியப்பட்ட இனம் இசு. எஜிப்ரியாக்கசு (S. aegyptiacus) எனப்படுகிறது. ஆனால், மொரொக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சம், இசு. மரோக்கனசு (S. maroccanus) எனப்படும் இரண்டாவது இனத்துக்கு உரியதாக இருக்க வாய்ப்புள்ளது.
இசுப்பைனோசோரசு புதைப்படிவ காலம்:தொடக்க–பிந்திய கிரேத்தாசியசு, | |
---|---|
நீந்தும் நிலையில் உள்ள மீட்டுருவாக்கப்பட்ட இசுப்பைனோசோரசு எழும்புக்கூடு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | இசுப்பைனோசோரசு |
மாதிரி இனம் | |
இசுப்பைனோசோரசு ஈஜிப்டியாக்கசு இசுட்ரோமர், 1915 | |
வேறு பெயர்கள் | |
|
இசுப்பைனோசோரசு அறியப்பட்ட எல்லாத் ஊனுண்ணி டைனோசோர்களுள் மிகப் பெரியனவற்றுள் அடங்குகின்றது. இது, டைரனோசோரசு, ஜைகனோட்டோசோரசு, கார்கரோடொன்டோசோரசு போன்றவற்றுக்கு ஏறத்தாழச் சமமான அல்லது அவற்றை விடப் பெரிய அளவு கொண்டவையாக இருக்கக்கூடும். 2005, 2007, 2008 ஆகிய ஆண்டுகளின் மதிப்பீடுகளின்படி இசுப்பைனோசோரசு, 12.6-18 மீட்டர் (41-59 அடிகள்) நீளமும், 7 தொடக்கம் 18 தொன்கள் எடையும் கொண்டவையாக இருந்திருக்கக்கூடும் என அறிய முடிகின்றது.[1][2][3] கூடுதலாக முழுமை பெற்ற மாதிரியொன்றின் அடிப்படையில், 2014 இல் வெளியான புதிய மதிப்பீடு ஒன்றின்படி, இசுப்பைனோசோரசு 15 மீட்டர்களுக்கும் (49 அடிகள்) கூடுதலான நீளத்தைக் கொண்டவையாக இருந்திருக்கக்கூடும்.[4] இசுப்பைனோசோரசின் மண்டையோடு, தற்கால முதலை இனத்தின் மண்டையோட்டைப் போல் நீளமும், ஒடுக்கமுமானது. இசுப்பைனோசோரசு மீன்களை உணவாகக் கொண்டதாகத் தெரிகிறது. இது நீர்வாழ் விலங்குகளையும், நிலத்தில் வாழும் விலங்குகளையும் உண்டிருக்கக்கூடும் எனப் பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். தற்கால முதலை இனங்களைப்போல் இசுப்பைனோசோரசு நீரிலும் நிலத்திலும் வாழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இசுப்பைனோசோரசின் முள்ளந்தண்டு தனித்துவமானது. இது குறைந்தது 1.65 மீட்டர் (5.4 அடி) நீளம் உள்ள பல வளர்ச்சிகளோடு கூடிய முதுகெலும்புகளைக் கொண்டது. இவை ஒன்றுடன் ஒன்று தோலால் இணைக்கப்பட்டுப் படகுகளின் பாய்போல் தோற்றம் அளித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஐல ஆய்வாளர்கள் இவை கொழுப்பால் சூழப்பட்டு திமில் போல் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதன் பயன்பாடு குறித்துப் பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விபரங்கள்
தொகுஇது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, இதுவே மிகவும் நீளமானதும் பெரியதும் ஆன தெரோபாட் டைனோசோர் ஆக இருக்கலாம் என்ற கருத்து இருந்து வருகிறது.[5] தாம் ஆய்வு செய்த தெரோபாடுகளுள் மிகப் பெரியவற்றுள் இதுவும் அடங்குவதாக 1928 இல் பிரீட்ரிக் வொன் உவேனும்,[6] 1982 இல் டொனால்டு எஃப். கிளட் என்பவரும் பட்டியல் இட்டுள்ளனர். மேற்படி பட்டியல்களின்படி இசுப்பைனோசோரசு 15 மீட்டர் நீளமும் 6 தொன்கள் எடையும் கொண்டது.[7] 1988 இல் கிரெகரி பால் என்பவரும் இதன் நீளம் 15 மீட்டர் ஆகவும், எடை 4 தொன்களாகவும் கொண்டு இதை மிக நீளமான தெரோபாடு ஆகப் பட்டியல் இட்டுள்ளதுடன், 4 தொன் என்னும் குறைவான உடல் எடை மதிப்பீட்டையும் கொடுத்துள்ளார்.[8]
2005 இல் தால் சாசோவும் மற்றவர்களும், இசுப்பைனோசோரசும், சுச்சோமினசும் அவற்றின் மண்டையோட்டின் நீளத்துக்குச் சார்பாக ஒரே உடல் அளவு விகிதத்தைக் கொண்டவை என்ற அடிப்படையில் இசுப்பைனோசோரசுவின் நீளத்தையும் எடையையும் கணித்தனர். இதன்படி, நீளம் 16 தொடக்கம் 18 மீட்டர்கள் வரையும், எடை 7 தொடக்கம் 9 தொன்கள் வரையும் இருக்கக்கூடும் என்றனர்.[3] எனினும் இந்த மதிப்பீடு விமர்சனங்களுக்கும் உள்ளானது. 2007 ஆம் ஆண்டில் பிரான்கோயிசு தெரீன், டொனால்ட் என்டர்சன் ஆகியோர், தமது ஆய்வுக் கட்டுரை ஒன்றில், மண்டையோட்டு நீளத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின்படி முன்னைய மதிப்பீடுகள் உடல் நீளத்தை மிகவும் கூடுதலாகவும், எடையை மிகக் குறைத்தும் காட்டுவதாகக் குறிப்பிட்டனர்.[2] 1.5 - 1.75 மீட்டர்கள் மண்டையோட்டு நீளத்தை அடிப்படையாகக் கொண்டு, உடல் நீளம் 12.6 - 14.3 மீட்டர்கள் ஆகவும், உடல் எடை 12.0 - 20.6 தொன்கள் ஆகவும் இருக்கும் என அவர்கள் மதிப்பிட்டனர்.[2]
இசுப்பைனோசோரசுவின் நீளம், எடை ஆகியவற்றைச் சரியாக மதிப்பிடுவதற்குக் கூடுதல் முழுமையான எச்சங்களைக் கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக இதுவரை கண்டுபிடிக்கப்படாத கால் எலும்புகளைக் கண்டுபிடிப்பது முக்கியமானது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Holtz, Thomas R. Jr. (2012) Dinosaurs: The Most Complete, Up-to-Date Encyclopedia for Dinosaur Lovers of All Ages, Winter 2011 Appendix.
- ↑ 2.0 2.1 2.2 Therrien, F.; Henderson, D.M. (2007). "My theropod is bigger than yours...or not: estimating body size from skull length in theropods". Journal of Vertebrate Paleontology 27 (1): 108–115. doi:10.1671/0272-4634(2007)27[108:MTIBTY]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-4634.
- ↑ 3.0 3.1 3.2 dal Sasso, C.; Maganuco, S.; Buffetaut, E.; Mendez, M.A. (2005). "New information on the skull of the enigmatic theropod Spinosaurus, with remarks on its sizes and affinities". Journal of Vertebrate Paleontology 25 (4): 888–896. doi:10.1671/0272-4634(2005)025[0888:NIOTSO]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-4634. http://www.bioone.org/perlserv/?request=get-abstract&doi=10.1671%2F0272-4634%282005%29025%5B0888%3ANIOTSO%5D2.0.CO%3B2.
- ↑ Ibrahim, Nizar; Sereno, Paul C.; Dal Sasso, Cristiano; Maganuco, Simone; Fabri, Matteo; Martill, David M.; Zouhri, Samir; Myhrvold, Nathan et al. (2014). "Semiaquatic adaptations in a giant predatory dinosaur". Science 345 (6204): 1613–6. doi:10.1126/science.1258750. பப்மெட்:25213375. http://www.sciencemag.org/content/345/6204/1613.abstract. Supplementary Information
- ↑ "nationalgeographic.com 'River Monster': 50-Foot Spinosaurus". Archived from the original on 2017-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
- ↑ von Huene, F.R. (1926). "The carnivorous saurischia in the Jura and Cretaceous formations principally in Europe". Rev. Mus. La Plata 29: 35–167.
- ↑ Glut, D.F. (1982). The New Dinosaur Dictionary. Secaucus, NJ: Citadel Press. pp. 226–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-0782-9.
- ↑ Paul, G.S. (1988). "Family Spinosauridae". Predatory Dinosaurs of the World. New York: Simon & Schuster. pp. 271–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-61946-2.