இயற்கைத் தேர்வு

இயற்கைத் தேர்வு (natural selection) என்பது சுற்றுச்சூழலின் பண்புகளைப் பொறுத்து ஒரு சனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள், மற்றும் மரபியல் குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது அறிவியல் சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் சார்லஸ் டார்வின் என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே பரிணாம வளர்சிக்கான ஒரு மத்திய பொறிமுறை.

எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த சந்ததிகளூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு உயிரினம் தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் உயிரணுக்களின் மூலக்கூற்று உயிரியல், ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும்.

இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும். இயற்கைத் தேர்வு (Natural selection) என்ற சொற்பதம் முதன் முதலில் சார்ல்ஸ் டார்வினால் அவர் 1859 இல் எழுதிய உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) என்ற நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

முக்கிய நியமங்கள்

தொகு

இயற்கைத் தேர்வானது இயற்கைச் சூழலிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை வெற்றியை நிர்ணயிக்கும் செயற்பாடாகும். உதாரணமாக வேகமாக ஓடும் முயலால் இரைகௌவிகளிடமிருந்து தப்பி வாழ முடியும். காலப்போக்கில் வேகமாக ஓட முடியாத முயல்கள் இரைகௌவிகளிடம் பிடிபட்டு கொன்றுண்ணலால் அழிவடைய வேகமாக ஓடும் முயல்களின் இனப்பெருக்கத்தால் உருவாகும் முயல்களே தப்பும். எனவே முயல் கூட்டமொன்றில் வேகமாக ஓடும் முயல்களின் மரபணு நிலைத்திருத்தல் இயற்கைத் தேர்வுக்கு உதாரணமாகும்.

 
வெள்ளை நிற அந்துப்பூச்சி கண்ணுக்கு இலகுவில் புலப்படாத அதேவேளை கறுப்பு நிற அந்து தெளிவாகத் தெரிகின்றது. எனவே கறுப்பு நிற அந்துக்கள் பறவைகளுக்கு இலகு இரைகளாகக் காணப்பட்டன.

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth (Biston betularia) எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica அல்லது betularia எனப்படும் வெளிர் நிற வகையும், carbonaria எனப்படும் கருமை நிற வகையும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் மரங்களிலுள்ள பாசிக்காளான்களின் (Lichen) வெளிர் நிறத்தையொத்த அந்துப்பூச்சியின் வகை அதிகளவில் காணப்பட்டது. இதற்குக் காரணம் மரத்தண்டிலுள்ள பாசிக்காளான்களின் நிறத்தோடு ஒத்திருந்ததால், வெளிர் நிறமானவை பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ந்த கைத்தொழில் புரட்சியின் பின், திடீரென ஏற்பட்ட தொழிற்சாலைகளின் மாசினால், மரத்தின் தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் கருமை நிறம் கொண்ட தனியன்கள் மான்செஸ்டர் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில், 1895 ஆம் ஆண்டளவில், இந்த அந்துப்பூச்சியில், 98 % கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் மிகவும் விரைவான மாற்றமாகும்.

சூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே மரபணு இருக்கையில் அமைந்துள்ள ஒரு மரபணுவின் இரு மாற்றுரு வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான மாற்றுரு ஆட்சியுடையதாக மாற்றம் பெற்று விட்டது. ஐரோப்பாவில் உள்ள இந்த உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமாக (insularia) உருவாகியுள்ளதாகவும், அது வேறு மாற்றுருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது[2][3].

கருமை நிறத்திற்குரிய மாற்றுரு சூழல் மாசு நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல் மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாக பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற மாற்றுருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது.

இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.

மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் பூச்சியுண்ணும் பறவைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் பூச்சிகளிலோ, அல்லது பட்டாம்பூச்சிகளிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை[2][4][5].

மேற்கூறிய நிகழ்விலிருந்து தக்கன பிழைத்தல் என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Darwin C (1859) On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life John Murray, London; modern reprint Charles Darwin, Julian Huxley (2003). On The Origin of Species. Signet Classics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-451-52906-5. Published online at The complete work of Charles Darwin online: On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life.
  2. 2.0 2.1 Majerus, Michael. 1998. Melanism: Evolution in Action. Oxford: Blackwell.
  3. Clarke, Cyril A.; Sheppard, Philip M. 1964. Genetic Control of the Melanic Form insularia of the Moth Biston betularia (L.)". Nature 202: 215
  4. Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In Genetic Polymorphism. Boston/London.: MIT Pr./Faber & Faber
  5. Kettlewell H.B.D. 1973. The Evolution of Melanism. Oxford: Oxford U. Pr.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_தேர்வு&oldid=3153096" இலிருந்து மீள்விக்கப்பட்டது