இரட்டைப்புலவர்

(இரட்டைப்புலவர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும் பண்டைய காலச் சுவடுகள் தெரிவிக்கின்றன.[1] இவர்கள் சிலேடையாகப் பாடுவதில் வல்லவராவர்.

பிறப்பு

தொகு

இவர்கள் சோழ நாட்டில் உள்ள ஆலந்துறையில் செங்குந்தர் குலத்தில் அத்தை மகன் மாமன் மகனாக பிறந்தவர்கள். வரபதியாட்கொண்டார் என்னும் சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பர். இவர்களை இளஞ்சூரியர், முதுசூரியர் எனவும் அழைப்பர்.

தமிழ்த் தொண்டு

தொகு

தெய்வத் திருவருளினால் கவி வகை எல்லாம் கசடறப் பாடுவதில் வல்லவர்கள். கலம்பகம் பாடுவதில் சிறப்புத் திறமை உடையவர்கள் என்பதால் பண்பாய கலம்பகத்திற் கிரட்டையர் என்னும் பாடற் புகழும் பெற்றவர்கள் போலும். முன்னீரடிகளையும் ஒருவர் பாடப் பின்னீரடிகளையும் மற்றவர் பாடி முடிப்பர். சிவதலத்திற்கு யாத்திரை சென்று அங்கே வீற்றிருக்கும் சிவன்மீது பல வகைச் செய்யுள்களைப் பாடியுள்ளனர். மேலும் வரபதியாட்கொண்டார் என்னும் சேர மன்னன்மீதும் பல பிரபுக்கள்மீதும் கவி பாடி பரிசிலும் பாராட்டும் பெற்றவர் என்பர்.

பாடிய நூல்கள்
தில்லைக் கலம்பகம்,
காஞ்சி ஏகாம்பர நாதருலா,
காஞ்சி ஏகாம்பரநாதர் வண்ணம்
திரு ஆமாத்துர்க் கலம்பகம்
தியாகேசர் பஞ்சரத்தினம்
இவர்கள் பாடியதாகக் கூறப்படும் நூல்கள்
மூவர் அம்மானைப் பாடல்கள்
தியாகேசர் பஞ்சரத்தினம்
மற்றும்
கச்சிக் கலம்பகம் [2][3]
கச்சி உலா [4]

முதலிய பிரபந்தங்கள் மற்றும் பல தனி நிலைச் செய்யுள்கள்

இரட்டைப் புலவர் சிறப்பு

தொகு

இங்கே அம்பலவா என்றவரையும் ஒருவர் கூற்று, மிகுதி மற்றவர் கூற்று. இது தாம் பாட்டுக்கு பரிசளிக்காதவரை சுட்டியது.

வெண்பா

மூடர் முன்னே பாடன் மொழிந்த லரிவரோ
ஆடெடுத்த தென்புலியூ ரம்பலவா- ஆடகப்பொற்
செந்திருவைப் போலணஙகைச் சிங்காரித் தென்னபயன் 
அந்தகனே நாயகனா னால்

இதில் தீராதோ என்றவரையும் ஒருவர் கூற்று, மிகுதி மற்றவர் கூற்று. மலைப் பாதையில் நடத்தல் குறித்த இவர்கள் கருத்து.

வெண்பா

குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து 
சென்று திரிவதென்றுந் தீராதோ-ஒங்றுங்
கொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின் 
இடாதோ நமக்கிவ் விடர்

இதில் வந்த்தென்னோ என்றவரையும் ஒருவர் கூற்று, மிகுதி மற்றவர் கூற்று. இது பரிசில் கொடுக்க நின்ற பாண்டிய மன்னனை தடுக்க முயன்ற அமைச்சரை நிந்தித்து கூறியது.

கட்டளைக்கலித்துறை

புராதன மான கவிப்புல வீரிந்தப் புன்குரங்கு 
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவந்த வாறு சொல்வேன் 
தராதல மன்னுந் தமிழ்மா றனையுந்தன்  றம்பியையும்
இராகவ னென்று மிலக்குவ னென்றும்வந் தெய்தியதே
அத்தை மகன்குரு டம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி
முத்தரில் ஓதிஏ கம்பர் உலாமுன் மொழிந்தவரும்
சித்தம் உவப்பத் திரிந்தோர்செங் குந்த சிலாக்கியரே

விளக்கம்: குருடராகிய(பார்வை இழந்தவராகிய) அத்தை மகன் முடவராகிய(கால் இழந்தவராகிய) அம்மான் மகன் என்னும் இருவரும், பார்வை இழந்தவர் கால் இல்லாதவரைத் தூக்கி நடக்க கால் இல்லாதவர் அவருக்கு வழிகாட்ட இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒரு பாடலின் முன் பகுதியை கால் இல்லாதவர் பாடுவது, பின் பகுதியை பார்வை இழந்தவர் பாடுவது என்ற பாகுபாட்டுடன் அழகிய அழியாத பாடல்களை இயற்றி, திருவேகம்பப் பெருமான் மீது ஏகாம்பர நாதருலாவை இயற்றி எல்லோரும் மனம் மகிழுமாறு கவி வல்லவர்களாக உலவிவந்த இரட்டைப்புலவர்கள் செங்குந்தர்களுக்குள்ளே உயர்ந்தோராவர்.[5]

குறிப்புகள்

தொகு
  1. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காஞ்சி திரு நாகலிங்க முனிவர், 1926.
  2. புலவர் புராணம் கூறுகிறது
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
  4. சோழமண்டல சதகம் கூறுகிறது
  5. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர், 1926.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைப்புலவர்&oldid=3619374" இலிருந்து மீள்விக்கப்பட்டது