இரண்டாம் உலகப்போரில் இலங்கை

இரண்டாம் உலகப்போர் துவங்கிய பின்னர், பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடாகிய இலங்கையில், சேர் தொன் பாரோன் சயதிலகவின் அரசு பிரித்தானிய மன்னருக்கும் அவரது அரசாங்கத்துக்கும் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதிப்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரின்போது இலங்கையின், கொழும்பு குதிரைப் பந்தயத் திடலிலிருந்து கிளம்பும் RAF பிரிசுட்டல் பிளென்கெய்ம் குண்டுவீச்சு வானூர்தி

போருக்கான ஆயத்தங்கள்

தொகு

1796இலிருந்து இலங்கைத்தீவின் கரையோரப் பகுதிகளை பிரித்தானியர் ஆக்கிரமித்திருந்தனர். எனினும், 1917ன் பின்னர் இங்கு பிரித்தானியப் படையினரின் ராணுவப் பாசறைகள் காணப்படவில்லை. சிலோன் பாதுகாப்புப் படை மற்றும் சிலோன் கடற்படைத் தன்னார்வலர் இருப்புக் காவற்படை ஆகியன ஆயத்தநிலையில் வைக்கப்பட்டு விரிவாக்கமும் செய்யப்பட்டன. அரச கடற்படை திருகோணமலையில் கடற்படைத் தளங்களைப் பேணிவந்தது. அத்துடன் போருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே அரச வான்படை திருகோணமலையின் சீனன்குடாவில் ஒரு வானூர்தித்தளத்தை உருவாக்கியிருந்தது.

சிங்கப்பூரின் வீழ்ச்சிக்குப் பின்னர், அரச கடற்படையின் கிழக்கிந்திய நிலையம் முதலில் கொழும்புக்கும், பின்னர் திருகோணமலைக்கும் மாற்றப்பட்டது. அட்மிரல் சேர் செஃப்ரி லேய்ட்டன் சிலோனுக்கான கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டதோடு, எயார் வைசு மார்சல் யோன் ட' அல்பயாக் வான்படைக் கட்டளைத் தளபதியாகவும், சேர் சேம்சு சோமெர்வில் பிரித்தானியக் கிழக்குக் கடற்படைத் தொகுதிக்கான கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.

நிலையான தரைப் பாதுகாப்பு முறைமையின் கீழ் கொழும்பில் நான்கு கரையோரக் காவல் நிலைகளும் திருகோணமலையில் ஐந்தும் காணப்பட்டன. இவையனைத்தும், போருக்கு முன்பாகவே ஏற்படுத்தப்பட்டுவிட்டன. 1941இலிருந்து வான் பாதுகாப்பு முறைமைகள் விரிவாக்கப்பட்டன. அரச வான்படை கொழும்புக்கு அருகிலுள்ள ரத்மலானையில் அமைந்திருந்த குடிசார் வானூர்தித் தளத்தைப் பிடித்துக்கொண்டது. அதனது தலைமையகம் கந்தவளையில் அமைந்திருந்தது. காலிக்கு அருகிலுள்ள கொக்கலையில் இன்னொரு வானூர்தித்தளம் விரைவாக அமைக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் பல தற்காலிக வானூர்தித்தளங்கள் அமைக்கப்பட்டன. கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் வானூர்தித் தளமே இவற்றுள் பெரியதாகும். அரச வான்படையின் சில குழுக்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. பொதுநலவாயப் படைகளின் சில அணிகளும் போர்க்காலத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்தன.

இலங்கைத் தன்னார்வலர்கள்

தொகு

ஏனைய பிரித்தானியக் குடியேற்றங்களில் செயற்படுத்தப்பட்ட கட்டாய இராணுவச் சேவை இலங்கையில் செயற்படுத்தப்படவில்லை. எனினும், இலங்கையர்கள் இராணுவச் சேவையில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர். பெருமளவானோர் போர்க்காலப்பகுதி நெடுகிலும் தன்னார்வலராகப் படைகளில் சேர்ந்தனர். இவர்களுள் பெரும்பாலானோர் சிலோன் பாதுகாப்புப் படையில் இணைந்தனர். இப்படை ஒரு இருப்புப் படைத் தொகுதி நிலையிலிருந்து, 10 காலாட்படை பற்றாலியன்களும், 3 பீரங்கிப் படைப் பிரிவுகளும், உதவிப் படைப் பிரிவுகளும் சேர்ந்த படைத் தொகுதியாக விரிவாக்கப்பட்டது. முதல்முறையாக இலங்கைப் படைப்பிரிவுகள் இலங்கைக்கு வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் களமிறக்கப்பட்டன. கோகோசு தீவுக் கலகத்துக்குப் பின்னர் இக் களமிறக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

இலங்கையர்கள் தொடர்ந்து தன்னார்வலராக பிரித்தானியத் தரைப்படை, அரச வான்படை மற்றும் அரச கடற்படை ஆகியவற்றில் சேர்ந்தனர். அவர்களுக்குத் துணையாக சிலோன் பாதுகாப்புப் படை வீரர்களும் போரிட்டனர். இவர்கள் பிரித்தானியத் தரைப்படையின் முன்னரங்கப் பிரிவுகளுக்கு இடமாற்றம் கோரினர். அவர்கள் பர்மாவிலும் பின்னர் மலாயாவிலும் பணியாற்றினர். இலங்கையர்கள் இத்தாலியில் அரசப் பொறியாளர் பிரிவிலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அரசத் தரைப்படைச் சேவைப் பிரிவிலும் பணியாற்றினர். 1வது பற்றாலியன், சிலோன் இராணுவக் காவற்துறைப் படைப்பிரிவு 1949 வரை மலாயாவில் பணியாற்றியது.[1]

போரின் போது பொதுநலவாயப் படைகளில் பணியாற்றியயோரில் பலர் 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை ஆயுதப்படைகளில் சேவையாற்றினர்; இவர்களுள் செனரல் டி. எஸ். ஆட்டிகல, மேசர் செனரல் அன்டன் முத்துக்குமாரு, மேசர் செனரல் பெர்ட்ரம் எய்ன், மேசர் செனரல் ரிச்சர்ட் உடுகம, மேசர் செனரல் H.W.G. விசேகோன், ரியர் அட்மிரல் ராசன் கதிர்காமர் மற்றும் எயார் வைசு மார்சல் எட்வேர்ட் அமரசேகர ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

சிலோன் கடற்படைத் தன்னார்வலர் இருப்புத் தொகுதி

தொகு

சிலோன் கடற்படைத் தன்னார்வலர் இருப்புத் தொகுதி அரச கடற்படையினுள் உள்வாங்கப்பட்டது. அண்டார்டிக் திமிங்கில வேட்டைப் படகுகள் கடற்கண்ணிவெடியகற்றும் படகுகளாக மாற்றப்பட்டன. இவற்றில் துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல் உணர்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பன பொருத்தப்பட்டன. இவற்றுள் H.M. கப்பல்களான ஓவர்டேல் வைக் (சிலோன் அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது கப்பல்), ஒகாபி, செம்லா, சம்பூர், ஒக்சா, பல்டா என்பனவும், H.M. இழுவைப் படகுகளான பார்னெட் மற்றும் சி405 என்பனவும் உள்ளடங்கும். இவற்றுக்கு மேலதிகமாக, இப்படையில், சில இயந்திர மீன்பிடிப் படகுகளும் ஏனைய பல்வேறு துணைப் படகுகளும் காணப்பட்டன. இப்படகுகள் CRNVR படையினரால் இயக்கப்பட்டன. இக்கப்பல்கள் துறைமுகங்களையும் துறைமுகங்களுக்கு வரும் நேசநாட்டுக் கப்பல்களையும் கண்ணிவெடிகளிலிருந்து பாதுகாக்கும் பணியைச் செய்தன. எனினும், சில நேரங்களில் இலங்கைக் கடற்பகுதிக்கு வெளியிலும் சில போர் நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்பட்டன. இக்காலப்பகுதியில், இக்கப்பல்கள் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகின. எனினும், சுட்டு வீழ்த்தப்பட்ட சப்பானிய விமானங்களிலிருந்து தேவையான தகவல்களைத் திரட்டியமை, பர்மா போர்முனை துவங்கியபின்னர், துறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அகுயாப்புக்குச் சென்றமை, இத்தாலிய குடியேற்றக் கப்பலான, எரித்திரியாவின் சரணடைவை ஏற்றுக்கொள்ளல் மற்றும் அக்கப்பலை துறைமுகத்துக்குக் கொண்டு வருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் இவை ஈடுபட்டன.

கோகோசுத் தீவுக் கலகம்

தொகு

பிரின்சு ஒஃப் வேல்சு சண்டைக் கப்பல் மற்றும் ரிபல்சு குரூசர் ஆகியவை மூழ்கடிக்கப்பட்டமையாலும், சிங்கப்பூரின் வீழ்ச்சியாலும் பிரித்தானியாவின் முறியடிக்கப்பட முடியாத கடல் வலிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்தப் பின்புலத்தில், ட்ரொட்சுகியியக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சியின் போராட்டத்தின் விளைவாக, கோகோசுத் தீவுகளின் ஓர்சுபேர்க் தீவில் அமைந்திருந்த சிலோன் தானைவைப்புப் பீரங்கிப் பிரிவின் வீரர்கள் மே 8, 1942 இரவில் கலகத்தில் ஈடுபட்டனர். சப்பானியரிடம் இத்தீவுகளின் கட்டுப்பாட்டை ஒப்படைப்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. எனினும், இக்கலகம் ஒரு மணிநேரத்தினுள் அடக்கப்பட்டதோடு, கலகத்திலீடுபட்ட மூவருக்கு சாவுத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியப் பொதுநலவாயப் படைவீரர்கள் கலகத்தில் ஈடுபட்டமைக்காகச் சாவுத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவேயாகும்.[2]

இக்கலகத்துக்குப் பின்னர், சிலோன் படைவீரர்களைப் பயன்படுத்துவதை பிரித்தானியா கைவிட்டது. எனினும், குறிப்பிட்டளவு வழங்கல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுகள் நடுக்கிழக்குப் போர்முனையின் பின்னரங்குகளில் பயன்படுத்தப்பட்டன. 7வது ஆசுத்திரேலியப் படைப்பிரிவு மற்றும் 1வது (ஆபிரிக்க) படைப்பிரிவு என்பன சிலோனின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் நிலைகொண்டிருந்தன. பிரித்தானியப் பேரரசின் இறப்பருக்கான மிகப்பெரும்பாலான வளங்களைக் கொண்டிருந்த மூலோபாய முக்கியத்துவம் கருதி இப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உணவுப்பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், இந்திய மக்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை. இதனால், இலங்கை மக்களிடையே பிரித்தானியருக்கெதிரான மனப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது.[சான்று தேவை]

சிலோன் மீதான சப்பானியத் தாக்குதல்கள்

தொகு
 
சிலோனிலமைந்திருந்த பிரித்தானிய வானூர்தி எதிர்ப்புப் பாதுகாப்பு நிலைகள், 1943

உயிர்த்த ஞாயிறுத் திடீர்த் தாக்குதல் கொழும்பின் மீது 1942 உயிர்த்த ஞாயிறு நாளன்று (ஏப்ரல் 5) சப்பானியரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலாகும். சில நாட்களின் பின்னர் திருகோணமலையும் தாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் வணிகத் தாகுதலின் ஒரு பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் பிரித்தானிய கிழக்குக் கடற்படைத் தொகுதியைச் சீண்டும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டன.[சான்று தேவை]

இத் தாக்குதல்களின் இராணுவ ரீதியான பாதிப்பு கணிசமானதாக இருந்தது. இத் தாக்குதல்களின் மூலம் இரண்டு குரூசர்கள் மற்றும் ஒரு வானூர்தி தாங்கிக் கப்பல் உட்படப் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. எனினும், இத்தாக்குதல்கள் இலங்கை மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் கடுமையானதாக இருந்தது. நாஞ்சிங் படுகொலைகள் பற்றியும், சப்பானியர் கைப்பற்றிய நாடுகளில் அவர்கள் மேற்கொண்ட கொடுமைகள் பற்றியும் இலங்கையர் கேள்வியுற்றிருந்தனர். இது இலங்கையரிடையே பீதியைத் தோற்றுவித்திருந்தது. இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கைப் பொதுமக்கள் கொழும்பிலிருந்து படகுகள் மூலம் இந்தியாவை நோக்கிச் செல்லத் துவங்கினர்.[3]

எதிர்ப்பும் குடியேற்ற எதிர்ப்புத் தேசிய வாதமும்

தொகு

இலங்கையில் போருக்கு ஓரளவு எதிர்ப்புக் காணப்பட்டது. குறிப்பாகத் தொழிலாளர்கள் மற்றும் தேசியவாதிகளிடையே (சிலோன் தேசியக் காங்கிரசு போன்ற இயக்கங்கள்) இவ்வெண்ணம் காணப்பட்டதோடு, விடுதலை இயக்கத்தை ஆதரித்த, போருக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்திய ட்ரோட்சுகியிய லங்கா சமசமாசக் கட்சியின் ஆதரவையும் இவர்கள் பெற்றிருந்தனர். லங்கா சமசமாசக் கட்சி அச்சு நாடுகளுடனோ அல்லது நேசநாடுகளுடனோ இணைவதில்லையென முடிவுசெய்திருந்ததோடு, உலகப்போரை பன்னாட்டியக் கருத்துடன் அணுகியது. இலங்கைப் பொதுவுடமைக் கட்சியும் உலகப் போரை எதிர்த்ததோடு அதனை பேரரசுகளின் போராகக் கருதியது. எனினும், 1941ல் செருமனி சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியதையடுத்து, அக் கட்சி பிரித்தானியாவுக்கு ஆதரவாக போருக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்தது. மேலும், உலகப்போரை மக்களின் போர் எனவும் குறிப்பிட்டது. எனினும், இலங்கையின் பெரும்பாலான மக்கள் சப்பானிய வெற்றியை எண்ணி அச்சமுற்றனர்.

செருமனியில், செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் 'எதிரிகளாக' அடையாளங்காணப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட அதேவேளை, செருமானிய மற்றும் இத்தாலிய ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை. இது இலங்கைப் பௌத்தர்கள் மத்தியில் செருமனியின் மீது வெறுப்பை உருவாக்கியது. ஆனால், ஆளும் கட்சியின் இரண்டு இளம் உறுப்பினர்களான சூனியசு சயவர்த்தன (பின்னாளில் குடியரசுத் தலைவர்) மற்றும் டட்லி சேனநாயக்க (பின்னர் மூன்றாவது பிரதமர்) ஆகியோர், ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்கான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு சப்பானியர்களுடன் கலந்துரையாடினர். எனினும், முதிர்ந்த அரசியல்வாதியான டி. எசு. சேனநாயக்க (பின்னாளில் முதல் பிரதமர்) அவர்களைத் தடுத்து நிறுத்தியமையின் விளைவாக இப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு தொடரவில்லை.

சுதந்திரப் போராட்டக்காரர்கள் பிரித்தானியப் போர் முயற்சிகளுக்கு அமைச்சர்கள் ஆதரவு வழங்கும் போக்கை எதிர்த்தனர். உள்ளூர் அமைச்சர்கள் இலங்கையரின் வரிப்பணத்தை பிரித்தானியப் போர் முயற்சிகளுக்கு வழங்குவதற்கான பிரேரணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், அரசுக் கழகத்தில் இலங்கையின் சுதந்திரத்தை ஆதரித்த உறுப்பினர்கள் இப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். துருப்புக்கள், ஆசுத்திரேலிய, பிரித்தானிய மற்றும் இலங்கைப் பூர்வீகப் போர்வீரர்களிடையே நடத்தப்பட்ட போர் ஆதரவுப் பிரச்சாரமும் குறிப்பிடத்தக்க வெற்றியளிக்கவில்லை.

நவம்பர் 1939 இல் தொடங்கி 1940 இன் முதல் பாதிவரையில், பிரித்தானியருக்குச் சொந்தமான தோட்டங்களில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன. இப் போராட்டங்கள் அடிப்படையில், ஒன்றுகூடும் உரிமையை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இலங்கையில் அவ்வேளையில் இரண்டு பிரதான தோட்டத் தொழிற்சங்கங்கள் இருந்தன. அவை, நடேச ஐயரின் இலங்கை இந்தியக் காங்கிரசு மற்றும் சமசமாசக் கட்சியினரின் தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (பின்னர் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம், LEWU) என்பனவாகும். மத்திய மாகாணத்தில் சமசமாசக் கட்சியினரின் தலைமையிலான மூல் ஓயா தோட்ட வேலை நிறுத்தம், இப் போராட்ட அலைகளின் உச்சமாக அமைந்தது. மூல் ஓயாவிற்குப் பிறகு, இவ் வேலைநிறுத்த அலை தெற்கே ஊவா மாகாணம் நோக்கிப் பரவியது. இகாலப்பகுதியில் வேலைநிறுத்தக் கால அளவுகள் நீட்டிக்கப்பட்டதோடு தொழிலாளர்கள் மேன்மேலும் சமசமாசக் கட்சியினரின் போர்க்குணமிக்க தலைமையை நாடத் தொடங்கினர். ட்ரொட்சுகியியத் தலைவர் என். எம். பெரேரா, மே 12 அன்று பதுளையில் நடைபெற்ற ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றினார். இக்கூட்டம் அரசினால் தடை செய்யப்பட்ட போதிலும் காவற்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தனர். வெவெச தோட்டத்தில் தொழிலாளர்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அவையை அமைத்தனர். அத் தோட்ட மேற்பார்வையாளர் இத் தொழிலாளர் கழகத்துடன் ஆலோசித்துச் செயற்பட ஒப்புக்கொண்டார். 'சட்டம் மற்றும் ஒழுங்கை' நிலைநாட்டச் சென்ற ஆயுதமேந்திய காவல்துறைனரின் ஒரு குழு தொழிலாளர்களால் நிராயுதபாணியாக்கப்பட்டது. இறுதியாக இவ் வேலைநிறுத்த அலையானது காவல்துறையினரால் பயங்கர நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டது. மேலும், ஒரு வெள்ளப் பெருக்கினால் ஊவாப் பகுதி நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து ஒரு கிழமைக்கு மேலாகத் துண்டிக்கப்பட்டமை காவல்துறையினருக்குச் சாதகமாய் அமைந்தது.

இருப்பினும், சுதந்திரப் போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுவதைக் குடியேற்ற அதிகாரிகள் கண்டறிந்தனர். டன்கிர்க் முற்றுகைக்குப் பிறகு, பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள், பீதியில் எதிர்வினையாற்றினர் (பல பத்தாண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரகசிய கோப்புகளில் இத் தகவல் வெளிப்படுத்தப்பட்டது). LSSPயின் அரசுக் கழக உறுப்பினர்களான என். எம். பெரேரா மற்றும் பிலிப் குணவர்தன உள்ளிட்ட பல LSSP உறுப்பினர்கள், சூன் 18 அன்று கைது செய்யப்பட்டனர். சமசமாசக் கட்சியின் பத்திரிகை அலுவலகம் சோதனை செய்யப்பட்டு, மூடப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளால், கட்சி நடவடிக்கைகளைச் சுதந்திரமாக நடத்துவது சாத்தியமின்றிப் போனது.

பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக்கெதிரான போக்கு பொதுமக்களிடையே தொடர்ந்து வளர்ந்து வந்தது. முன்னணிக் கேளிக்கை விடுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிற வேற்றுமைக் கொள்கைகள் இலங்கையின் உயர் வகுப்பினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைக்கான பிரித்தானியத் தளபதி, அட்மிரல் லேட்டன் தன்னைக் 'கறுப்பு பாசுடர்ட்' என்று அழைத்ததாக, குடிசார் பாதுகாப்பு ஆணையாளராகப் பதவி வகித்த சேர் ஒலிவர் ஏர்னசுட் குணதிலக முறைப்பாடு செய்தார்.

சப்பானிய ஆக்கிரமிப்பு சிங்கப்பூர் மற்றும் மலாயாவில் வாழ்ந்த இலங்கையர்கள் நேதாசி சுபாசு சந்திர போசின் நேரடித் தலைமையின் கீழ் நாசி செருமனியால் நிறுவப்பட்ட இந்தியத் தேசிய இராணுவம் என்றழைக்கப்பட்ட இராணுவ அமைப்பில் இணைந்தனர். இவர்கள் 'லங்கா படைப்பிரிவு' எனும் தனிப் படைப்பிரிவை உருவாக்கினர். அவர்களை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இலங்கைக்கு ஏற்றிச் சென்று, அங்கு சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. எனினும், பின்னர் அது கைவிடப்பட்டது.

லங்கா சமசமாசக் கட்சித் தலைவர்கள் அவர்களது பாதுகாவலர்களுள் ஒருவரின் உதவியால் தப்பிக்க முடிந்தது. அவர்களில் பலர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும், பிலிப்பின் சகோதரரான ரொபேர்ட் குணவர்த்தன தலைமையில் குறிப்பிடத்தக்களவானோர் அங்கே தொடர்ந்தும் தங்கியிருந்தனர்.

படிமங்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ceylon in World War II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு

குறிப்புக்கள்

தொகு
  1. Forgotten campaign, forgotten veterans
  2. "Cocos Island Mutiny". Archived from the original on 2001-09-11. பார்க்கப்பட்ட நாள் 2005-12-03.
  3. Ludowyck E.F.C., The Story of Ceylon, 1962, London, Faber & Faber

மூலங்கள்

தொகு
  • Arsecularatne, S.N. (1991) Sinhalese immigrants in Malaysia & Singapore, 1860-1990: History through recollections, KVG de Silva & Sons: Colombo.
  • Crusz, N. (2001) The Cocos Islands Mutiny, Fremantle Arts Centre Press: Fremantle.
  • Muthiah, W. & Wanasinghe, S. (1996) Britain, World War 2 and the Sama Samajists, Young Socialist Publications: Colombo.
  • Senewiratne, A.M. (2020) Till The Mountains Disappear, Sri Lanka.
  • Lankan was privy to WW II covert operation

மேலும் பார்க்க

தொகு

வார்ப்புரு:WWII history by nation வார்ப்புரு:Armed Conflicts Involving Sri Lanka வார்ப்புரு:British Ceylon period topics