இரா. இராகவையங்கார்
சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 சூலை 1946) சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர்[1] எனப் பல்திறம் பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.
இரா. இராகவையங்கார் | |
---|---|
பிறப்பு | தென்னவராயன் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு | செப்டம்பர் 20, 1870
இறப்பு | சூலை 11, 1946 இராமநாதபுரம், தமிழ்நாடு | (அகவை 75)
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | பள்ளியிறுதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராமநாதபுரம் பள்ளி |
பணி | ஆய்வும் கற்பித்தலும் |
பணியகம் | சேதுசமத்தானம், சேதுபதி பள்ளி, சேசையர் பள்ளி, மதுரைத் தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். |
அறியப்படுவது | தமிழாராய்ச்சி, சொற்பொழிவு, சமசுகிருத – தமிழ் மொழிபெயர்ப்பு. |
பட்டம் | சேதுசமத்தான தலைமைப் புலவர் |
சமயம் | வைணவர் |
பெற்றோர் | இராமானுசையங்கார், பதுமாசனி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சானகி |
பிள்ளைகள் | 3 பெண்கள், 1 ஆண் |
பிறப்பு
தொகுதமிழ்நாட்டில் சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் 1870 – செப்டம்பர் -20 ஆம் நாள் இரா. இராகவையங்கார் பிறந்தார். இராமாநுசையங்காரும் பதுமாசனி அம்மையாரும் இவர்தம் பெற்றோர் ஆவர்.[2]
கல்வி
தொகுஇரா. இராகவையங்காருக்கு ஐந்தாம் அகவை நிறைவடைந்த பொழுது அவர்தம் தந்தையார் இறந்துவிட்டார். எனவே, தன் தாய்மாமாவும் சேதுசமசுதானத்தின் அரசவைப் புலவராக இருந்தவருமான நூறுகவனகர் (சதாவதானம்) முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் இரா. இராகவையங்கார் இராமநாதபுரத்தில் வளர்ந்தார். இந்த முத்துசாமி ஐயங்காரின் மகனே தமிழறிஞர் மு. இராகவையங்கார் ஆவார். இராமநாதபுரத்தில் பள்ளியிறுதி (Matriculation) வரை பயின்று தேறினார். பின்னர் தன் மாமாவிடத்தும் சேதுசமத்தானத்தில் இருந்த பிற புலவர்களிடத்தும் தமிழும் வடமொழியும் பயின்றார்.[1]
தமிழாசிரியப் பணி
தொகு1888-ஆம் ஆண்டில் தன்னுடைய 18-ஆம் அகவையில் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்குப் பணியாற்றும் பொழுது சானகி அம்மாள் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் இராமானுசையங்கார் என்னும் மகனும் பிறந்தனர்.
அதன் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேசையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.[1] அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் தமிழாசிரியராக வேலைபார்த்து வந்த உ. வே. சாமிநாத ஐயரோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.[2]
சேது சமத்தான அரசவைப்புலவர்
தொகுஇராமநாதபுர சேதுசமத்தானத்தான அரசராக இருந்த பாசுகரசேதுபதி, தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக இரா. இராகவையங்காரை நியமித்தார். பல்லக்கு முதலிய வரிசைகளை நல்கினார். சமத்தான அறக்கொடையில் இருந்து ஆண்டுதோறும் 635 உருபாயை இரா. இராகவைங்காரின் வாழ்நாள் முழுக்க வழங்கும்படி உரிமைப் பத்திரம் ஒன்றைப் பதிவுசெய்து கொடுத்தார்.[1] இதன்படி பாசுகரசேதுபதி, முத்துராமலிங்க ராசராசேசுவர சேதுபதி, சண்முக ராசேசுவர சேதுபதி என்னும் தாத்தா, தந்தை, பெயரன் ஆகிய மூவரின் அரசவையிலும் புலவராகத் திகழ்ந்தார்.[1]
இவர் அரசவைப்புலவராக இருந்த காலத்தில் அந்த அரசவைக்கு வருகைவந்த தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் புலவர்கள், இசைக்கலைஞர்கள், விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு சமய விற்பன்னர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்; தன்னுடைய அறிவுத்திறனை வெளிப்படுத்தினார்.[1]
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தொகு1901 – செப்டம்பர் – 14ஆம் நாள், பாலவநத்தம் நிலக்கிழார் பாண்டித்துரைத் தேவரின் முயற்சியால் பாசுகர சேதுபதியின் ஆதரவோடு, மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்திலிருந்து தமிழ்ப்பணி புரிய இரா. இராகவையங்காரை பாசுகரசேதுபதி அனுப்பி வைத்தார். அச்சங்கத்தின் நூற்பதிப்பு, ஆராய்ச்சி ஆகிய துறைகளின் தலைவராக இரா. இராகவையங்கார் பொறுப்பேற்றார். அப்பொழுது பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டினார். அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார்.
அச்சங்கத்தின் சார்பில் 1902 – திசம்பர் 7-ஆம் நாள் செந்தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.[3] அந்த இதழின் முதலாவது ஆசிரியராக இரா. இராகவையங்கார் பொறுப்பேற்றார். அவ்விதழில் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுரைகளை எழுதி வந்தார்.[1] இந்த ஆய்வுரைகளின் முடிவுகள் சில கருத்து வேற்றுமைக்கு உரியவனவாக இருப்பினும் தமிழாய்வுக்கு இரா. இராகவையங்கார் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.[4] ஏனென்றால், இவருடைய ஆழ்ந்த கல்வியும் நுண்ணிய ஆராய்ச்சித் திறனும் பொருள்களை முறைப்படப் பாகுபடுத்திப் பார்த்து விளக்கும் பேராற்றலும் இவர் எழுதிய கட்டுரைகளில் புலனாகின்றன.[1]
1906-ஆம் ஆண்டு[5], இரா. இராகவையங்கார் தான் வகித்து வந்த செந்தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை தன் மாமா மகனான மு. இராகவையங்காரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து தேவகோட்டைக்குச் சென்று, மெ. அரு. இராமநாதன் செட்டியார் என்பவரின் ஆதரவில் சிலகாலம் தங்கியிருந்தார். 1910-ஆம் ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்திற்குத் திரும்பி, இராசராசேசுவர சேதுபதியின் அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
தொகு1935-ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் முதன்மை ஆராய்ச்சியாளராக 1935-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். அப்பொழுது தமிழிலக்கிய, இலக்கண ஆய்வில் ஈடுபட்டதோடு முதுகலை மாணவர்களுக்குத் தமிழிலக்கியத்தைக் கற்பித்தார்.
பெற்ற பட்டங்கள்
தொகுமேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்ற உ. வே. சாமிநாதய்யர், மகாவித்துவான் என்னும் பட்டத்தை இரா. இராகவையங்காருக்கு வழங்கினார். வடமொழியில் இவருக்கு உள்ள புலமையைப் பாராட்ட விரும்பிய சமசுகிருத சமிதி இவருக்கு பாசாகவிசேகரர் என்னும் பட்டத்தை வழங்கியது.
இறுதிக்காலம்
தொகு1941-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், இராமநாதபுரத்தில் உள்ள தன்னுடைய மாளிகையில் தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழித்தார். கண்பார்வை மங்கிய பின்னர், மற்ற இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதைக் கைவிட்டார். தன்னை நாடிவருபவர்களுக்கு மட்டும் தமிழ் கற்பித்து வந்தார். 1946 – சூலை – 11-ஆம் நாள் மரணமடைந்தார். அப்பொழுது அவரைப் பற்றிப் பிற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகுத்து 1946ஆம் ஆண்டு ஆனிமாத செந்தமிழ் இதழை இரா. இராகவையங்காரின் நினைவு மலராக மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
இயற்றிய நூல்கள்
தொகுவ.எண் | மு.பதிப்பு ஆண்டு | நூல் | குறிப்பு |
1 | 1917 | வஞ்சிமாநகர் | ஆய்வுரை |
2 | 1924 | சேதுநாடும் தமிழும் | மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 13 ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்பட்டது |
3 | 1927 | புவி எழுபது | செய்யுள் நூல் |
4 | 1932 | தொழிற்சிறப்பு | செய்யுள் நூல் |
5 | 1933 | திருவடிமாலை | செய்யுள் நூல் |
6 | 1933 | நல்லிசைப் புலமை மெல்லியர்கள் | ஆய்வு நூல் |
7 | 1934 | அண்டகோள மெய்ப்பொருள் | ஆய்வு நூல் |
8 | நன்றியில் திரு | செய்யுள் நூல் | |
9 | 1937 | பாரிகாதை | செய்யுள் நூல் |
10 | 1938 | அபிசஞான சாகுந்தலம் | வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட நூல் |
11 | 1941 | தமிழ் வரலாறு | |
12 | 1949 | தித்தன் | ஆய்வு நூல் |
13 | 1951 | கோசர் | ஆய்வு நூல் |
14 | 1983 | இராசராசேசுவரசேதுபதி ஒருதுறைக் கோவை | செய்யுள் நூல் |
15 | 1985 | ஆத்திசூடி உரை | |
16 | 1987 | ஆராய்ச்சிக் கட்டுரைகள் | |
17 | 1992 | இனிய இலக்கியம் | |
18 | 1994 | கம்பர் | |
19 | 1994 | செந்தமிழ் இன்பம் | |
20 | 1994 | தமிழக குறுநில வேந்தர்கள் |
பதிப்பித்த நூல்கள்
தொகுவ.எண் | மு.பதிப்பு ஆண்டு | நூல் |
1 | 1901 | அகநானூறு |
2 | 1902 | ஐந்திணை ஐம்பது உரை |
3 | 1902 | கனாநூல் |
4 | 1903 | வளையாபதிச் செய்யுட்கள் |
5 | 1903 | மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை |
6 | 1903 | இனியவை நாற்பது மூலமும் உரையும் |
7 | 1903 | நேமிநாதம் மூலமும் உரையும் |
8 | 1904 | திருநூற்றந்தாதி மூலமும் உரையும் |
9 | 1904 | திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் |
10 | 1904 | பன்னிருபாட்டியல் |
11 | 1904 | நான்மணிக்கடிகை |
12 | 1905 | முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மூலம் |
13 | 1917 | தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை |
14 | 1946 | குறுந்தொகை விளக்கம் |
15 | 1949 | பெரும்பாணாற்றுப்படை |
16 | 1951 | பட்டினப்பாலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 சண்முகம் பிள்ளை, மு. ஆத்திசூடியுரை; தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்; மறு பதிப்பு 1996; பக்.xxiv
- ↑ 2.0 2.1 இராகவையங்கார், இரா. இனிய இலக்கியங்கள்; பாரதி பதிப்பகம், சென்னை; மு.பதி. சூன் 1992; பக்.9
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-27.
- ↑ முத்துகுமாரசுவாமி, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், சென்னை, 1968
- ↑ மு. இராகவையங்கார், தமிழ்மணி – தினமணி, 2008