இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்

இலங்கையில் உள்ள அனுமன் கோவில்

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் இலங்கையின் மலையகத்தில் உள்ள ஒரு அனுமன் ஆலயம் ஆகும். இது நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை-நுவரெலியா பிரதான பாதையில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோவில் இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகின்றது.

வரலாறு

தொகு

றம்பொடை என்று அழைக்கப்படுகின்ற இந்த பிரதேசத்தை சிலர் இராமாயணத்துடன் தொடர்புபடும் வகையில் ராம்படை என்று குறிப்பிடுகின்றனர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்த போது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப்பிரதேசத்திலும் சீதையைத் தேடியதாகவும் இராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப்பிரதேசத்தில் தயாராகவிருந்ததாகவும் இதனால் ராம்படை என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் றம்பொடையாக பெயர் திரிபடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு "இராம்போதை" (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்.[1]

இத்திட்டத்திற்காக 10 ஏக்கர் நிலம் ஒன்றை இலங்கை அரசிடம் இருந்து சின்மயா மடத்தினர் கொள்வனவு செய்தனர். 1996 ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது.[1]

சிறப்புகள்

தொகு

இந்த ஆலயத்துக்கு அருகில் இறம்பொடை நீர்வீழ்ச்சி, இலங்கையில் நீண்ட சுரங்கப்பாதை, கொத்மலை அணை என்பன உள்ளமை முக்கிய அம்சமாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பூரணை நாளன்றும் இடம்பெறும் சிறப்புப் பூசைகளில் உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வர்.

இந்த ஆலயத்துக்கு சகல இனமக்களும் சகல மதத்தினரும் வந்து செல்வது முக்கிய அம்சமாகும். இந்த ஆச்சிரமத்தினால் பிரதேசத்தில் வாழுகின்ற சிறுவர்களுக்கு முன்பள்ளி ,அறநெறி கல்வி புகட்டப்படுவதோடு, கல்வி உதவிகளும் பெண்களுக்கு சுயத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "இறம்பொடை திரு அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில்". வீரகேசரி (நாளிதழ்). 3 சூலை 2016.