இறவாப்படை (அகாமனிசியப் பேரரசு)
இறவாப்படை அல்லது இம்மார்டல்ஸ் (Immortals, பண்டைக் கிரேக்கம்: Ἀθάνατοι Athánatoi ) அல்லது பாரசீக இம்மார்டல்ஸ் (Persian Immortals) என்பது எரோடோட்டசால் குறிப்பிடப்படும் அகாமனியப் பேரரசின் இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன், பேரரசின் காவலராக பங்களித்து இரட்டை திறன்களில் பணியாற்றியது. இது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும், இறவாப்படையில் மீடியர் மற்றும் ஈலாம்களும் அடங்குவர். அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் போதிய அளவில் இல்லாததால், வரலாற்றில் அத்தியாவசிய கேள்விகளுக்கு பதிலில்லாமல் உள்ளது. [2]
எரோடோடசின் எழுத்துகளில்
தொகுஎரோடோட்டசு இறவாப்படையை இளைய ஹைடார்னெஸ் தலைமையிலான கனரக காலாட்படை என்று விவரிக்கிறார். இது பாரசீகப் படைகளின் தொழில்முறைப் படைகளைக் கொண்டிருந்தது. மேலும் சரியாக 10,000 பேர் கொண்ட படை பலத்துடன் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. படையில் கொல்லப்பட்டோ, பலத்த காயம் அடைந்தோ, நோய்வாய்ப்பட்ட பணியாற்ற முடியாத ஒரு உறுப்பினருக்கு பதிலாக உடனடியாக புதிய நபர் நியமிக்கப்படுவார். இந்தப் படை நிலையான பலத்துடன், ஒருங்கிணைந்த அமைப்பாக படைகளை பராமரிக்கும் வழக்கத்திலிருந்து இந்த பிரிவின் பெயரான இம்மார்டல்ஸ் (பொருள்; இறவாப்படை) என்பது உருவானது என்று அவர் கூறினார். [3]
எரோடோட்டசின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களில் இந்த உயரடுக்குப் படை "இம்மார்டல்ஸ்" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. பாரசீக ஆதாரங்களில் ஒரு நிரந்தரப் படை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும், அவை "இம்மார்டல்ஸ்" என்ற பெயரை பதிவு செய்யவில்லை.