இலங்கை, ஈழம் (சொல்விளக்கம்)

இலங்கை, ஈழம் என்னும் இரண்டும் பழந்தமிழ்ச் சொற்கள். இலங்கு என்பது வினைச்சொல். இலக்கம் எனபது அதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். தமிழின் இந்த இரண்டு சொல் வடிவங்களும் சங்கநூல்களில் கையாளப்பட்டுள்ளன. இந்தச் சொல்வடிவங்களின் அடிப்படையில் தோன்றிய 'இலங்கை'யையும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிறுபாணாற்றுப்படை இலங்கையைத் ‘தொன்மாவிலங்கை’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் இதனை வழிமொழிந்து ‘தொல் இலங்கை’ என்று குறிப்பிடுகிறது. [1]

இலங்கைதொகு

இலங்கை என்னும் சொல்லுக்கு ‘ஒளி பொருந்திய நாடு’ என்பது பொருள்.

தெளிவாக ஒளி தருவதை *இலங்கு என்பர். [2] இலங்கும் பொருள் இலக்கம். இலக்கம் என்னும் சொல் ஒளியைக் குறிக்கும். [3] இலக்கம் வானில் இலங்கும் சுடர்களாகிய விண்மீன்களை இலக்கம் என்றனர். [4] இலக்காகும் பொருளையும் இலக்கம் என்றனர். [5] எனவே இலங்கை என்னும் சொல்லுக்கு ‘ஒளிநாடு’ என்பது பொருள்.

இலங்கைத் தீவைப் போலத் தமிழ்நாட்டிலும் ஓர் இலங்கை. இதனை ‘நன்மா இலங்கை’ என்றும், ‘பெருமா இலங்கை’ என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வூர் திண்டிவனம் பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இப்பகுதி ஓய்மானாடு எனப்பட்டது. இங்கு ஓவியர், ஒளியர் ஆகிய மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒளிர்வது ஓவியம். ஒளியும் ஓவியமும் ‘ஓய்’ என மருவின. இதனால் ஒளியர், ஓவியர் குடிகளின் தலைமகன் ‘ஓய்மான்’ எனப்பட்டான்.

தமிழகத்தில் ஒளிநாட்டின் தலைநகர் நன்மாவிலங்கை. பெருமாவிலங்கை என்றெல்லாம் சுட்டப்பட்ட இலங்கை. ஈழநாட்டின் தலைநகர் பண்டைக் காலத்தில் இலங்கை. இப்போது கொழும்பு. கொழுவிய நகரம் கொழும்பு. கொழுவியது இலங்கும். அதாவது ஒளிரும். ஆகவே இலங்கை கொழும்பு ஆயிற்று. [6] [7] [8]

ஈழம்தொகு

ஈழம் என்னும் சொல்லுக்குக் கிழக்குநிலம் என்பது பொருள். [9] தமிழக நிலப்பரப்பின் பெரும்பகுதி மேற்கில் உயர்ந்தும், கிழக்கில் தாழ்ந்தும் உள்ளது. இதனால் மேல்திசை, கீழ்திசை என்னும் சொல்வழக்கு தோன்றியது. தொல்காப்பியம் உவமைப் பொருள் உயர்ந்ததன் மேலும், தாழ்ந்ததன் மேலும் வரும் என்கிறது. அது தாழ்ந்த பொருளைக் ‘கிழக்கிடும் பொருள்’ என்று குறிப்பிடுகிறது. [10] எனவே ஈழம், கீழம், கிழக்கு என்பவை ஒன்றோடொன்று தொடர்புடைய ‘ஒருபொருட்பன்மொழி’ என்பது தெளிவு. [11]

அடிக்குறிப்புதொகு

 1. வேர்ச்சொல் பொருளோடு தமிழில் வழங்கும் இந்தச் சொற்களில் இலங்கை என்னும் சொல்லை 'லங்கா' என்னும் வடசொல்லின் திரிபு என்கின்றனர். ஒரு சொல் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் காணப்பட்டால் அதன் வேர்ச்சொல் வடிவத்தை எண்ணிப் பார்க்காமல், வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தது எனக் கூறும் குருட்டுப் பழக்கம் நிலவிவந்த காலம் அது.
  • இலங்குநூல் (திருக்குறள் 410)
  • ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ (புறம் 353)
  • இலங்கித் தோன்றும் (நற்றிணை 291)
  • இலங்கு அருவிய (மதுரைக்காஞ்சி 57)
  • நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் (நற்றிணை 346)
  • வேலும் இலங்கு இலை துடைப்ப (நற்றிணை 177)
  • இலங்கு இழை (நற்றிணை 322)
  • இலங்கு நீர் (பதிற்றுப்பத்து 30)
  • இலங்கு துரை (குறுந்தொகை 373)
  • இலங்கு கதிர் (மதுரைக்காஞ்சி 703)
 2. எல்லே இலக்கம் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 269)
 3. தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன (புறநானூறு 4)
 4. இலக்கம் உடம்பிற்கு இடும்பை (திருக்குறள் 627)
 5. தொன்மாவிலங்கைகு கருவொடு பெயரிய
  நன்மாவிலங்கை மன்னருள்ளும்
  மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
  உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் (ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – சிறுபாணாற்றுப்படை 119-122)

 6. இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்
  பெருமாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
  இல்லோர் செம்மலை நல்லியக்கோடனை (ஓய்மானாட்டு நல்லியக்கோடனை, புறத்திணை நந்நாகனார் - புறம் 176)

 7. நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
  வில்லியாதன் கிணையோம் பெரும (ஓய்மான் வில்லியாதனை, புறத்திணை நந்நாகனார் - புறம் 379)

  • கிழக்கிடும் பொருளோடு ஐந்தும் ஆகும். (கிழக்கு = தாழ்வு) – தொல்காப்பியம் உவமவியல் 5
  • இழிதரும் அருவி (இழி = தாழ்) புறநானூறு 154, 399, திருமுருகாற்றுப்படை 316
  • கிழி < > கீழ் (கிழி = கிழிந்த துணி, கீழ் = கிழிந்த துணியாலான கோவணம்)
  • உழி < > ஊழ் (உற்றுழி = துன்பம் வந்தபோது – புறம் 183, ஊழ் = தோன்றுதலை உணர்த்தும் வினைச்சொல், இணர் ஊழ்த்தும் – திருக்குறள் 650
  • கழி < > காழ் (கழி = வயிரம் பாய்ந்த மூங்கில், காழ் = வயிரம் – திருக்குறள் ‘காழ்த்தவிடத்து’ 879)
  • ஆழ் < > காழ் (ஆழ் = அழுந்து, காழ் = அழுத்தம் கொண்ட வயிரம்)
  • ஈ = பொருளைப் பிறருக்குத் தாழ்த்துதல்
  இவற்றால் ஈழம் என்பது தாழ்திசையாகிய கிழக்குத் திசையிலுள்ள நிலம் என்பது தெளிவு. (ஈழம் < கீழம் – சொல்விரிவு)
 8. கிழக்கிடும் பொருளோடு ஐந்தும் ஆகும். (தொல்காப்பியம், பொருளியல் 276)
 9. ஈழம் = கிழக்கு, கிழக்கிடும் பொருள்