இலங்கை கொண்டலாத்தி
இலங்கை கொண்டலாத்தி (அறிவியல் பெயர்: Upupa epops ceylonensis என்பது ஐரோவாசிய கொண்டலாத்தியின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை நடு, தென்னிந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஇலங்கை கொண்டலாத்தியானது மைனா அளவில் சுமார் 23 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் ஈய நிறத்திலும் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி கறுப்பும் வெள்ளையுமான பட்டைகளோடு வடிக் குதிரை போல இருக்கும். இதன் விசிறி போன்ற தலைக் கொண்டை கருஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு விளிம்போடு காட்சியளிக்கும். மார்பு லேசான கருஞ்சிவப்பு நிறத்திலும், வயிறும் வாலடியும் வெண்மையாகவும் இருக்கும். இப்பறவையின் தலை முழுவதும் நல்ல கருஞ்சிவப்பாக இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுஇலங்கை கொண்டலாத்தியானது நடு, தென்னிந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.[1] இப்பறவை மலைகளில் 3000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது.
நடத்தை
தொகுஇலங்கை கொண்டலாத்தி சிற்றூர் புறங்களிலும் நகரங்களிலும் எங்கும் காணப்படுவதாக உள்ளது. தோட்டங்கள் விளை நிலங்கள் சார்ந்த பகுதிகளில் தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படும். இது தன் நீண்ட அலகால் தரையைக் கிளறிப் புழு பூச்சிகளைப் பிடித்தபடி இங்கும் அங்கும் ஓடித் திரியும். வேலிகளில் அமர்ந்தபடி கரிச்சானைப் போலப் பாய்ந்து பறக்கின்ற பூச்சிகளைப் பிடிப்பதும் உண்டு. ஒன்று சேர்ந்து கூராக அமைந்த கொண்டை அடிக்கடி விசிறி போல விரிவதும் உண்டு. இது தன் உணவாக புழு, பூச்சிகள், அவற்றின் முட்டைகளை கொள்கிறது.[2]
இனப்பெருக்கம்
தொகுஇவை சனவரி முதல் மே வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரப் பொந்துகளிலும், சுவர்களில் உள்ள பொந்துகளிலும் வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு மெத்தென கூடமைக்கின்றன. அக்கூட்டில் நான்கு முதல் ஏழு வரையிலான பசுமை கலந்த வெளிர் நீல நிற முட்டைகளை இடுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
- ↑ 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 307–308.