இலிங்கோத்பவர்

(இலிங்கோத்பவ மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
லிங்கோத்பவர்

வேறு பெயர்(கள்): இலிங்கபுராணத்தேவன்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: அன்னம் மற்றும் பன்றியாக
இருந்த பிரம்மன் மற்றும்
விஷ்ணு இருவரையும்
தோற்கடித்த லிங்கமாக
இருந்த சிவன்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்
லிங்கோத்பவர் சிற்பம், காலடியில் பன்றி உருவில் விஷ்ணுவும், தலைமேல் அன்னம் உருவில் பிரம்மனும். இடம்: ஐராவதேசுவரர் கோயில்

இலிங்கோத்பவர் அல்லது இலிங்கோற்பவர் எனப்படுவது சிவனது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும். இலிங்கோத்பவ மூர்த்தம் சிவாலயங்களின் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கியவண்ணம் காணப்படும். சிவன் ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்சோதியன் என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்ற இம்மூர்த்தம் மகா சிவராத்திரி விழாவுடன் தொடர்புடையது.

தோற்றம்

தொகு

சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச் சிவமூர்த்ததின் அடியில் பன்றி வடிவத்தில் விஷ்ணுவும் முடியில் அன்னம் வடிவில் பிரம்மனும் காணப்படுவர். சிவராத்திரி தினத்தன்று இம்மூர்த்ததிற்கு சிறப்பு பூசனைகள் இடம்பெறும்.

திருமுறை

தொகு

திருமாலும் நான்முகனும், தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி, போலும் மேனியன் பூம்பு கலியுட் பால, தாடிய பண்பன் நல்லனே.

பொருள் - திருமால் மற்றும் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

திருவருட்பா

-இராமலிங்க அடிகள்

சிவராத்திரியும் இலிங்கோத்பவரும்

தொகு

சிவனது இலிங்கோத்பவ வடிவிற்கும் சிவராத்திரிக்கும் மிகுந்த தொடர்புள்ளது. இலிங்க புராணத்தின்படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனுக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என வாதம் உண்டாயிற்று. இதனைத் தீர்க்க சிவனிடத்தே சென்று முறையிட்டனர். அப்பொழுதே சிவன் இலிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ முதலில் காண்பவரே உயர்தவராவார் எனக் கூற, திருமால் பன்றி உருகொண்டு அடியினையும், நான்முகன் அன்ன உருகொண்டு முடியினையும் காணத் துணிந்தனர். ஈற்றில் இருவரும் அடியினையோ முடியினையோ காணவொண்ணாது தோல்வியுற்று சிவனே உயர்ந்தவர் என உணர்ந்தனர். இந்நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி தினத்தன்று 3ம் சாமப்பூசனை காலம் இலிங்கோற்பவ காலம் என குறிப்பிடப்பட்டு இவ்வேளை இலிங்கோற்பவருக்கு சிறப்பு முழுக்குகள் இடம்பெறும்.

திருவண்ணாமலை

தொகு

இந்த திருவுருவமேனி தத்துவத்தை உணர்த்துவதே திருவண்ணாமலை கோயில். நெருப்பின் உருவமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடந்தேறும் நடைபெறும் "அண்ணாமலை ஜோதி" விழா, இதை நினைவுகூர்கிறது.

சிற்ப வளர்ச்சி

தொகு

தமிழகத்தில் முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே (பொ.ஊ. 700–730) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907–953) காலத்திலே சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீசுவரர் படிமத்திற்கு பதிலாக இலிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கலாயிற்று. இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை கைகொள்ளப்பட்டு இற்றைவரையும் பேணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாவு துணை

தொகு

1.திருகோடிக்காவல் இலிங்கோத்பவ மூர்த்தி சிற்பம் ஒர் ஆய்வு கட்டுரை - முனைவர் மு.கலா வாழ்வியல் சுரங்கம், கலைஞன் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

தொகு
யார் படைப்பாளி, யார் படைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிங்கோத்பவர்&oldid=4150001" இலிருந்து மீள்விக்கப்பட்டது