இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை

இளவரசன்-திவ்யா திருமணச் சிக்கல் என்பது தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன் கொட்டாயில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்ததை அடுத்து உருவான சிக்கல்களைக் குறிக்கும். திவ்யாவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது. நவம்பர் 7ந் தேதி இரு வீட்டாரின் உறவினர்களும் தொப்பூரில் சந்தித்து பேசியபோது திவ்யா திவ்யாவின் அம்மாவுடன் செல்ல மறுத்து விடுகிறார். இதனையடுத்து அக்கூட்டத்திற்கு வராத திவ்யாவின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். [1] இந்நிகழ்வுகளுக்கான எதிர்வினை சாதிக் சாதிக் கலவரமாக உருவெடுத்தது. 7.11.2012 அன்று இந்த இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகளைச் சிதைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 296 தலித் சமூகத்தினரின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டன.[2][3]

திருமணம்

தொகு

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரனுக்கும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அக்டோபர் 8,2012 அன்று வீட்டை விட்டு வெளியேறி அக்டோபர் 10,2012 அன்று திருப்பதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அக்டோபர் 8,2012 அன்று காவல்துறை அதிகாரியை சந்தித்து தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் கேட்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவல் அதிகாரி அவர்கள் பாதுகாப்புக்கு காவலர்களை ஏற்பாடு செய்கிறார். [4]

வழக்குகள்

தொகு

திவ்யாவை இளவரசன் கடத்திச் சென்று விட்டதாகச் சொல்லி திவ்யாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தார்கள். திவ்யாவை அறமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, தான் விரும்பியே இளவரசனுடன் சென்றதாக திவ்யா தெரிவித்தார். திருமணத்துக்கு அடுத்துச் சில மாதங்கள் தமிழகத்துக்கு வெளியே ஒளிந்து வாழ்ந்து வந்த திவ்யாவும் இளவரசனும் தரும்புரி திரும்பி இளவரசனின் தந்தையின் வீட்டில் வாழத் தொடங்கினர். இடைப்பட்ட காலத்தில் திவ்யாவின் தாய் அவருடன் தொலைபேசியிலும் நேரிலும் கண்டு பேசி வந்துள்ளார். ஒரு முறை இளவரசன் வீட்டில் இல்லாத போது, திவ்யாவின் தாயுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திவ்யாவை வீட்டை விட்டு வெளியே வரச் செய்துள்ளனர். அதற்குப் பிறகு, திவ்யா இளவரசனுடன் இணைந்திருக்கவில்லை.

அதன் பிறகான அறமன்ற அமர்வுகளில் திவ்யா முன்னுக்குப் பின் முரணாகவும் குழம்பிய நிலையிலும் வாக்குமூலம் கொடுத்தார். முதல் முறை, தனக்கு குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்து அறமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். அடுத்து ஒரு முறை தன் தாய் விரும்பினால் இளவரசனுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகத் தெரிவித்தார். இறுதியாக சூலை 3, 2013 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் தான் இறுதி வரை தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இவ்வாறு அவர் உடனுக்குடன் மாற்றி மாற்றித் தெரிவித்த வாக்குமூலங்கள் யாவும் அவர் கடுமையான உள நெருக்கடியில் சிக்கியிருப்பதையும் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆட்களின் வற்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதையும் காட்டுவதாக நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இளவரசனின் மரணம்

தொகு

திவ்யா இனி இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று பேட்டியளித்த மறுநாள் ( சூலை 4, 2013) நண்பகலில், இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள இருப்புப் பாதையில் பிணமாகக் கிடந்தார்[5]. இவரது இறப்பைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உத்தரவிட்டார். உடற்கூறு பரிசோதனையில் தலையில் அடிபட்டு அவர் இறந்ததாக அறிக்கை வெளியானது . இளவரசன் தனது முழுகால் சட்டையில் 4 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார், இதில் தன் மரணத்திற்கு மற்றவர்கள் காரணமில்லை என்று தெரிவித்திருந்தார். இளவரசன் உறவினரிடம் இருந்து இக்கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை [6] [7]இக்கடிதம் இளவரசன் எழுதியதா என்று கண்டறிய தடவியல் சோதனை சாலைக்கு அனுப்பினர், அதில் இக்கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்தே என்று முடிவு வந்தது.[8]

இறப்புத் தொடர்பான வழக்குகள்

தொகு

இளவரசனின் இறப்புக்குப் பின் பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசனின் உடற்கூறு சோதனை கோயம்புத்தூர் அல்லது சென்னையில் நடைபெறவேண்டும் என்று சங்கரசுப்பு தலைமையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் உடற்கூறு சோதனையின் முடிவுகளையும் வீடியோ ஆதாரங்களையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும், அவரது உடலைபாதுகாத்து வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. மற்றொரு வழக்கில் திவ்யாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும், மன அழுத்தங்களைப் போக்க மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திவ்யா விரும்பினால் அவருக்கு மருத்துவரின் ஆலோசனை வழங்குமாறும், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது[9].

அரசியல் கட்சித் தலைவர்கள் தருமபுரியில் நுழைய விதிக்கப்பட்டுள்ள 144 தடையை விலக்கவேண்டும் என்று திருமாவளவன் தொடுத்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[10]

உடற்கூறு பரிசோதனை

தொகு

இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இரமேசு என்பவர் தொடுத்த வழக்கில், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சம்பத்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தருமபுரி சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் பணித்தது. அதன்படி அவர்கள் பரிசோதித்து அளித்த அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு, உடலை சென்னைக்கு எடுத்து வந்து, மறுபடியும் உடற்கூறு பரிசோதனையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. [11] இரண்டாவது உடற்கூறு பரிசோதனை முடிந்து உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.[12]

நீதிவிசாரணை

தொகு

இளவரசனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரனை நடத்தப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உட்பட பிற கட்சித்தலைவர்களும் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இளவரசன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது[13]. ஆனால், இவரது தலைமையில் நீதிவிசாரனை நடைபெறக் கூடாது என்று இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் இனத்திற்கு எதிராக இவர் செயல்படுபவர் என்று குற்றச்சாட்டு உள்ளதாகவும் அவருக்குப் பதில் ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நீதிவிசாரனை நடைபெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.[14]நீதிபதி சிங்காரவேலு தனது ஆணையத்திற்கு உதவுவதற்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்கக் கேட்டுக்கொண்டு அரசுக்குக் கடிதம் அனுப்பினார் . அதன்படி தமிழக அரசு, ஆணையத்திற்கு உதவுவதற்கான வழக்கறிஞராக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ‘சிகரம்’ ச. செந்தில்நாதனை நியமித்தது. இதற்கான அரசாணை ஆகத்து 23 ,2014 பிறப்பிக்கப்பட்டது.[15]

தலைவர்களின் அறிக்கைகள்

தொகு
  • நல்லகண்ணு: தமிழகத்தில் காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் வாழும் சூழ்நிலை உருவாக்க வேண்டும். இளவரசன் மரணம் ஒரு அவமானச் செயல்.[16]

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://kafila.org/2013/07/05/after-falling-in-love-i-saw-the-reality-of-caste-e-ilavarasan/ பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம் ‘After falling in love, I saw the reality of caste’: E. Ilavarasan
  2. "தருமபுரியில் சாதி வெறியர்கள் கோரத்தாண்டவம் 250 தலித் வீடுகள் தீக்கிரை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 10 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2014.
  3. "Dharmapuri dalit boy who married Vanniyar girl found dead on railway tracks". PTI. TOI. 4 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2014.
  4. 17.07.2013 தேதியிட்ட குமுதத்தில் 8ம் பக்கம்
  5. "Dharmapuri dalit boy who married Vanniyar girl found dead on railway tracks". டைம்ஸ் ஆப் இந்தியா. சூலை 04, 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/Dharmapuri-dalit-boy-who-married-Vanniyar-girl-found-dead-on-railway-tracks/articleshow/20913123.cms. பார்த்த நாள்: சூலை 08, 2013. 
  6. Ilavarasan’s death: ‘Suicide note’ seized from relative
  7. Man admits to having taken away suicide note
  8. Forensic report validates handwriting of Ilavarasan in suicide note
  9. "Preserve dalit youth’s body: HC". டைம்ஸ் ஆப் இந்தியா. சூலை 06, 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/Preserve-dalit-youths-body-HC/articleshow/20937264.cms. பார்த்த நாள்: சூலை 08, 2013. 
  10. "144 தடை உத்தரவு : தருமபுரி ஆட்சியருக்கு நோட்டீஸ்". தினமணி. சூலை 11, 2013. http://dinamani.com/latest_news/2013/07/11/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article1678500.ece. பார்த்த நாள்: சூலை 11, 2013. 
  11. "இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு". தினமணி. சூலை 12, 2013. http://dinamani.com/latest_news/2013/07/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/article1680200.ece. பார்த்த நாள்: சூலை 12, 2013. 
  12. Second autopsy over, Ilavarsan’s body handed over to parents
  13. "இளவரசன் மரணம் : விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு". தினமணி. சூலை 08, 2013. http://dinamani.com/latest_news/2013/07/08/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/article1673508.ece. பார்த்த நாள்: சூலை 08, 2013. 
  14. "நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு". தினமணி. சூலை 08, 2013. http://dinamani.com/latest_news/2013/07/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/article1673835.ece. பார்த்த நாள்: சூலை 08, 2013. 
  15. "இளவரசன் மரணம்: விசாரணை ஆணைய வழக்கறிஞராக ‘சிகரம்’ செந்தில்நாதன் நியமனம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ்: pp. 5. 24 ஆகத்து 2013. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=41000. பார்த்த நாள்: 19 ஆகத்து 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  16. "காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும்: நல்லகண்ணு". தினமணி. சூலை 11, 2013. http://dinamani.com/latest_news/2013/07/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/article1678618.ece. பார்த்த நாள்: சூலை 11, 2013.