இ. இளவழகி
இ. இளவழகி (I. Ilavazhagi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீராங்கனையாவார். மூன்று முறை கேரம் உலகக் கோப்பைப் [1] போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டில் இ. இளவழகி பிறந்தார். முன்னாள் தேசிய கேரம் வெற்றியாளர் சக்திவேலை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ச. இளவழகி என்றும் அறியப்படுகிறார். சென்னை மாதவரத்தில் ‘உலக கேரம் சாம்பியன்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி, ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்கு கேரம் விளையாட்டைக் கற்றுக்கொடுத்துவருகிறார்.
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 1984 வியாசர்பாடி , வடசென்னை, தமிழ்நாடு |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | கேரம் |
இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். இதேபோல் பன்னாட்டு அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். அவற்றில் தங்கப் பதக்கங்கள் மட்டும் 111 ஆகும்.[2]
பிறப்பு
தொகு1984 ஆம் ஆண்டில் சென்னை, வியாசர்பாடியில் இளவழகி பிறந்தார். இவரின் தந்தை எ. இருதயராசு ஒரு தள்ளுவண்டி ஓட்டுநர் ஆவார். தாய் செல்வி ஓர் இல்லத்தரசி. இளவரசிக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.
தொழில்
தொகுசென்னையில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய இளவழகி பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். முதன்முதலாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது, இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது. மாநில அளவிலான போட்டிகளைத் தாண்டி, தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கினார்.
13 வயதில் தேசிய வெற்றியாளராக உருவெடுத்தார். மாலத்தீவில் நடந்த கேரம் ஆசிய வெற்றியாளர் போட்டியில் பங்கேற்க இளவழகிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போட்டியில் வென்று ஆசிய கேரம் வெற்றியாளர் என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். கேரம் விளையாட்டில் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் முன்னேறிவந்த இளவழகிக்கு, 2006 ஆம் ஆண்டு மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமைந்தது.
தில்லியில் நடைபெற்ற இராச்சீவ் காந்தி 2-ஆவது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் மகாராட்டிராவின் ஆயிசா முகமதை வீழ்த்தி முதன்முறையாக உலக வெற்றியாளர் ஆனார். தொடர்ந்து 2008- ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடைபெற்ற 5- ஆவது உலக கேரம் வெற்றியாளர் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[3]
2010- ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ரிச்மாண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை இராசுமி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடினார். ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
2012-ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற உலக கேரம் போட்டியிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெற்றியை ஈட்டினார். மொத்தமாக இளவழகி மூன்று முறை கேரம் உலக வெற்றியாளர் பட்டம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.[4][5][6]
இளவழகி கேரம் விளையாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருக்கிறார். அமெரிக்கா, பிரான்சு, மலேசியா, இலங்கை, மாலத்தீவு எனப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடியிருக்கிறார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ilavazhaki. S | Deccan Chronicle". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "இந்திய கேரம் வீராங்கனை... 260 பதக்கங்களை வென்றவர்... யார் இவர்?". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
- ↑ "Ilavazhagi is World champion" (in en-IN). The Hindu. 2008-02-19. http://www.thehindu.com/todays-paper/tp-sports/Ilavazhagi-is-World-champion/article15169357.ece.
- ↑ "6th World Championship » International Carrom Federation". www.icfcarrom.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "ONGC::Carrom". www.ongcindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "ONGC::ONGCian emerges International 'Champion of Champions'". tenders.ongc.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "ஆடும் களம் 33: வடசென்னை கேரம் இளவரசி!". இந்து தமிழ்திசை. https://www.hindutamil.in/news/supplements/penn-indru/149109-33-1.html. பார்த்த நாள்: 23 December 2023.
புற இணைப்புகள்
தொகு- Indiaenews பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம்
- எப்போதும் பெண்