உகந்த தொழில்நுட்பம்

உகந்த தொழினுட்பம் என்பது, குறிப்பிட்டதொரு தேவையின், சூழல், பண்பாடு, பொருளாதார நிலை என்பவற்றுக்குப் பொருத்தமான தொழில்நுட்பத்தைக் குறிக்கும். இந்த அடிப்படையில் ஒரு உகந்த தொழினுட்பம், குறைந்த வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த செலவையும், சூழலில் குறைவான தாக்கத்தையும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.[1][2][3]

இது பொதுவாக, உயர் தொழில் நுட்பங்களைப் இயக்குவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் உரிய நிதி வளமும், நிபுணத்துவமும் கிடைத்தற்கு அரியதாக உள்ள வளரும் நாடுகளிலும், தொழில்வள நாடுகளின் வளர்ச்சி குன்றிய நாட்டுப் புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. முதலீட்டுச் செறிவு கொண்ட தீர்வுகளிலும், உழைப்புச் செறிவு கொண்ட தீர்வுகளே விரும்பப்படுகின்றன. எனினும், முதலீட்டு மற்றும் பேணற் செலவுகளை அதிகரிக்காதவரை கூலிக்குரிய செலவுகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.

செயல்முறையில், குறிப்பிட்ட இடத்தில், விரும்பிய நோக்கத்தை அடைவதற்காக, எளிமையான, உயர்ந்த பயன் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப் படுவதே உகந்த தொழில் நுட்பம் எனலாம்.

இதன் சொற்பயன்பாடு துல்லியமாக இல்லை. வளர்ந்த செல்வந்த நாடுகளின் வளர்ச்சி குறைவான பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தும் அதே வேளை, வளரும் நாடுகளில் பெருநகரப் பகுதிகளில் வளர்ந்த நாடுகளின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே உகந்ததாக இருக்கக்கூடும். அதிக விலை கொடுக்கவும், அதனைப் பேணவும் கூடிய வளங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக விலை உயர்ந்த தொழில் நுட்பமே செல்வந்த நாடுகளுக்கு உகந்ததாக இருக்கக்கூடும்.

எந்தவொரு குறிப்பிட்ட விடயத்திலும், உகந்த தொழினுட்பம் எதைக் குறிக்கிறது என்பது வாதத்துக்கு உரியதாக இருப்பினும், கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கத்துடன் தொடர்புடைய, உயர் தொழில் நுட்பம் அல்லது அளவுமீறிய இயந்திரமயமாக்கம், மனித இடப்பெயர்வுகள், வளங்கள் குறைந்து செல்லல், சூழல் மாசடைதலின் அதிகரிப்புப் பற்றிய கேள்விகளை எழுப்புவதற்கு இதனைக் கோட்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hazeltine, B.; Bull, C. (1999). Appropriate Technology: Tools, Choices, and Implications. New York: Academic Press. pp. 3, 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-335190-1.
  2. Sianipar, C.P.M.; Dowaki, K.; Yudoko, G.; Adhiutama, A. (2013). "Seven pillars of survivability: Appropriate Technology with a human face". European Journal of Sustainable Development 2 (4): 1–18. doi:10.14207/ejsd.2013.v2n4p1. https://www.researchgate.net/publication/236658117. 
  3. Akubue, Anthony (Winter–Spring 2000). "Appropriate Technology for Socioeconomic Development in Third World Countries". The Journal of Technology Studies 26 (1): 33–43. doi:10.21061/jots.v26i1.a.6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகந்த_தொழில்நுட்பம்&oldid=4133311" இலிருந்து மீள்விக்கப்பட்டது