உடப்பூர் வீரசொக்கன்
வீரபத்திரன் வீரசொக்கன் (பிறப்பு: சூலை 9, 1953) ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய பெயர்களில் இவர் எழுதிவருகிறார்.
உடப்பூர் வீரசொக்கன் | |
---|---|
பிறப்பு | சூலை 9, 1953 உடப்பு, புத்தளம் |
பணியகம் | அரசுப்பணி |
பெற்றோர் | வீரபத்திரன், முத்துராக்காய் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த உடப்பு கிராமத்தில் வீரபத்திரன், முத்துராக்காய் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த வீரசொக்கன் உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தற்போது முந்தல் - பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றிவரும் இவரின் மனைவி சரோஜினிதேவி. இவரின் பிள்ளைகள் அஜேய் ஆனந்த், சோபிதா, பொன் சுசிதா
இலக்கியப் பங்களிப்பு
தொகுஇவரின் கன்னியாக்கம் 1977ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ‘முத்தலச் சிறப்புப் பெற்ற முன்னேஸ்வரம்' எனும் தலைப்பில் வெளியானது. இதிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலிருந்து வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் இவரது ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.
வீரசொக்கனின் 'கங்கை நீர் வற்றவில்லை' எனும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளை 1990 மார்ச் 8 ஆம் திகதி அப்போதைய முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எடுத்துக் காட்டினார். இவ்வுரையும், அக்கவிதைகளும் நாடாளுமன்ற 'ஹன்ஸாட்' அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
ஊடகத்துறை
தொகு1979ஆம் ஆண்டு முதல் இவர் வீரகேசரி நாளிதழின் உடப்பு பிரதேச செய்தியாளராக பணியாற்றி வருகின்றார். அதேநேரம் புத்தளம், குருநாகல் மாவட்ட செய்திகளையும் திரட்டி அனுப்பி வருகின்றார். வடமேல் மாகாணத்தில் ஒரு செய்தியாளரான இவர் சுமார் மூன்று தசாப்த காலமாக பல்வேறு பத்திரிகைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள், விமர்சனங்கள், செவ்விகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1984ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 'அலை ஓசை' எனும் சஞ்சிகையை பிரதம ஆசிரியராக நின்று இவர் வெளியிட்டார்.
கலைத்துறை
தொகுசிறு வயதிலிருந்தே நாடகத்துறையிலும் இவர் ஈடுபாடு மிக்கவராகக் காணப்பட்டார். பாடசாலை கலைவிழாக்களிலும் உடப்பு ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீமிதிப்பு விழாவின் போது மேடையேற்றப்படும் நாடகங்களிலும் நடித்து அனுபவம் பெற்றுள்ள இவர் பிற்காலத்தில் எம்.ஏ.எஸ். நாடகமன்றத்தின் மூலம் மேடையேற்றப்பட்ட 'தோரோட்டி மகன்', 'புலித்தேவன்', 'இது தான் முடிவு', 'பாசச்சுடர்' முதலான நாடகங்களிலும் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார். மேலும் 'ஹரிராம்ஸ்' இசைக் குழுவின் நிரந்தர அறிவிப்பாளராகவும், அவ்வப்போது பிரதேசத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
எழுதிய நூல்கள்
தொகுஉடப்பூர் வீரசொக்கன் இதுவரை ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு - முதலாவது பதிப்பு: சித்திரை 1989
- கங்கை நீர் வற்றவில்லை. - முதலாவது பதிப்பு: 1990 ஆகஸ்ட்
- அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம். - முதலாம் பதிப்பு: ஆகஸ்ட் 1997
- வீராவின் கதம்ப மாலை - முதலாம் பதிப்பு: ஆகஸ்ட் 2000
- கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் - முதலாம் பதிப்பு: ஆகஸ்ட் 2007
- முண்டத்துண்டு - முதலாம் பதிப்பு: ஆகஸ்ட் 2009
பெற்ற விருதுகள்
தொகு- கலை இளவல்' - சர்வதேச இந்து ஐயப்பதாஸ் சம்மேளனம் வழங்கியது.
- கீர்த்திபாதிய' - வினவித அரச சார்பற்ற நிறுவனம் வழங்கியது.
- தேச கீர்த்தி' - அகில இலங்கை சமாதான நீதவான்கள் சங்கம் வழங்கியது.
- தமிழ் மணி' - வடமேல் கலாசார ஒன்றியம் வழங்கியது.
- கலைதீபம்' - தடாகம் சஞ்சிகை வழங்கியது.