உத்தபுரம் சாதிச் சுவர்

சாதி அடிப்படையில் பிரிவினைக்காக கட்டப்பட்ட சுவர்

அவமானச் சுவர், தீண்டாமைச் சுவர் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் உத்தபுரம் சாதிச் சுவர் (Uthapuram caste wall) 12. அடி உயரமும், 600 மீட்டர்  நீளமும் கொண்டதாக தமிழ்நாட்டின் உத்தபுரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் குடியிருப்பை தங்கள் பகுதியில் இருந்து பிரிப்பதற்காக பிள்ளைமார் சாதி கிராம மக்களால் கட்டப்பட்ட நீளமான மதில் சுவர் ஆகும். இந்த கிராமத்தில் 1948, 1964, 1989 ஆம் ஆண்டுகளில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் பிள்ளைமார் சாதிகளுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. அந்த சாதி பாகுபாடு அடிப்படையிலான சுவராக இது அறியப்படுகிறது.

2008 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடதுசாரி அமைப்புகளின் தலைமையில் சுவரை இடிக்க தொடர் போராட்டங்கள் தொடங்கியது. பின்னர் பிரதான சாலையை அடைவதற்கு ஏதுவாக சுவரின் ஒரு சிறு பகுதி அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது. சுவரை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஆதிக்க சாதி கிராம மக்கள் தங்கள் உடைமைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி 3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் தங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

2008 அக்டோபரில் சுவர் இடிக்கபட்டதற்குப் பழிவாங்கும் வகையில் தலித்துகளின் 70 வீடுகள் தாக்கப்பட்டதாகவும், ஒரு தலித் நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரை பதற்றம் நீடித்தது, சமூகங்களுக்கு இடையிலான மோதலின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னணி

தொகு

சாதிப் பிளவுகள், மோதல்கள்

தொகு

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரான பிள்ளைமார் மற்றும் பள்ளர் என இரு பெரும் சாதி மக்கள் உள்ளனர். இந்த கிராமம் அங்கு நிலவும் சாதிய பதட்டங்களுக்கு பெயர் பெற்றது. 1948, 1964, 1989 ஆம் ஆண்டுகளில் சாதிகளுக்கு இடையே வன்முறை மோதல்கள் இருந்தன [1] [2]

சாதி பாகுபாடு

தொகு

தலித்துகள் பேருந்து நிறுத்தம் கட்டும் முயற்சியை ஆதிக்க சாதி கிராம மக்கள் தடுத்ததாகவும், தலித்துகள் தங்களுக்கு முன் உட்காருவதைத் தடுக்க பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு கைப்பிடிச்சுவரைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. சாதி இந்துக்கள் நிர்வகிக்கும் தேனீர்க்கடைகளுக்கு தலித்துகள் செல்வதில்லை. ஆதிக்க சாதி மக்கள் வாழும் தெருக்களில் தலித்துகள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சமூகக் கூடங்கள் மற்றும் கிராம பொது இடங்களில் இடம் மறுக்கப்பட்டதுடன், இடுகாடுகளில் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. [3]

சுவர்

தொகு

600 மீட்டர் நீளமும், 12 அடி உயரமும் கொண்டன சாதிச் சுவர், தீண்டாமைச் சுவர் என பலவாறு அழைக்கப்படும் சுவரானது, 1989 ஆம் ஆண்டு கிராமத்தில் நடந்த சாதிக் கலவரத்துக்குப் பிறகு சாதி-இந்துக்களால் கட்டப்பட்டது. இச்சுவரானது அனைத்து சாதியினருக்கும் பொதுவான பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. இது தலித்துகள் நேரடியாக பிரதான சாலையில் நுழைவதையும் தடை செய்தது. [4] [5] தலித்துகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மேலும் சில மைல்கள் நடந்தே பிரதான சாலைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. [6] [7]

2008 இல் மோதல்கள் மற்றும் போராட்டங்கள்

தொகு

நான்காவது சாதி மோதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2008 இல் தொடங்கியது, மேலும் 5 ஆண்டுகளுக்கு பல வழிகளில் அது தொடர்ந்தது. இது 2008 ஏப்ரலில் தொடங்கியது, தலித்துகள் இரவு நேரங்களில் ஆதிக்க சாதிப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க 600 மீட்டர் சுவரில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி மின்மயமாக்கினர். துவக்கத்தில், தலித்துகள் போராடத் தயங்கினார்கள் ஆனால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை இந்த செயலை கடுமையாக எதிர்த்தன. [8] சுவரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார். [9] தமிழக மின்துறை அமைச்சர் மின்கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி முற்போக்கு அமைப்பினர் மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடர்ந்தனர். மார்ச்சிய பொதுவுடமைக் கட்சியினர் உள்ளூர் தலித்துகளுடன் இணைந்து சாதிச் சுவரை அழிக்க தொடர் பரப்புரையைத் தொடங்கினர். சுவரை இடிக்கக் கோரி தலித்துகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சுவரைத் தாங்களாகவே இடித்துத் தள்ளுவோம் என்று மார்சிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் என். வரதராஜன் தெரிவித்தார். [10] [3]

இடிப்பு

தொகு

மே 6 அன்று, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சில நூறு காவலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் தலித்துகள் பயணிக்க ஏதுவாக சுவரின் 15 அடி பகுதியை இடிது அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சில சாதி இந்துக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை வட்டாச்சியரிடம் திருப்பிக் கொடுத்தனர். [6] இடிப்பின் போது சுமார் 600 ஆதிக்க சாதியினர் கிராமத்தில் இருந்து தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி 3 கி.மீ. தொலைவில் உள்ள தலையூத்துக்கு இடம் பெயர்ந்தனர். மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்றும் அறிவித்தனர். [11] [12] [13]

கிராமத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக வாழ விரைவில் திரும்பி வருமாறு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தும் கிராமத்தை விட்டு வெளியேறிய ஆதிக்க சாதி கிராம மக்கள் செவிசாய்க்காததால் மீண்டும் பிரச்சனை பதட்டமானது. அவர்களை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தபோது, 400 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வரும் கோவிலுக்கு பட்டா, கிராமத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம், 1989 கலவரத்தின் போது தலித் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். [1]

மே 12 அன்று, தலையூத்து கிராமத்தின் ஆதிக்க சாதிக் குழுவின் தலைவர், தங்களது மக்கள் கிளர்ச்சியின் அடையாளமாக இல்லாமல் பீதியால் கிராமத்தை விட்டு வெளியேறியதாக ஃப்ரண்ட்லைனிடம் கூறினார். சுவர் அகற்றப்பட்ட பிறகு, தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அவர் கூறினார். தலித்துகளில் பெரும்பாலானோர் அரசு வேலைகளிலும், நில உரிமையாளர்களாக இருப்பதால் அவர்கள் இப்போது சிறப்பாக வாழ்கிறார்கள் என்று கூறினார். மேலும் தலித்துகள் உண்மையில் சொத்துக்குளைக் குவிக்கும் வெறியில் இருப்பதால், ஆதிக்க சாதியினர் தங்கள் சொத்துக்களை தலித்துகளுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் கூறினார். ஆதிக்க சாதி கிராம மக்களைப் பாதுகாக்கவே சுவர் கட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும் இந்தக் கூற்று கிராமத்தின் தலித்துகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாதையை சிக்கலினால், அவர்கள் விரோதப் போக்கில் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தி கூறினர். [1]

தாக்குதல்கள்

தொகு

2008 அக்டோபர் முதல் நாள் அன்று, சுவர் இடிக்கப்பட்டதற்கு பதிலடியாக 70 க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தாக்கப்பட்டன. மேலும் 2008, நவம்பர், 4 அன்று ஏற்பட்ட பதட்டத்தின் விளைவாக ஒரு தலித் இளைஞர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். [14] [15]

தொடர்ந்த பதற்றம்

தொகு

2011, நவம்பர், 10 அன்று, பல தலித்துகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தனர். பல ஆதிக்க சாதியினர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றாலும், அவர்கள் நுழைவதைக் காணச் சகியாமல் தெருக்களில் பெண்கள் அழுது கொண்டிருந்தனர். [16] 2012இல் கோவில் குடமுழுக்கு விழாவில் தலித்துகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை, 2013இல் கோவில் திருவிழாக்களில் தலித்துகள் கலந்துகொள்ளவில்லை. 2014 ஏப்ரலில், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆதிக்க சாதி கிராம மக்கள் கோயிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினர். [15]

2015 அக்டோபரில், அரச மரத்தில் மாலை வைப்பதில் தகராறில் தொடங்கிய கோயில் திருவிழாவின் போது தலித்துகளுக்கும் ஆதிக்க சாதி கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 6 விசையுந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு, வட்டாட்சியர் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இரு சாதியை சேர்ந்த 70 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மோதலின் போது காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். [17]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Viswanathan, S. (6 June 2008). "The fall of a wall" (in en). Frontline - The Hindu (Uthapuram). https://frontline.thehindu.com/social-issues/article30196334.ece. 
  2. Dorairaj, S. (18 November 2011). "Accord in Uthapuram" (in en). Frontline - The Hindu. https://frontline.thehindu.com/other/article30177752.ece. 
  3. 3.0 3.1 "Uthapuram Dalits count on CPM". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  4. Staff (2008-05-14). "TN: Caste Hindus return to Uthapuram village". OneIndia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  5. "A wall that divides people for over two decades". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  6. 6.0 6.1 "Finally, caste wall that divided a village is breached - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  7. "Everybody's walled up against Dalits here". DNA India (in ஆங்கிலம்). 2009-05-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  8. "Caste torment, from south to north Communist war against 'Berlin Wall'". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  9. "Watch: The history behind caste walls in Tamil Nadu". thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  10. "Caste Conflict and Peace Process in Uthapuram (2008-2012): Lessons for Social Workers". Researchgate.
  11. "Another caste wall goes". Frontline - The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  12. "Hole in wall prompts upper caste exodus". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  13. "Wall of untouchability breached | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  14. RAJ, S. DORAI. "Wall vs will". Frontline - The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-02.
  15. 15.0 15.1 "Uthapuram 'wall' demolished years ago, still no peace between Dalits and caste Hindus here". thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  16. "Dalits given entry into Tamil Nadu temple after decades". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  17. "TN: 15 Injured in Clash During Temple Festival". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தபுரம்_சாதிச்_சுவர்&oldid=3907852" இலிருந்து மீள்விக்கப்பட்டது