உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள்

உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்திரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோவிலில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907–955) 12 ஆம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி 917), 14 ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் குறிக்கும். உத்திரமேரூரின் மையப்பகுதியில் தமிழர் கலைப்பாணியில் அமைந்துள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் (731-796) 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2] [3] [4][5] இங்குள்ள கல்வெட்டுக்களில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (750 கி.பி) பெயரே முதன்முதலில் இடம்பெற்றுள்ளது.[6]

உத்திரமேரூர்: வரலாறு

தொகு

உத்தரமேரூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய கிராமம் ஆகும் உத்திரமேரூரில் நான்கு பல்லவ மன்னர்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சோழர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907–950), முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985–1014), முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1012–1044) மற்றும் குலோத்துங்க சோழன் I (1070–1120) காலத்திய கல்வெட்டுகள் கோவில்களுக்கு வழங்கிய பல்வேறு கொடைகளைப் பதிவு செய்துள்ளன.[7]. இவ்வூர் உத்தரமேரு சதுர்வேதிமங்கலம், ராஜசந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேரு மங்கை, உத்தரமேலூர், பாண்டவவன, பஞ்சவரத க்ஷேத்திரம், ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன. [6]

உத்திரமேருர் கிராமமும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியின் கீழ் வந்தது. தொடர்ந்து, தெலுங்கு சோழ மரபைச் சேர்ந்த விஜய கந்தகோபாலன் இப்பகுதியினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இக்கிராமத்திற்கு கந்தகோபால சதுர்வேதி மங்கலம் என்றும் பெயர் சூட்டினார். பிற்காலத்தில், இக்கிராமம் சம்புவராயர் மற்றும் குமார கம்பனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1502-29) சுந்தரவரதப் பெருமாள் கோவில், சுப்ரமணிய கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களை விரிவாக்கம் செய்தார்.[7]

உத்திரமேரூர் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள்

தொகு

சோழப் பேரரசின் ஆட்சியின் போது, உத்தரமேரூர் கிராமம் 1200 கற்றறிந்த வைஷ்ணவ பிராமணர்களுக்கு நிலக்கொடையாக வழங்கப்பட்டது, இவ்வாறு வழங்கப்பட்ட கிராமங்கள் சதுர்வேதிமங்கலம் அல்லது பிரம்மதேயம் அல்லது தேவதான கிராமங்கள் (பிராமண குடியிருப்புகள்) என்று அழைக்கப்பட்டன இவ்வூர் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் கி.பி. 9 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை பிராமண குடியேற்றமாக தொடர்ந்த இருந்துள்ளது. சோழர்களின் ஆட்சியின் கீழ் இது ஒரு புதிய பிராமண காலனியாக நிறுவப்பட்டது.[6]

உத்திரமேரூர் கோவில் கல்வெட்டுகள் கிராமிய உள்ளாட்சி அமைப்புகள் குறித்த செய்திகளை பதிவு செய்துள்ளன. உத்திரமேரூரில் "மகாசபா" மற்றும் "ஊர்" என்ற இரண்டு கிராம சபைகள் இருந்ததை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகாசபா ஒரு பிரத்தியேக பிராமணர்களுக்கான உள்ளாட்சி நிர்வாக அமைப்பாகும். ஊர் என்பது பிராமணர்கள் தவிர்த்து அனைத்து வகுப்பினரையும் சேர்ந்தவர்களுக்கான உள்ளாட்சி நிர்வாக அமைப்பாகும். சோழர்களின் தன்னாட்சிமுறை (Self-Governance) இத்தகைய உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் மீது கட்டமைக்கப்பட்டிருந்ததன. மகாசபைகள் என்பன கிராமங்களின் பிரத்தியேகமான பிராமண சபைகளாக இருந்தன. கோவில்கள் கிராமங்களின் அதிகார மையங்களாக செயல்பட்டதால், கோவிலோடு இணைந்திருந்த மகாசபைகள் உள்ளாட்சி நிர்வாக மையங்களாக மாற்றம் கண்டன..சோழர்களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது,

வைகுந்தப் பெருமாள் கோவில் அமைப்பு

தொகு
 
வைகுந்தப்பெருமாள் கோவில், உத்திரமேரூர்
 
வைகுந்தப் பெருமாள் கோவில் விமானம்

வைகுந்தப் பெருமாள் கோவில் ஏகதள வேசர விமானத்துடன் அமைந்த கருவறை, அர்த்தமண்டபம், மற்றும் முகமண்டபத்துடன் கூடிய கற்றளியாகும். முகமண்டபம் 16 தூண்களுடன் அமைந்துள்ளது. கருவறை பாதபந்த அதிட்டானத்துடன் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் வைகுந்தப் பெருமாள் மற்றும் தாயார் அனந்தவல்லித் தாயார் ஆவர். இக்கற்றளி கி.பி. 1090 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று இரா.நாகசாமி கருதுகிறார். [6] தற்போது கருவறையில் எந்த சிலையும் நிறுவப்படவில்லை.

இங்கிருந்த முகமண்டபத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிராம சபையானது செயல்பாட்டில் இருந்துள்ளது. உத்திரமேரூர் மகாசபை கிபி 750 முதல் கிபி 1250 வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மகாசபை மண்டபத்தின் அதிட்டானத்தில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு பொறிக்கப்பட்டிருந்த சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907–955). ஆட்சிக் காலத்தில் இக்கோவிலின் அதிட்டானத்தில் பொறிக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் - கிரந்தக் கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் (ASI) படியெடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த மகாசபை மண்டபம் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்துக்கான குடவோலை தேர்தல் முறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. உத்திரமேரூர் மகாசபை கிபி 750 முதல் கிபி 1250 வரை மேற்கொண்ட பல்வேறு மதச்சார்பற்ற நிர்வாக செயல்முறைகள், அரசாணைகள், விவாதங்கள், தீர்மானங்கள், ஆகியனமகாசபை மண்டபத்தின் அதிட்டானத்தில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.[6]

இவ்வூர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வைணவ ஆகம நூல்களில் பரிந்துரைக்கப்பட்டபடி மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த மகாசபை மண்டபம் உத்திரமேரூர் கிராமத்தின் மையத்தில் (பிரம்மஸ்தானத்தில்) சரியாக அமைந்துள்ளது. மேலும் இக்கிராமத்திலுள்ள அனைத்து கோயில்களும் இந்த மையப் புள்ளியைச் சுற்றி அமைந்துள்ளது சிறப்பு. இந்த மகாசபை மண்டபத்தைச் சுற்றி மேற்கில் சுந்தரவதனப் பெருமாள் கோவிலும், அதனை ஒட்டி பாலசுப்ரமணியர் கோவிலும், ஈசான்ய மூலையாகிய வடகிழக்கில் கைலாசநாதர் கோவில் மற்றும் சப்தமாதர் (மாதிரி அம்மன்) கோவிலும், இதனையடுத்து துர்க்கை ("வடவாயிற் செல்வி") கோவிலும், தெற்கில் "அய்யன் மகா சாஸ்தா" என்னும் ஐயனார் கோவிலும் (தற்போது சிலை மட்டும் உள்ளது), தென்மேற்கே ஜேஷ்டை கோவிலும் (தற்போது கோவில் இல்லை ஜேஷ்டை சிற்பம் மட்டும் உள்ளது) அமைந்துள்ளன. [6] பிராமணர்கள் வசித்த இடங்கள் சேரி என்று அழைக்கப்பட்டுள்ளன.

சதுர்வேதிமங்கலம் மகாசபை: உள்ளாட்சி நிர்வாக அமைப்பு

தொகு
 
வைகுந்தப் பெருமாள் கோவில் மகாசபை மண்டபம்

முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி 920 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட குடவோலை தேர்தல் முறைக் கல்வெட்டு இந்திய வரலாற்றில் ஒரு சிறந்த ஆவணமாகும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட உத்திரமேரூர் மகாசபையின் எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். அரசியலமைப்பு மற்றும் குடவோலை தேர்தல் நடைமுறைகள்' குறித்து 11 மற்றும் 14 ஆம் ஆட்சியாண்டுகளில் வெளியிடப்பட்ட முதலாம் பராந்தக சோழனின் அரச ஆணைகள் தொடர்பாக உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் மகா சபையின் பொதுக்குழு கூட்ட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த இரண்டு கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

கல்வெட்டு பாடம்

தொகு
  1. ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பர கேசரிபம்மர்க்கு யாண்டு ப[ன்]னிர[ண்]டு ஆவது உத்திரமேருச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸபையோம். இவ்வாண்டு முதல் எங்களூர் ஸ்ரீ முகப்படி ஆக்ஞை
  2. யினால்த் தத்தநூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக் காலும் ஸம்வத்ஸர வாரியமுந் தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தைய் [செய்]
  3. த பரிசாவது குடும்பு முப்[பதாய்] முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி கா னிலத்துக்கு மேல் இறை நிலம் உடையாரை, தன் மனையிலே அ
  4. கம் எடுத்துக் கொண்டு இருப்[பானை], அறுபது [பி]ராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேத[த்]திலும், ஸாஸ்த்ரத்திலும், கார்யத்திலும் நிபுணரென்னப் பட்டி
  5. ருப்பாரை அர்த்த ஸௌஸமும் ஆத்ம ஸௌஸமும் உடையாநய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு
  6. அணிய பந்துக்கள் அல்லாத்தா[ரைக்] குடவோலைக்குப் பேர் தீட்டி சேரி வழியேய் திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராமாறு ஏது முருவறியாத்தான் ஒரு
  7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்துப் பன்னிருவரும் ஸம்வத்ஸர வாரியமாவதாகவும் அதின் மின்பேய் தோட்ட வாரியத்துக்கு மேற்படி குடவோ
  8. லை வாங்கிப் பன்னிருவரும் தோட்ட வாரியமாவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியமா
  9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம்(ஞ்) செய்கின்[ற] மூன்று திறத்து வாரியமும், முந்நூற் அறுபது நாளும் நிரம்[ப] வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவ்வ்யவஸ்தை யோ[லை]ப்படியேய் குடும்புக்குக் குடவோலையிட்டுக் குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியஞ் செய்தார்[க்]கு பந்துக்களும் சேரிகளில் அன்நோந்யம் _ _ __ அவரு
  10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப் படாதாராகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்ப(த்)து குடவோலை இட்டு சேரியால் ஒருத்தரைக் குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்ச[வார] வாரியமாவிதாகவும் அறுவர் பொன் வாரியமாவதாகவும் ஸம்வத்ஸர வாரி[ய]ம் அல்லா(த்)த
  11. வாரியங்கள் ஒருக்கால் செய்தாரை பின்னை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெறாத(தி)தாக[வு]ம். இப்பரிசே யிவ்வாண்டு முதல் சந்த்ராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்த்ரன் சக்ரவத்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பராந்தக தேவராகிய பரகேஸரி வம்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
  12. ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தநூர் மூவேந்த வேளாநுடனிருக்க நம் க்ராமத்து துஷ்டர் கெட்டு ஸிஷ்டர் வர்த்தித்திடுவாராக வ்ய[வ]ஸ்தை செய்தோம் உத்தர மே[ரு]ச் சதுர்வேதி மங்கலத்து ஸபையோம்.


உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் 30 குடும்புகளுக்கான (Wards) சபை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களின் தகுதி, தேர்தல் நடைமுறைகள் குறித்து மகா சபை பொதுக்குழு கூடி தீர்வு காணப்பட்டது.

மகா சபையின் தீர்மானங்கள் மற்றும் தீர்வுகள்

தொகு

தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மரின் அரசாணையின் படி காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோர், சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட மகா சபையின் தீர்மானங்கள் மற்றும் தீர்வுகள்:

உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலம் மகா சபை, அரசாணைப்படி பொதுக்குழுவைக் கூட்டி, அரசாணையில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின்படி விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. அதன்படி, 'நடப்பு ஆண்டுக்கான குழுவின்' உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.[8]

கல்வெட்டுகளின்படி, ஒவ்வொரு கிராமமும் குடும்புகளாக (Wards) பிரிக்கப்பட்டன, மேலும் ஒவ்வொரு குடும்பிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து பொதுச் சபைக்கு அனுப்பலாம்.[8]

உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலத்தில் முப்பது வார்டுகள் இருக்க வேண்டும்; (முப்பதா முப்பது குடும்பத்திலும்)[8]

இந்த முப்பது குடும்புகளிலும், ஒவ்வொரு கூடும் குடும்பிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, கீழ்க்கண்ட தகுதிகள் உள்ளவர்களை "குடவோலை) தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். (குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரே கூடிக்)

தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு 1. வயது, 2. அசையாச் சொத்து வைத்திருத்தல், 3. கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.[8]

போட்டியிட விரும்பியவர்கள்:

தொகு
  • 1. கால் வேலிக்கு மேல் வைத்திருக்க வேண்டும் (ஒரு வேலி = 6.17 ஏக்கர்) (காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான்);
  • 2. சட்டப்பூர்வமாகச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு சொந்தமாக இருக்க வேண்டும் (தன் மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை);
  • 3. 35 வயதுக்கு மேல் மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார்);
  • 4. 'மந்திர பிராமணம்' 'Mantrabrahmana' (மந்திர உரை) பற்றிய அறிவும் மற்றவர்களுக்கு அதையே கற்பிப்பதில் அனுபவமும் இருக்க வேண்டும். (மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக்);
  • 5. அரைக்கால் (1/8) வேலி நிலத்தை மட்டுமே சொந்தமாக வைத்திருப்போர், ஒரு வேதம் மற்றும் நான்கு பாஷ்யங்களில் ஒன்றைக் கற்று மற்றவர்களுக்கு விளக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், இதன் அடிப்படையில் அவர் போட்டியிட தகுதியுடையவர். அதாவது வாக்காளர்கள் அவரது பெயரை குடவோலையில் (வாக்குச் சீட்டில்) எழுதி பானையில் போடலாம். (அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும்);
  • 6. வணிகத்தில் நிபுணத்துவம் மற்றும் அவர்களின் நற்பண்புகளுக்காகாகப் பெயர் பெற்றிருத்தல் போன்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். (அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும்);
  • 7. நேர்மையான சம்பாத்தியம் மற்றும் தூய்மையான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். (அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய்);[8][9]

போட்டியிட தகுதியற்றவர்கள்

தொகு
  • 1. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏதேனும் ஒரு குழுவில் பணியாற்றியவர்கள், மற்றும் அவர்களின் கணக்குகளை சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவரும் பின்வரும் வகுப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவரா? (மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும்);

கடமை தவறியவரின் உறவினர்கள்

தொகு
  • 2. கடமை தவறியவருடைய தாயின் இளைய மற்றும் மூத்த சகோதரிகளின் மகன்கள் (இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் = தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள்);
  • 3. கடமை தவறியவரின் தந்தைவழி அத்தை மற்றும் தாய்வழி மாமாவின் மகன்கள் (அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும்);
  • 4. கடமை தவறியவருடைய தாயின் இரத்த வழி சகோதரர் (மாமன்);
  • 5. கடமை தவறியவரின் தந்தையின் இரத்த வழி சகோதரர் (இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும்);
  • 6. கடமை தவறியவரின் இரத்த வழி சகோதரர் (இவர்களுக்குச் சிற்றனவர்);
  • 7. கடமை தவறியவரின் மாமனார் (மாமனார்);
  • 8. கடமை தவறியவரின் மனைவியின் இரத்த வழி சகோதரர் (பேரவ்வைகளையும்);
  • 9. கடமை தவறியவரின் இரத்த வழி சகோதரியின் கணவர் (தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் = உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர்);
  • 10. கடமை தவறியவரின் இரத்த வழி சகோதரியின் மகன்கள் (உடப் பிறந்தாள் மக்களையும்);
  • 11. கடமை தவறியவரின் மகளை மணந்த மருமகன் (தன மகளை வேட்ட மருமகனையும் = தன் மகளை மணம் புரிந்த மருமகன்):
  • 12. கடமை தவறியவரின் தகப்பன் (தன தமப்பனையும்);
  • 13. கடமை தவறியவரின் மகன் (தன மகனையும்);
  • 14. ஒருவருக்கு எதிராக தகாத உறவில் ஈடுபடுபவர் (ஐந்து பெரும் பாவங்களில் முதல் நான்கிற்கு அகம்யாகமன் பதிவு செய்யப்பட்டுள்ளது (இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும்);

(இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக);

  • 15. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கடமை தவறியவர்களின் உறவுகளின் பெயர்கள் குடவோலைகளில் எழுதப்பட்டு பானையில் இடப்படக்கூடாது. (இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக);
  • 16. முட்டாள்தனமானவன் (சாகசிய ராயிரைப்பாரையும்);
  • 17. மற்றொருவரின் சொத்தை அபகரித்தவன் (பரத்ரவியம் அபகரித் தானையும்);
  • 18. தடை செய்யப்பட்ட உணவுகளை (?) எடுத்துக் கொண்டவர் மற்றும் பரிகாரம் செய்து தூய்மையானவர் (கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும்);
  • 19. பாவம் செய்தவர் மற்றும் பரிகாரச் சடங்குகள் செய்து தூய்மையானவர் (பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும்);
  • 20. தகாத புணர்ச்சிக் குற்றமுள்ளவர் மற்றும் பரிகாரச் சடங்குகளைச் செய்து தூய்மையானவர் (அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும்);
  • 21 இவ்வாறு குறிப்பிடப்பட்ட அனைவரும் அவர்களது வாழ்நாள் இறுதிவரை எந்த ஒரு குழுவிற்காகவும் பானையில் இடுவதற்காக குடவோலையில் அவர்களின் பெயர்களை எழுதக்கூடாது. (ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக).[8][9]

தேர்தல் முறை

தொகு
  • 1. இவர்கள் அனைவரையும் தவிர்த்து, (ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி);இவ்வாறு குறிப்பிடப்பட்ட முப்பது வார்டுகளில் குடவோலைகளுக்கு பெயர்கள் எழுதப்படும். (இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி);
  • 2. உத்தரமேரூரில் உள்ள இந்த பன்னிரெண்டு தெருக்களில் உள்ள ஒவ்வொரு வார்டும் தனித்தனியாக கட்டப்பட்ட முப்பது வார்டுகளுக்கும் தனித்தனி உறையிலிடப்பட்ட வாக்குச் சீட்டை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உறைகள் ஒரு குடத்தில் வைக்கப்பட வேண்டும். (இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும்);
  • 3. குடவோலைகளை எண்ணும் போது, மகாசபையின் பொதுக்குழு முழுக் கூட்டம், இளைஞர்கள் மற்றும் வயதான உறுப்பினர்கள் உட்பட, எல்லோரும் கூட்டப்பட வேண்டும். (குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு);
  • 4. அந்த நாளில் கிராமத்தில் இருக்கும் அனைத்துக் கோவில் பூசாரிகளும் (நம்பிமார்) எந்த விதிவிலக்குமின்றி, பொதுக்குழு கூடும் உள் மண்டபத்தில் அமர வைக்கப்பட வேண்டும். (அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியாமே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு);
  • 5. கோவில் பூசாரிகள் நடுவில் அவர்களுள் மூத்தவரான ஒருவர் எழுந்து நின்று, எல்லா மக்களுக்கும் தெரியும்படி மேல்நோக்கி அந்தப் பானையைத் தூக்குவார். (அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க);
  • 6. ஒரு வார்டு, அதாவது, அதைக் குறிக்கும் பொட்டலம், அல்லது உள்ளே என்ன இருக்கிறது என்பதைத் தெரியாத, அருகில் நிற்கும் ஒரு சிறுவனால் வெளியே எடுக்கப்பட்டு, மற்றொரு காலியான பானைக்கு மாற்றப்பட்டு அசைக்கப்படும். இந்தப் பானையிலிருந்து சிறுவனால் ஒரு குடவோலை எடுக்கப்பட்டு நடுவரிடம் (மத்தியஸ்தரிடம்) ஒப்படைக்கப்படும். (பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே குடுப்பதாகவும்);
  • 7. இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட குடவோலைக்குப் பொறுப்பேற்கும்போது, நடுவர் ஐந்து விரல்களைத் திறந்து உள்ளங்கையில் அதைப் பெறுவார். (அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும்);
  • 8. இவ்வாறு பெறப்பட்ட லாட்குச் சீட்டில் உள்ள பெயரை அவர் படித்துவிடுவார் (அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும்);
  • 9. அவர் வாசிக்கும் வாக்குச் சீட்டை உள் மண்டபத்தில் இருக்கும் அனைத்து பூசாரிகளும் படிக்க வேண்டும் (வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும்);
  • 10. இவ்வாறு வாசிக்கப்படும் பெயர் கீழே வைக்கப்படும் (ஏற்றுக்கொள்ளப்படும்). அதேபோல முப்பது வார்டுகளுக்கும் ஒரு ஆள் தேர்ந்தெடுக்கப்படுவார் (வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும்);

குழுவை அமைத்தல்

தொகு
பெயர் உறுப்பினர்கள் எண்ணிக்கை பொருள்
சம்வத்சர வாரியம் 12 வருடாந்திர குழு (அல்லது தோட்ட வாரியம் மற்றும் ஏறி வாரியம் , இந்த இரண்டு வாரியங்களில் பணியாற்றிய பெரியவர்களுக்கு மட்டுமே இந்த வாரியத்தின் உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது)
தோட்ட வாரியம் 12 தோட்ட வாரியம்
ஏரி வாரியம் 6 ஏரி வாரியம்
பஞ்சவர-வாரியம் தெரியவில்லை நிலைக் குழு
பொன் வாரியம் தெரியவில்லை பொன் வாரியம்
  • 11. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது பேரில், முன்பு தோட்ட வாரியத்திலும், ஏரி வாரியத்திலும் இருந்தவர்கள், படிப்பில் மேம்பட்டவர்கள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் சம்வத்ஸர வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும் வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும்);
  • 12. மீதமுள்ளவர்களில், பன்னிரெண்டு பேர் தொட்ட வாரியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள், மீதமுள்ள ஆறு பேர் ஏரி வாரியத்தை உருவாக்குவார்கள். (மிக்கு நினாருட்பன்னிருவரைத் தோட்ட வாரியங் கொள்வதாகவும்);
  • 13. இந்த கடைசி இரண்டு கமிட்டிகளும் காரைக் காட்டி தேர்வு செய்யப்படும் (நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும்);

குழுக்களின் பதவிக் காலம்

தொகு
  • 14. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மூன்று குழுக்களின் பெரிய மனிதர்கள் முழு முந்நூற்று அறுபது நாட்கள் பதவியில் இருந்து பின்னர் ஓய்வு பெறுவார்கள் (இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும்);

குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நபர்களை நீக்குதல்

தொகு
  • 15. குழுவில் உள்ள ஒருவர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக நீக்கப்படுவார் (வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங் கண்டபோது அவனை யொழித்துவதாகவும்);
  • 16. இவர்கள் ஓய்வு பெற்ற பிறகு குழுக்களை நியமிப்பதற்காக, உத்திரமேரூர் பன்னிரண்டு தெருக்களில் உள்ள "நீதி மேற்பார்வைக் குழுவின்" உறுப்பினர்கள் நடுவரின் உதவியுடன் பொதுக்குழு குறியைக் கூட்ட வேண்டும். (இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும்);
  • 17. இந்த தீர்வு ஆணையின்படி குடவோலைகள் குலுக்கல் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் (இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும்).[9]

பஞ்சவார வாரியம் மற்றும் பொன் வாரியம்

தொகு
  • 18. பஞ்சவாரிய குழு மற்றும் பொன் வாரியத்திற்கு, முப்பது வார்டுகளில் குடவோலைகளில் பெயர்கள் எழுதப்பட வேண்டும். உரையிலிடப்பட்ட குடவோலைகளுடன் கூடிய முப்பது உரைகள் ஒரு பானையில் இடப்படும். முப்பது குடவோலைகள் முன்பு விவரிக்கப்பட்டபடி குலுக்கப்படும். (பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும்);
  • 19. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முப்பது சீட்டுகளில், இருபத்து நான்கு பேர் பொன் வாரியக் குழுவிலும், மீதமுள்ள ஆறு பஞ்சவர் பஞ்சவார வாரியக் குழுவிலும் இடம்பெற வேண்டும். (பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும்);
  • 20. அடுத்த ஆண்டு இந்த இரண்டு வாரியங்களுக்கும் குடவோலை குலுக்கல் நடைபெறுகையில், இந்தக் குழுக்களில் ஏற்கனவே குறிப்பிட்ட ஆண்டில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வார்டுகள் விலக்கப்பட்டு, மீதமுள்ள வார்டுகளில் காரை வரைவதன் மூலம் குறைக்கப்படும். (பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும்);
  • 21. கழுதையின் மீது ஏறிச் சென்றவனும், மோசடி செய்தவனும் பானையில் போடும் பானைச் சீட்டில் தன் பெயரை எழுதக்கூடாது.[8]

கணக்காளரின் தகுதி

தொகு
  • 1. நேர்மையான வருமானம் உள்ள எந்தவொரு நடுவர் கிராமத்தின் கணக்குகளை எழுத வேண்டும் (மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும்);
  • 2. பெரிய கமிட்டியின் பெரிய மனிதர்களிடம் அவர் பதவியில் இருந்த காலத்துக்கான கணக்குகளைச் சமர்ப்பித்து நேர்மையானவர் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு அந்த அலுவலகத்தில் மீண்டும் எந்தக் கணக்காளரும் நியமிக்கப்படக்கூடாது. (கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கணக்குப் புகழ் பெருதானாகவும்);
  • 3. ஒருவர் எழுதிக் கொண்டிருக்கும் கணக்குகளை, அவர் தானே சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வேறு எந்த கணக்காளரையும் அவர் தனது கணக்கை முடிக்க தேர்வு செய்யக்கூடாது (தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும்);[8][9]

செயல்படுத்துதல்

தொகு
  • 1. அரசாணை இந்த ஆண்டு முதல் குடவோலை நடைமுறையை (குடவோலை அமைப்பு) செயல்படுத்தும் மற்றும் சந்திரன் மற்றும் சூரியன் இருக்கும் வரை தொடரும் (இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக)

அரசாணை பெறப்பட்டது

தொகு
  • 1. தேவேந்திரன், பேரரசர், ஸ்ரீ வீரநயன ஸ்ரீ பராந்தக தேவ (இவரும் பரகேசரி வர்மன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார்) அவர்களிடமிருந்து அரச ஆணை பெறப்பட்டது.(தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து);[8][9]

கிராம சபை அலுவலரால் பெறப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது

தொகு
  • 1. உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலத்தின் மகா சபை உறுப்பினர்களிடம் கரஞ்சை கொண்டையா - புரங்கரம்பைநாடு (மாவட்டத்தின் பெயர்) ஸ்ரீவங்கா நகரைச் சேர்ந்த சோமாசிபெருமாள் என்கிற கிராமவித பட்டன் (பிராமணர் சாதிப் பெயர்) அரச ஆணை பெற்றுக் காட்டப்பட்டது (சமர்ப்பித்தது), சோழ நாடு (நாடு) (வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயால் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க);[8][9]

மத்தியஸ்தான்

தொகு
  • 1. உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலம் சபையின் மத்தியஸ்தானமாக காடாடிப்போட்டான் சிவக்குறிச்சி ராஜமல்லமங்கலப்பிரியன் செயல்பட்டார். (நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் மத்யஸ்தன் காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்);[8]

வெளி இணைப்புகள்

தொகு

Uttaramerūr பரணிடப்பட்டது 2022-10-04 at the வந்தவழி இயந்திரம் Nagaswamy R. Tamil Arts Academy, 2003

மேற்கோள்கள்

தொகு