உமா தேவி பாடி

உமா தேவி பாடி (Uma Devi Badi) (பிறப்பு 1965) நேபாளத்தின் சுதூர் பாசிம் மாகாணத்தின் மாகாண சட்டமன்ற உறுப்பினராக 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலரும், பாடி இயக்கத்தின் தலைவரும் ஆவார். இவர், தீண்டாமை, பாலியல் தொழில், நில உடைமை மற்றும் குடியுரிமை உள்ளிட்ட தனது சமூகத்தின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

உமா தேவி பாடி
பிறப்பு1965 (அகவை 58–59)
தபகௌன்
தேசியம்நேபாளி
பணிஅரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர்
அறியப்படுவதுநேபாளத்தில் பாடி இயக்கத்தின் தலைவர்
அரசியல் இயக்கம்48 நாள் பாடி இயக்கம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

உமா தேவி பாடி 1965இல் நேபாளத்தின் சல்யான் மாவட்டத்தில் உள்ள தபகௌனில் பிறந்தார். சிறு வயதில், இவர் ஒரு பாலியல் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் பாடி சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு அமைந்த ஒரே தொழில் இதுவே ஆகும். தனது 21 வயதில், பிராமணரான பிரேம் பட்டா என்பவரை மணந்தார். பாடி சாதி நேபாளத்தில் மிகக் குறைந்த படிநிலையில் ஒன்றாக கருதப்படுவதாலும், தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவதாலும், இவர்களது திருமணம் அந்த நேரத்தில் ஒரு பிரச்சனையை உருவாக்கியது. இவருக்கு குழந்தைகள் இல்லை. மாறாக அதற்கு பதிலாக தனது சகோதரியின் இரண்டு மகன்களை வளர்த்தார்.

செயல்பாடுகள் தொகு

இவர், தனது சாதியைச் சேர்ந்த பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் தனது பாலியல் வாழ்க்கையிலிருந்து வெளியேறினார். 40 வயதில், ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பான ஆக்சன் எய்ட் என்ற நிறுவனத்தின் ஆதரவுடன், மேற்கு நேபாளத்தின் திக்காபூரில் ஒரு வாடகை வீட்டில் பாடி சாதியைச் சேர்ந்த 25 சிறுவர் சிறுமிகளுக்காக ஒரு விடுதி அமைத்தார். குழந்தைகளுக்கு அங்கு தங்குமிடம் வழங்கப்பட்டு உள்ளூர் பள்ளிக்கு அனுப்பப்படுவதோடு, அவர்களின் கல்வியறிவு பெருக நடவடிக்கை எடுத்தார். இந்த திட்டத்தின் வெற்றி தற்போது கட்டுமானத்தில் உள்ள ஒரு பெரிய திட்டத்திற்கு வழிவகுத்தது. இது எதிர்காலத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2007இல், இவர் தனது பாடி சமூகத்தின் உரிமைகளுக்காக ஆதரவு தெரிவிக்கும் 48 நாள் பாடி இயக்கம் என்று அறியப்பட்ட இயக்கத்தின் தலைவரானார். அந்த காலகட்டத்தில், இவர், 23 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 பாடி ஆர்வலர்களை அவர்களின் கிராமங்களிலிருந்து காட்மாண்டுவில் உள்ள சிங்க அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். [1] அங்கு இவர்கள் பிரதமர் அலுவலகத்திலும், பசுபதிநாத் கோவிலுக்கு வெளியேயும் அமைதியான போராட்டங்களை நடத்தினர். பாடி சமூகத்தின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த 2005 உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், 26 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், [2] விபச்சாரம் மற்றும் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், தங்கள் சமூகத்திற்கு நிரந்தர தங்குமிடம் வேண்டும் எனவும், தங்களின் பிறப்புகளை பதிவு செய்து, தங்களின் குழந்தைகளுக்கு தாயின் பெயரில் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையில் அடங்கும். [3] இவர்களின் கோரிக்கைகள் அரசால் கேட்கப்படாமல் இருந்தபோது, இவர் போராட்டத்தை தீவிரப்படுத்தினார். இவர் அரை நிர்வாணமாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தார். போராட்டத்தில் இருந்த மற்ற பெண்களும் இவரது முன்மாதிரியைப் பின்பற்றினர். இந்த நடத்தை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இந்த விவகாரத்திற்கு சர்வதேச கவனமும் வழங்கப்பட்டது. செப்டம்பர் 10, 2007 அன்று, இவரை சந்திக்கவும், பாடி சமூகத்திற்காக ஒரு பொது குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

கௌரவம் தொகு

இவரது செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக, இவர் 2018 ஆம் ஆண்டில் பிபிசி தன்து 100 பெண்களின் பட்டியலில் இவரை இடம்பெறச் செய்தது. [1][4]

2017 தேர்தல்கள் தொகு

2017 ஆம் ஆண்டில், மாகாண எண் 7க்கான தேசிய சட்டமன்ற உறுப்பினராக உமா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆனார். 2007 முதல், பாடி சமூகத்திற்கான வாழ்க்கை நிலைமைகள், கல்வி மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்த நேபாள அரசாங்கத்தின் முயற்சிகள் மந்தமாக உள்ளன என்று குற்றம் சாட்டினார். தான் அரசாங்கத்திற்குள் செயல்படுவதன் மூலம் அந்த மாற்றங்களை விரைவுபடுத்து முடியும் என்று நம்புவதாகக் கூறினார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Badi movement leader Uma Devi among BBC 100 Women - Aawaaj News" (in en-US). Aawaaj News. 2018-11-20 இம் மூலத்தில் இருந்து 2019-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190401221636/http://www.aawaajnews.com/2018/11/badi-movement-leader-uma-devi-among-bbc-100-women/. 
  2. "The Sunday Tribune - Spectrum". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  3. "BBC 100 Women 2018: Nepal’s Uma Devi is World’s Top-10!" (in en-US). Nepali Sansar. 2018-11-20. https://www.nepalisansar.com/world/bbc-100-women-2018-nepals-uma-devi-is-worlds-top-10/. 
  4. "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). BBC News. 2018-11-19. https://www.bbc.com/news/world-46225037. 
  5. "Nepal’s First Badi Parliament Member Advocates for the Historically Oppressed Group" (in en-US). Global Press Journal. 2018-06-07. https://globalpressjournal.com/asia/nepal/nepals-first-badi-parliament-member-advocates-historically-oppressed-group/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_தேவி_பாடி&oldid=3235410" இலிருந்து மீள்விக்கப்பட்டது