உயிரியல் போர்

ஆபத்தான வைரஸால் மனிதனைக் கொல்வது

உயிரியல் போர்முறை, உயிரிப்போர் அல்லது கிருமி போர்முறை (Biological warfare) என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப் பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாதவாறு செய்யும்படி தாக்குவது ஆகும். உயிரியல் ஆயுதங்கள் என்பது ஓம்புயிருக்குள் சென்றவுடன் அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்து வளர்ச்சியடையும் ஒரு உயிரினம் அல்லது தானே பெருக்கிக் கொள்ளும் திறம் படைத்த உருப்படி (வைரஸுகள் உயிருள்ளவையாக கருதப்படுவதில்லை) ஆகும்[1]. பூச்சியியல் போர்முறையும் உயிரிப்போரில் ஒருவகையாக கருதப்படுகிறது.நால்வகைப் பேரழிவு ஆயுதங்களுள் இதுவும் ஒன்று.கதிரியக்கப் போர், அணுஆயுத போர் மற்றும் வேதியியல் போர் ஏனையவையாகும்.

உயிரி ஆயுதங்கள் ஒரு தனி நபரையோ, ஒரு கூட்டத்தாரையோ அல்லது ஒரு முழு இனத்தையோ அழிக்கும் படி பிரத்யேகமாக உருவாக்கபடலாம். இவை ஒரு நாட்டினாலோ அல்லது நாடு சாராத தனிக் கூட்டத்தாரலோ உருவாக்கப்படவும், வாங்கவும், சேர்ப்பில் வைத்து பின்னர் உபயோகப்படுத்தப்படவும் முடியும். நாடு சாராத தனிக் கூட்டத்தாரால் உபயோகப்படுத்தப்படின், அது உயிரித்தீவிரவாதம் என்றழைக்கப்படும்.

உயிரிப்போர்முறையும் வேதிப்போர்முறையும் ஒன்றையொன்று தழுவியவாறே உள்ளது. உயிரியாயுதங்களால் வெளிப்படுத்தப்படும் நச்சு, உயிரியல் ஆயுதங்கள் பட்டியலிலும் அதே சமயம் வேதியியல் ஆயுதங்கள் பட்டியலிலும் இடம்பெறும்.

உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவது போர்க் குற்றமாக கருதப்படும்‌.

மேற்பார்வைதொகு

1972 இல் நடந்த உயிரியாயுதக் கூட்டத்தொடரில் தாக்குதலுக்கான உயிரியல் ஆயுதங்களின் உருவாக்கம், சேமிப்பு மற்றும் பயன்பாடு சட்டவிரோதமாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 170 நாடுகள் கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது, உயிரியாயுத தாக்குதலினால் இராணுவமல்லாத குடிகளின் உயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்ளாட்சி குலையும் நிலையை தவிர்ப்பதே ஆகும்.

வரலாறுதொகு

உயிரியாயுதங்களின் பயன்பாடு ஆதிமுதலே இருந்திருப்பதாக தெரிகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே அசீரியர்கள் தங்கள் எதிரிகளுக்கு பித்துப் பிடிக்கும் படி , பூஞ்சைகளினால் நஞ்சு வைத்ததாக அறியப்படுகிறது. பிரித்தானியர்கள் பெரியம்மை நோயை உயிரியாயுதமாக 1763 மற்றும் 1789 களில் அமேரிக்கா ம்ற்றும் நியூ தெற்கு வேல்ஸ் போன்ற இடங்களில் உபயோகித்தாக கூறப்படுகிறது. ஆயினும் போதிய சான்றுகள் இல்லாதபடியால் இவை உறுதிசெய்யப்படவில்லை.

1900 களில் நோய் நுண்மைக்கோட்பாடு மற்றும் பாக்டீரியா பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் உயிரியாயுதக் காரணிகளை, போரில் கையாளும் முறையில் வேறு கட்டத்துக்கு எடுத்து சென்றது.

இரண்டாம் உலகப்போர்தொகு

இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலகட்டத்தில், ஐக்கிய இராஜ்யத்தின் போர்டன் டோவுன் என்ற இடத்தில் , பால் பில்டேஸ் என்ற நுண்ணுயிர் வல்லுநர் தலைமையில் ஒரு உயிரியாயுத திட்டத்தை தொடங்கியது, அந்நாட்டின் சேமிப்பு அமைச்சகம். இதுவே பின்னாளில் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் துலரெமியா, ஆந்திராக்சு மற்றும் புருசெலுசிஸ் போன்றவற்றை ஆயுதாமாக்கி வெற்றிகண்டது.இதே சமயத்தில் ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகள் தங்களின் தனி தனி உயிரியாயுதத் திட்டத்தை தொடங்கின.

ஐக்கிய அமேரிக்க அரசு போரில் நுழைந்ததும், நேச நாடுகளின் வளங்கள் அனைத்தும் பிரித்தானிய வேண்டுகோளின் பேரில் ஒன்றினைக்கப்பட்டன. இதை தொடர்ந்து ஐக்கிய அமேரிக்க அரசு, மேரிலாந்தில் ஜார்ஜ் மெர்க் என்பவரின் தலைமையில் ஒரு பெரிய ஆராய்ச்சி கழகத்தை தொடங்கியது. இங்கே உருவாக்கப்பட்ட உயிரியாயுதங்கள் உடா பாலைவனத்தின் டக்வே சோதனை மையத்தில் சோதிக்கப்பட்டன. விரைவிலேயே ஆந்திராக்சு, புருசெலுசிஸ் மற்றும் போட்டுலிசம் போன்ற உயிரியாயுதங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட, ஆங்காங்கே ஆராய்ச்சிக் கழகங்களும் சோதனை மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனாலும் இவை எல்லாம் போரில் பயன்படுத்தப்படும் முன்னரே போர் முற்றிற்று.

 
Shiro Ishii, இராணுவப்பிரிவு 731 தளபதி ஷிரோ இஷீ.

மிகவும் பேர்போன உயிரியாயுத ஆராய்ச்சி 'ஏகாதிபத்திய ஜப்பானின் இராணுவ பிரிவு 731' ஆல் மிகவும் ரகசியமாக செய்யப்பட்டது. தளபதி ஷிரோ இஷீ வழிநடத்த, மஞ்சூரியாவை மையமாக கொண்டு மனிதர் மீது ஆராய்ச்சி செய்து போரில் பயன்படுத்தக்கூடிய உயிரியாயுதங்களை தயாரித்துக் கொண்டிருந்தது இந்த பிரிவு. அமேரிக்க பிரித்தானிய தொழில்நுட்பங்கள் இல்லாதபோதும், இவர்களின் தீவிர ஆராய்ச்சி முறையால் இவர்களின் உயிரியாயுதங்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சற்றே உயர்ந்துதான் காணப்பட்டது. சீனப்படையின் மீதும் பொதுமக்கள் மீதும் உயிரியாயுத தாக்குதலையே நடத்தியது ஜப்பான். 1940இல் நிங்போவின் மீது கொடூர பிளேக் நோயைக்கொண்ட உண்ணிகள் நிறைந்த செராமிக் குண்டுகளை வீசியது. பெரும்பாலான இவ்வகை தாக்குதல்கள் சரியான விநியோக முறையில்லாததால் பெரிதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமற்போயிற்று. இருந்தும்கூட 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். சரிவர கட்டுப்படுத்த முடியாததால் தன் வீரர்கள் பலரையும் இவ்வகை தாக்குதல்களில் பலி கொடுத்தது ஜப்பான்.

போரின் கடைசி காலத்தில் பிளேக் நோயை உயிரியாயுதமாகக் கொண்டு அமெரிக்காவின் சான் டியாகோ, கலிபோர்னியா போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ஜப்பான். செப்டம்பர் 22, 1945 இல் இந்தத் தாக்குதலை நடத்த முடிவு செய்து, இத்திட்டத்துக்கு " இரவு நேர செர்ரி பூக்கள்[2]" என பேரிட்டது ஷிரோ இஷீ யின் இராணுவப்பிரிவு. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த எதிர்பாராத தாக்குதல்களினால் அம்மாதம் 15 ஆம் தேதி நிபந்தனையற்ற சரணடைந்தது ஜப்பான். இதனால் உயிரியாயுதத் தாக்குதல்கள் நடக்காமலேயே போர் முடிவுக்கு வந்தது.

இந்தியாவும் உயிரியாயுதமும்தொகு

இந்திய குடியரசு பேரழிவு ஆயுதங்களை அணு ஆயுத வடிவில் வைத்திருப்பதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ வெளியீடுகள் ஏதும் இல்லை என்றாலும் இந்திய அரசானது உயிரித் தொழில்நுட்பங்களில் நல்ல திறம் படைத்ததாகவே கருதப்படுகிறது[3].

 
உலகளாவிய 'உயிரியல் தீங்கு' எச்சரிக்கை குறியீடு

நுண்ணுயிரி வல்லுநர்கள் மற்றும் தொற்றுநோய் வல்லுநர்கள் பலரிருந்துங்கூட இந்திய அரசு உயிரியாயுதத்தை முதற்கட்ட தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்த எவ்வித முனைப்பாடு காட்டவோ அல்லது அதற்கென்று தனித்திட்டமோ செயல்படுத்தவில்லை. உயிரியாயுதக் கூட்டத்தொடரின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய உயிரியாயுதத்தில் எவ்வித ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறது என்று நிரூபிக்க எந்த விதமான சான்றுகளும் இல்லை. இதை தெளிவு படுத்தும் பொருட்டு, அக்டோபர் 2002இல், அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், " இந்தியா உயிரியாயுதங்களை தயாரிக்காது. உயிரியாயுதம் மனித இனத்திற்கே பெருங்கேடு விளைவிக்கும்." என்று தெரிவித்துள்ளார்[4].

இணையதள மூலங்கள்தொகு

  1. "BIOLOGICAL WARFARE", telemedicine.org, 2018-04-20 அன்று பார்க்கப்பட்டது
  2. Fishel, Heather (2016-05-21), "Operation Cherry Blossoms at Night, The WW2 Japanese Plan to Wage Biological Warfare on the USA", WAR HISTORY ONLINE (in ஆங்கிலம்), 2018-04-20 அன்று பார்க்கப்பட்டது
  3. "NBC Disasters: Prevention & Management", Indian Defence Review (in ஆங்கிலம்), 2018-04-20 அன்று பார்க்கப்பட்டது
  4. NTI: Research Library: Country Profiles: India Biological Chronology, 2011-06-04, 2018-04-20 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_போர்&oldid=2741886" இருந்து மீள்விக்கப்பட்டது