உலகைச் சுத்தமாக்குங்கள்

உலகைச் சுத்தமாக்குங்கள் (Clean Up the World) என்பது, சமுதாய அடிப்படையிலான ஒரு சூழல் தொடர்பான இயக்கம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்கள் தமது சூழல்களைச் சுத்தமாக்குவதற்கும், திருத்துவதற்கும், காப்பதற்கும் ஊக்கமளிக்கிறது. இந்த இயக்கத்தின் முதன்மையான நிகழ்வு உலகைச் சுத்தமாக்குங்கள் கிழமையிறுதி ஆகும். இது ஒவ்வோராண்டும் செப்டெம்பர் மாதத்தின் மூன்றாவது கிழமை இறுதியில் நிகழ்கின்றது. எனினும் இவ்வியக்கம், ஆண்டு முழுவதும் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கிறது.

உலகைச் சுத்தமாக்குங்கள்
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
நிறுவப்பட்டது1993
தலைமையகம்சிட்னி, ஆசுத்திரேலியா
தோற்றம்ஆசுத்திரேலியாவைச் சுத்தமாக்குங்கள் இயக்கம்
சேவை புரியும் பகுதிஉலகம் தழுவியது
Focusசூழலியம்
வருமானம்விளம்பர ஆதரவு, நன்கொடைகள்
இணையத்தளம்http://www.cleanuptheworld.org

1993 ஆம் ஆண்டில் ஆசுத்திரேலியாவைச் சுத்தமாக்குங்கள் இயக்கத்தின் நிறுவனர்களான இயன் கியெர்னனும் கிம் மக்கேயும் தமது இயக்கத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தை அணுகியபோது உலகைச் சுத்தமாக்குங்கள் இயக்கம் தொடங்கியது. இதனால் உருவான கூட்டு முயற்சி, ஆண்டு தோறும் 120 நாடுகளைச் சேர்ந்த 35 மில்லியன் தன்னார்வலர்களை இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனால் இது சமுதாய அடிப்படையிலான உலகின் மிகப்பெரிய இயக்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், உலகைச் சுத்தமாக்குங்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவுவதுடன், தனது உலகளாவிய அமைப்புக்கள் மூலம் ஆர்வலர்கள் பங்குபற்றுவதற்கு ஊக்கமளித்தும் வருகிறது. உலகைச் சுத்தமாக்குங்கள் இயக்கம், ஐக்கிய நாடுகள் சபையினால் அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு உலகப் பகுதிகளில், ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம் ஆகிய மூன்று மொழிகளில் பணியாற்றுகின்றது.

1998 ஆம் ஆண்டில், அவரது தொலை நோக்கிற்காகவும், உலகளாவிய இச் சூழல் இயக்கத்தை நடைமுறைப் படுத்தியதற்காகவும் இயன் கியெர்னனுக்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் சசக்காவா சூழல் பரிசு வழங்கப்பட்டது.