உலக அமைதி (world peace) என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்வி, தொழினுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே.

"நீல உருண்டை" - விண்வெளியிலிருந்து பூமியின் தோற்றம்: ஒரு பூமி, ஒரு மக்கள் இனம்.
அமைதிக் குறியீடு

மனிதரும் உலக அமைதியும் தொகு

உலக அமைதி என்பது கருத்தளவில் நிகழலாம் என்றாலும்(கருவிலிருந்தே பதிக்கலாம்), நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.[1][2] மனிதர்கள் தம் இயல்பிலேயே வன்முறைச் சார்புடையவர்கள் என்றும், பகுத்தறிவு கொண்டவர்கள் என்னும் முறையில் சில சூழ்நிலைகளில் அவர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவார்கள் என்றும் இக்கருத்து உள்ளது.[1][2]

மேற்கூறிய கருத்துக்கு மாறான ஒரு கருத்தும் உள்ளது. அதாவது, போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும்.[3] இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது.[4]

உலக அமைதி பற்றிய கொள்கைகள் தொகு

உலக அமைதியை நடைமுறைக்குக் கொணர்வது எவ்வாறு என்பது குறித்துப் பல கொள்கைகள் எழுந்துள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:

உலகில் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் மோதல் ஏற்படவில்லை என்றால் உலக அமைதி ஏற்படும் என்பது ஒரு கொள்கை.

உலக அமைதி பற்றிய அரசியல் கருத்தியல்கள் தொகு

ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியல் செயலாக்கப்பட்டால் அதன் கட்டாய விளைவாக உலக அமைதி தோன்றும் என்றொரு பார்வை உள்ளது. ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் "உலகில் குடியரசு ஆட்சிமுறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி" என்று கூறினார்[5] மார்க்சிய கருத்தியலாளர் லியோன் திரொட்ஸ்கி உலகப் புரட்சி நிகழ்ந்தால் அதன் விளைவாகப் பொதுவுடைமை அமைதி ஏற்படும் என்றுரைத்தார்.[6]

குடியரசு ஆட்சிமுறையும் உலக அமைதியும் தொகு

குடியரசு ஆட்சி நிலவும் நாடுகள் அரிதாகவே ஒன்று மற்றொன்றுக்கு எதிராகப் போர்தொடுக்க முன்வருகின்றன என்பதற்குப் போதிய நடைமுறை ஆதாரம் உள்ளது என்று, குடியாட்சி வழி அமைதிக் கொள்கையினர் வாதாடுகின்றனர்.[7][8][9][10] இக்கொள்கைக்கு விதிவிலக்காக மூன்று "போர்கள்" மட்டுமே உள்ளன. அவைகூட, இரத்தம் சிந்தாத விதத்தில் நடந்தேறின. அப்போர்கள்: 1) ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐசுலாந்து நாட்டிற்கும் இடையே வட அட்லாண்டிக் கடலில் "காட்" மீன் பிடிக்கும் உரிமை பற்றி 1950களிலும் 1970களிலும் எழுந்த பிரச்சினை.[11] 2) கானடாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே பன்னாட்டுக் கடல்நீரில் மீன் பிடித்தல் பற்றி 1995இல் எழுந்த பிரச்சினை [12]. 3) இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்து போரில் ஈடுபட்டது (1940, மே 10).[13].

ஜேக் லேவி என்பவர் 1988இல் கூறியது: "பன்னாட்டு உறவுகளைப் பொறுத்தமட்டில், ஏறக்குறைய ஒரு நடைமுறைச் சட்டம் போலக் குடியாட்சி முறைவழி உலக அமைதி என்னும் கொள்கை உள்ளது."

தொழிற்புரட்சிக்குப் பிறகு, உலகின் பல நாடுகள் குடியரசு ஆட்சிமுறையைத் தழுவியுள்ளன. குடியரசு ஆட்சிமுறை பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றினால் உலக அமைதி ஏற்படும் என்பது எதிர்பார்ப்பு. ஆயினும், இக்கொள்கைக்கு விதிவிலக்குகள் பல எழக்கூடும்.

முதலாளித்துவ அமைதிக் கொள்கை தொகு

ஐன் ராண்ட் (Ayn Rand) என்னும் அறிஞர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கையை" ஆதரிக்கிறார். அக்கொள்கைப்படி, உலகில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்களில் பெரும்பான்மைப் போர்கள் "கட்டுப்பாட்டு பொருளாதார" அமைப்பு நிலவிய சூழ்நிலைகளிலேயே ஏற்பட்டுள்ளன. சுதந்திர பொருளாதார அமைப்பு நிலவிய நாடுகளில் பொதுவாக அமைதி நிலவி வந்துள்ளது. 1815இல் நடந்த நெப்போலியனிய போர்களுக்குப் பிறகு 1914 வரை (முதல் உலகப்போர்) நாடுகள் போரில் ஈடுபடவில்லை. இரு விதிவிலக்குகள் 1870இல் நிகழ்ந்த பிராங்கோ-புருச்சியப் போரும், 1898இல் நிகழ்ந்த எசுப்பானிய-அமெரிக்கப் போரும் ஆகும்.

19ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் கட்டுப்பாடற்ற, சுதந்திர அமைப்பாக இருக்கவில்லை. மாறாக, கலப்புப் பொருளாதார அமைப்பாகவே இருந்தது. எனினும், அங்கே முதலாளித்துவம் சிறப்பிடம் வகித்தது. அரசுகள் பொருளாதார அமைப்பில் தலையிட்டு, பொருளாதாரப் போக்கை நெறிப்படுத்த முனைந்தன. அச்சூழலில்தான் 1914இல் முதல் உலகப்போர் வெடித்தது.[14][15]

மேற்கூறிய "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" மேற்கத்திய நாடுகள் ஐரோப்பாவுக்கு வெளியே குடியேற்ற ஆதிக்கத்தைப் போர்மூலம் பரப்பியதைக் குறிப்பிடத் தவறுகிறது. தவிர, இத்தாலியும் செருமனியும் நாட்டு ஐக்கியம் உருவாக்க மேற்கொண்ட போர்கள், பிராங்கோ-புருச்சியப் போர், கிரிமேயப் போர், ஐரோப்பாவில் நிகழ்ந்த பிற போர்கள் ஆகியவையும் "முதலாளித்துவ அமைதிக் கொள்கைக்கு" ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லை.

மேலும், உலக அமைதி என்பது "போரில்லாத நிலைமை" என்பதில் மட்டுமே அடங்கிவிட முடியாது என்பதும் கருதத்தக்கது. வர்க்கங்களுக்கிடையே மோதல் மனப்பான்மை தொடர்ந்து நிலவுவது அமைதியென அழைக்கப்பட முடியாதது. முதலாளித்துவம் உலக அமைதிக்குக் காரணமாக அமைந்தது என்னும் கொள்கை ஏற்புடையதென்றால், அரசுத் தலையீடு குறைவாகும்போது அமைதி நிலவும் என்றோ, ஒழுங்கற்ற நிலை ஏற்படும்போதும் அமைதி பிறக்கும் என்றோ கூட வாதிட முடியும். எனவே, பலர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" நிறைவுதருவதாக இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

கோப்டன் கொள்கை தொகு

ரிச்சர்டு கோப்டன் (1804-1865) என்னும் பிரித்தானிய அறிஞர், "நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிகோலும்" என்னும் கொள்கையை எடுத்துரைத்தார். அரசியல் உறவுகள் குறைந்து, பொருளாதார உறவுகள் கட்டுப்பாடற்ற, சுதந்திர முறையில் வளரும்போது உலக அமைதியும் மக்களிடையே புரிதலும் உருவாகும் என்று அவர் கூறினார். அக்கொள்கைப்படி, வாணிகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அரசியல் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். நாட்டு ஆட்சியாளர் தனி மனிதரின் சுதந்திர வணிகச் செயல்பாடுகளைத் தடுக்காமலும், சுங்கவரி விதித்துக் கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது. எடுத்துக்காட்டாக, ஒரு நாடு துப்பாக்கி உற்பத்தி செய்கிறது, மற்றொரு நாடு வெடிமருந்து செய்கிறது என்றால் அந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட முடியாது. ஏனென்றால், துப்பாக்கி இருக்குமிடத்தில் வெடிமருந்து இராது, வெடிமருந்து இருக்கும் இடத்தில் துப்பாக்கி இராது.[16]

மேற்கூறிய கோப்டன் கொள்கையிலும் குறையுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நாடு போருக்குப் போகத் தீர்மானித்துவிட்டால், தற்காலிகமாக ஓரளவு தன்னிறைவை உருவாக்கிக் கொள்ள முடியும். அதுபோலவே, தனக்குத் தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை வேறு பல நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள முடியும். இரண்டாம் உலகப்போர் இதற்கு எடுத்துக்காட்டு. செருமனி போர்க்கால பொருளாதார அமைப்பை உருவாக்காமல் இருக்கும்போதே, போதிய அளவு தன்னிறைவு கொண்டதாக மாறியது. அதுபோல, பிரிட்டனும் போதிய தன்னிறைவு பெற்றது. போரும் நிகழ்ந்தது.

கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், உற்பத்தி, ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும். செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அந்நிறுவனங்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும். இவ்வாறு, கட்டுப்பாடற்ற, சுதந்திர வணிகம் உலக அமைதிக்கு வழிவகுக்கும்.

ஒருவரையொருவர் அழிக்கும் செயல் தொகு

"ஒருவரையொருவர் அழிக்கும் செயல்" என்பது ஒரு இராணுவக் கொள்கை ஆகும். அதன்படி, அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழிவதை இக்கொள்கை எடுத்துரைக்கிறது.[17][18]

இக்கொள்கைப்படி, அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் அனைவருக்கும் அழிவே என்னும் அடிப்படையானது உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவித பனிப்போர் தொடர்ந்தாலும், போர் நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கும்.

உலக அமைதி பற்றி ஐக்கிய நாடுகள் பட்டயமும் பன்னாட்டுச் சட்டமும் தொகு

இரண்டாம் உலகப்போருக்குப் பின், "பிற்காலத் தலைமுறைகளைப் போர் என்னும் கேட்டிலிருந்து காக்கும் பொருட்டு" 1945இல் உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய பன்னாட்டு நிறுவனமே ஐக்கிய நாடுகள் அவை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ்ந்து உலக மக்களுக்கு மாபெரும் இடர் விளைவித்த அனுபவம் கசப்பான ஒன்றாயிற்று. என்வே, உலக அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை வலியுறுத்தி, பன்னாட்டுச் சட்ட அமைப்புக்கு இணங்கத் தனி நாடுகள் இயங்க வழிவகுக்கவும், பன்னாட்டுப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்க்கவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமாகிய ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் சாற்றுரையை உருவாக்கியது. அதன் முகப்புரையில்:

என்னும் கூற்று உள்ளது.[19][20]

உலகமயமாதலும் அமைதியும் தொகு

இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி, வாணிகம் தழைத்து, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழினுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலகமயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உறவு வளர்ச்சிகள் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழி என்னும் கருத்து உள்ளது.

பிளவுபட்ட பகுதிகளாகக் கிடந்த நாடுகள் பல இன்று மைய அரசியல் அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நாடுகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், செருமனி, இந்தியா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டலாம். படிப்படியாக, உலகளாவிய ஒன்றியம் பிறக்கவும் வழி திறந்துள்ளது.

தனித்து நிற்றலும் தலையீடு தவிர்க்கும் கொள்கையும் தொகு

நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை "தலையீடு தவிர்க்கும் கொள்கை" எனப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி, நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது கருத்து.

இத்தகைய "தலையீடு தவிர்க்கும் கொள்கை" "தனித்தியங்கும் கொள்கை"யிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். தனித்தியங்கும் கொள்கை பிற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடலாகாது என்பதை வலியுறுத்துவதோடு, "பாதுகாப்பு வாதத்தையும்" (protectionism) முன்வைக்கின்றன. அதாவது, தமது சொந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மானியங்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் கொடுத்து, சுதந்திர முறை வாணிகத்துக்கு வரையறைகள் விதிக்கின்றன.

கடந்த காலத்தில் "தனித்தியங்கும் கொள்கை"யைச் சப்பான் போன்ற நாடுகள் கடைப்பிடித்ததுண்டு. சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.[21]

அடிமட்ட உறவுகள் வழி அமைதி வளர்த்தல் தொகு

உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும் [22] அதிகாரம் ஓர் இடத்தில், ஆளில், அமைப்பில் குவிவதற்கு மாறாக, பரவலாக விரியும்; அப்போது வன்முறையும் குறையும் என்பது இக்கருத்துக்கு அடிப்படை. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் இங்குக் கிடையாது. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரமோ, தெய்வீக அதிகாரமோ ஏற்கப்படுவதில்லை. மாறாக, தல அளவில், வலைப்பின்னல் போன்ற உறவுப் பரிமாற்றங்கள்மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் உறவுகள் வலுப்படும். சமய, இன, நாட்டு வேறுபாடுகளை வலியுறுத்தாமல், அனைவரும் பங்கேற்க வாய்ப்பளித்தல் இதன் ஒரு பகுதியாகும்.

மேலும், "சிந்தனைச் சோதனகள்" வழியாகவும், "பின்முறை உரை" (backcasting) வழியாகவும், இலட்சிய உலக அமைதி எவ்வாறிருக்கும் என்பதைக் கருத்தில் வரவழைத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியாக உறவு மேம்படுத்தலை இக்கருத்து முன்வைக்கிறது.

இத்தகைய ஒத்துழைப்புத் திட்டங்களாக விக்கிப்பீடியா, "அமைதியின் தேவை" (Need4peace) மற்றும் சமூக வலைத்தளங்களைக் கருதலாம்.

பொருளாதார நெறிக் கொள்கை தொகு

மைக்கல் மூசோ (Michael Mousseau) என்னும் அறிஞர் உலக அமைதி பேணுதல் குறித்து "பொருளாதார நெறிக் கொள்கை" என்றொரு கருத்தியலை முன்வைக்கிறார்[23]. பொருளாதார முறைகள் ஒன்றில் "காவலர்-பெறுநர்" (patron-client) வகையதாக இருக்கலாம், அல்லது பொதுச் சந்தை சார்புடையதாக இருக்கலாம். காவலர்-பெறுநர் வகைப் பொருளாதாரம் உட்குழுக்கள் சலுகை பெற்று முன்னேறுவதைக் கருத்தில் கொண்டிருக்கும். அதில் தலைவர் கையில் அதிகாரம் இருக்கும். அவரிடமிருந்து பெறுநர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தங்கள் ஆதரவை அளிப்பார்கள். இவ்வகைப் பொருளாதாரம் நிலவும் சமூகங்களில் சமூக உடன்பாடு (social contract) வலுவோடு இராது.

மாறாக, சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்களில் உட்குழு மனப்பான்மை என்னும் குறுகிய பார்வை இராது. சமூக உடன்பாட்டில் அன்னியரும் வெளிக்குழுவினரும் இருப்பதால் அவர்களும் பொருளாதாரச் செயல்பாட்டில் மைய இடம் வகிப்பர். சந்தைச் சார்புடைய பொருளாதாரம் தழைக்கும். இவ்வாறு, விரிந்த போக்கில் பொருளாதார நெறி அமையும்போது உட்குழுக்களுக்கும் வெளிக்குழுக்களுக்கும் இடையே உறவுகள் விரியும். ஒருவரின் நலன் வளரும்போது மற்றவரின் நலமும் வளரும். எனவே, ஆட்சியில் இழுபறி ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பதில் எல்லாத் தரப்பினரும் ஆவல் காட்டுவர். இவ்வாறு உலக அமைதி வளரும்.[24][25]

இவ்வாறு சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்கள் "சுதந்திரக் குடியரசுகள்" (liberal democracies) ஆகும். இவையே அமைதியை வளர்க்கும் தன்மை கொண்டுள்ளன.

ஆனால், காவலர்-பெறுநர் வகையில் அமைந்த பொருளுதார-அரசியல் அமைப்புகள் உட்குழுக்களின் முன்னேற்றத்தையே மையப்படுத்துவதால் பிற குழுக்களைப் புறக்கணிக்கும் போக்கு அங்கே தோன்றும். இதனால் குழுப் பகைமைகள் உருவாகும். இனங்களுக்கிடையே மோதல்களும் போர்களும் ஏற்படும். இனப்படுகொலை போன்ற கொடுமைகள்கூட நிகழும்.[26]

சந்தைச் சார்புடைய பொருளாதார அமைப்புகள் தனிமனித உறவின் அடிப்படையில் எழாமல் பொதுவான பொருளாதார சக்திகளின் செயல்பாட்டால் உருவாகின்றன. அரசு வகுக்கின்ற சட்டங்களுக்கு உட்பட்டு, பொருளாதார உறவுகள் அன்னியரையும் வெளியாட்களையும் நம்பி ஏற்பதிலிருந்து எழுவதால், அங்கே உட்குழு வெளிக்குழு என்னும் வேறுபாடு எழுவதில்லை. ஒருதலை சார்பும் தோன்றுவதில்லை. மாறாக, சந்தையை மையமாகக் கொண்ட "நடுநிலை" (market neutrality) வெளிப்படும்.

எனவே, சந்தையை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்ற நாட்டுப் பொருளாதார அமைப்புகள் அமைதிக்கு வழிகோலும் தன்மையன. அந்நாடுகள் எளிதாகப் போரில் ஈடுபட முன்வர மாட்டா. போர் என்பது "எதிரிக்குத்" தீங்கிழைப்பதை உள்ளடக்கும். அவ்வாறு தீங்கிழைப்பதால் போர் தொடுக்கும் நாடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். நாடுகள் இவ்வாறு தமக்குத் தாமே தீங்கு வருவிப்பதைத் தவிர்க்கப் பார்க்கும். மாறாக, ஒத்துழைப்பையும் கூட்டுச் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். எனவே, சந்தை மையப் பொருளாதாரங்கள் எங்கு உளவோ, அங்கு உலக அமைதிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.[24][26]

மேலே விளக்கப்பட்ட "பொருளாதார நெறிக் கொள்கை" தொழிற் புரட்சியைத் தொடர்ந்து வரலாற்றில் எழுந்த "கட்டற்ற முதலாளித்துவக் கொள்கை"யிலிருந்து மாறுபட்டது. சந்தை என்பது தன்னிலேயே "நடுநிலை" கொண்டது, கட்டுப்பாடற்ற சந்தையே செல்வம் உருவாகும்/உருவாக்கும் வழி என்பது கட்டற்ற முதலாளித்துவக் கொள்கையின் கருதுகோள். ஆனால், பொருளாதார நெறிக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்தை மனித உறவுகளின் வெளிப்பாடாகக் காண்கிறது. உட்குழுக்களும் வெளிக்குழுக்களும், உறவினரும் அன்னியரும் சமூக உடன்பாட்டின் வழி ஒருவர் ஒருவரின் வளர்ச்சியையும், அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் வாய்ப்பு இவ்வாறு எழுகின்றது. அங்கே அரசு கட்டுப்பாட்டுக்கு இடம் உண்டு; சமூக உறவுகளின் அடிப்படையில் "சமூகச் சந்தை" (social market) தோன்றும். இதுவே உலக அமைதிக்கும் வழியாகிறது.[27]

உலக அமைதி பற்றிச் சமயங்களின் பார்வை தொகு

பொதுவாக, அனைத்து உலக சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும் என்பது சமயங்களின் பொதுவான அணுகுமுறை.

பகாய் சமயம் தொகு

பகாய் சமயம் 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட மதம் ஆகும். உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பகாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இச்சமயத்தின் முக்கிய கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார்; உலக சமயங்கள் தனித்தனியாக வேறுபட்டு நின்றாலும், அவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றே; மனிதகுலம் பலவாகப் பிளவுண்டு நின்றாலும் அது அடிப்படையில் ஒன்றே.

இவ்வாறு, பகாய் சமயம் உலக அமைதிக்கான அடிப்படைகளைத் தெளிவாகக் கொண்டுள்ளது. உலக அமைதி ஏற்படுவதற்கு உலகளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு பொது அமைப்பு வேண்டும் என்றும் பகாய் கூறுகிறது. உலக அமைதி ஏற்படுவதற்கான வழிகளைப் பகாய் மைய நிறுவனமாகிய "நீதியின் பொது இல்லம்" (Universal House of Justice) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.[28]

புத்த சமயம் தொகு

மனிதர் தம் உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே உலகில் அமைதி ஏற்பட முடியும் என்பது புத்த சமயக் கருத்து. புத்த சமயத்துக்கு அடிகோலிய கவுதம புத்தர் "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார்.[29] மனித உள்ளத்தில் இருக்கின்ற கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளே போர்களும் சண்டைகளும் உருவாகக் காரணமாய் உள்ளன. எதிர்மறை உணர்வுகளைக் களைந்துவிட்டு, அன்பு, இரக்கம் போன்ற ஆக்கமிகு உணர்வுகளை மனிதர் வளர்ப்பதே உலக அமைதிக்கு வழி.

கிறித்தவ சமயம் தொகு

உலக அமைதி பற்றிக் கிறித்தவம் போதிக்கின்ற கருத்துகள் விவிலியத்திலும் வெவ்வேறு திருச்சபை அமைப்புகளின் போதனைகளிலும் காணக்கிடக்கின்றன. கிறித்தவத்தின் மூன்று முக்கிய பிரிவுகளாக விளங்குகின்ற கத்தோலிக்கம், மரபுவழி சபைகள், புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகிய அனைத்துமே சில பொதுவான கருத்துகளைக் கொண்டுள்ளன. அதாவது, கடவுள் உலக மக்கள்மீது அன்புகொண்டு, அவர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, மீட்பளிக்கும் வண்ணம் தம் ஒரே திருமகனாகிய இயேசு கிறித்துவை உலகுக்கு அனுப்பினார். இயேசு சிலுவையில் அறையுண்டு, உயிர்துறந்து, தம் சிலுவைச் சாவின் வழியாக மனித குலத்தை மீட்டார். எனவே, இவ்வுலகும் இவ்வுலக மக்களும் கடவுளோடு ஆழ்ந்த உறவிலும் ஒன்றிப்பிலும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஒன்றிப்பின் வெளிப்பாடாக, மனிதர்களுக்கிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு, ஒன்றிப்பு, அமைதி நிலவ வேண்டும். மேலும், இயேசு அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்தினார். குறிப்பாக, பகைவர்களை மன்னித்து, அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள இயேசு போதித்தார் (மத்தேயு 5:43-48). எவ்வாறாயினும், உலக அமைதி நிறைவான விதத்தில் இவ்வுலகில் ஏற்படும் என்று கிறித்தவம் கருதுவதில்லை. மாறாக, விவிலியத்தில் குறிப்பிடப்படுவது போல (காண்க: திருவெளிப்பாடு 21), மனித வரலாற்றின் முடிவில், "புதிய உலகில்" அமைதி நிறைவாக நிலவும்.

கத்தோலிக்க திருச்சபையின் போதனை

உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் மனிதர் தனிப்பட்ட முறையிலும், குழுக்களாக, நாடுகளாக இணைந்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, கிறித்தவ சபைகளுள் பெரும் பிரிவாக விளங்குகின்ற கத்தோலிக்க திருச்சபை விரிவான போதனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, 1962-1965 காலகட்டத்தில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உலக அமைதி பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தைக் கூட்டிய திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1960களில் ஐக்கிய அமெரிக்க நாடடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் முற்றிய நிலையில் அந்நாடுகளின் தலைவர்களோடு தொடர்புகொண்டு, அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடாமல், அமைதிக்கான வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தினார்.[30]

குறிப்பாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் "அவனியில் அமைதி" (Peace on Earth) என்னும் தலைப்பில் 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் "நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்" ஒரு சுற்றுமடல் எழுதினார்.[31]. அம்மடலில், அவர் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்றால் மனித உரிமைகள் எல்லா மட்டத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உரிமைகளுள்ள இடத்தில் கடமைகளும் உண்டு என்பதால், தனிமனிதரும் நாடுகளும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்புடையோராய்ச் செயல்பட வேண்டும். இவ்வாறு, உலக அமைதி என்பது மனித உரிமைகளை மதித்து, ஏற்று, மேம்படுத்துவதில் அடங்கும். அமைதியின் அடித்தளங்களாக இருப்பவை நான்கு: 1) உண்மை; 2) சுதந்திரம்; 3) அன்பு; 4) நீதி.

இந்து சமயம் தொகு

பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். வேத கால சிந்தனைப்படி, எங்கும் பரவி நிற்கும் பிரமமும் மனிதரின் அகம் உறையும் ஆன்மாவும் ஒன்றே. உயிர்கள் தமக்குள் பிரிந்து நிற்பது போல் தோன்றினாலும், அடிப்படையாக உள்ள ஒன்றிப்பை உணர்வுகடந்த நிலையில் அனுபவிப்பதே விடுதலை ஆகும்.[32] பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற சைவமும் வைணவமும் இறைபணியையும் மனிதருக்கு ஆற்ற வேண்டிய சேவையையும் வலியுறுத்தின. அண்மைக் காலத்தில் இராமகிருசுண இயக்கம் போன்ற அமைப்புகள் பொதுநல சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவ்வாறு, மனிதரிடையே நல்லுறவுகளை உருவாக்கி, உலகில் அமைதி கொணரும் பணி சமயத்தின் ஒரு பெரும் பொறுப்பு என்பது ஏற்கப்படுகிறது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கருத்து வேரூன்றியுள்ளது. குறிப்பாக, மனிதர்கள் சமய வேறுபாடுகளை மறந்து, உலக அமைதிக்காக உழைத்தல் வேண்டும் என்றும், உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அகிம்சையே வழியாக அமைய வேண்டும், போரல்ல என்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கருத்துகள் இந்து சமய மற்றும் சமண சமயப் பின்னணியிலிருந்து எழுந்தனவென்பது பொதுவான கருத்து. இயேசு பகைவரையும் அன்புசெய்ய வேண்டும் என்று வழங்கிய போதனையும் தம் வாழ்வில் தாக்கம் கொணர்ந்ததாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.

இசுலாம் தொகு

இசுலாம் சமயம் உலக அமைதியின் தேவையை எடுத்துரைக்கிறது. கடவுள் ஒருவராக உள்ளார். அல்லா என்னும் பெயர் கொண்ட அவர் மனித குலத்தை ஆதாம் ஏவா என்னும் முதல் பெற்றோரிடமிருந்து தோன்றச் செய்தார். இவ்வாறு மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர். தமக்குள் உடன்பிறப்புகளாகத் திகழ்கின்றனர். மனிதர்கள் இந்த உறவினை உணர்ந்து தம் வாழ்க்கை முறையை அமைதியான விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இசுலாம் சமயத்தின் திருநூலாகிய திருக்குர்ஆன் கூறுகிறது. "சொல்லாலோ செயலாலோ பிறருக்குத் தீங்கு இழைக்காதவனே முசுலிம்" என்பது குர்ஆனின் போதனை.

அண்மைக் காலத்தில் இசுலாம் சமயத்தின் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதியைக் குலைத்தார்கள் என்பதால், இசுலாம் சமயம் தன்னியல்பிலேயே உலக அமைதிக்கு எதிராக உள்ளது என்னும் முடிவுக்கு வருதல் தவறு என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.[33][34].

யூத சமயம் தொகு

யூதம் எதிர்காலத்தில் "மெசியா" வருவார் என்றும், அவர் சகல யூதர்களையும் இசுரேலிய நிலத்திற்கு கொண்டு வருவார் என்றும், அதனைத் தொடர்ந்து உலகில் நிரந்தர நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவார் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்கள் யூதர்களின் தனாக்கில் இருந்தும் யூதப் போதகர்களின் விளக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.[35] யூதர்களிடம் "உலகைத் திருத்துதல்" என்ற பொருளுடைய டிக்குன் ஒலம் என்ற கருத்தும் உள்ளது. அதன்படி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தல், சமூக நீதி ஆகியவற்றைச் செய்வதன் ஊடாக உலகை நீதிநெறியில் நடத்தலாமெனக் கருதுகின்றது. இது மெசியாவின் காலத்திற்கு ஆரம்பமாக இருக்குமென நம்பப்படுகின்றது.

சமணம் தொகு

உலக அமைதியைப் பேணுவதில் சமண மதம் சிறப்புப் பங்கு அளிக்கிறது. எல்லா உயிர்களையும் போற்றும் பண்பைச் சமணம் ஊக்குவிக்கின்றது. பிற உயிர்களுக்குத் தீங்கு விளைப்பது பாவம் என்பது சமணக் கொள்கை. எனவே, அகிம்சை இச்சமயத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு மூலமாகச் சமணத்தின் தாக்கத்தைக் கருதலாம். மேலும், சமணம் "அனேகவாதம்" என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, எந்தவொரு சிக்கலும் ஒரே தீர்வுக்கு உட்பட்டது என்று கூற முடியாது, மாறாக, பல தீர்வுகள் இருக்கலாம். இதையே "பன்மைவாதம்" என்றும் கூறலாம். இந்த அணுகுமுறை உலக அமைதியைப் பேணுகின்றது. கருத்து வேற்றுமைகள் ஏற்படும்போது, பிறரது பார்வையிலும் உண்மை இருக்கலாம் என்று ஏற்கும் "சகிப்புத் தன்மை" வேண்டும். அது அமைதிக்கு வழியாகும்.[36]

சீக்கிய சமயம் தொகு

சீக்கிய சமயத்தில் உலக அமைதி பற்றிய கருத்துகள் குறிப்பாக மனிதரிடையே வேறுபாடுகள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுகின்றன. சீக்கியம் ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிக்கிறது. சமபந்தி நடத்தி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஏழை-செல்வர் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே கடவுளின் மக்கள் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது.[37] சீக்கியத்தின் அடிப்படைக் கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார். மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புகள் என்பதால் தமக்குள் உடன்பிறப்புகள். நேர்மையான வழியில் செல்வம் ஈட்டுவதே முறை. தான் சேர்ப்பதைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். கடவுள் நினைவில் நிலைத்திருந்து, இயற்கையோடு இசைந்து வாழ்தல் வேண்டும்.

இக்கொள்கைகள் உலக அமைதியை வளர்க்க துணையாகும் எனச் சீக்கியம் கருதுகிறது.

உலக அமைதியின் பொருளாதார விளைவு தொகு

உலகில் அமைதி நிலவும்போது பொருளாதார வளர்ச்சியும் அதிகமாக நிகழ்கிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2011 மே மாதம் "உலக அமைதிக் குறிப்புகள்" (Global Peace Index) என்னும் ஆய்வின்படி, அதற்கு முந்திய ஓர் ஆண்டில் உலகம் 25% அதிகமாக அமைதியாக வாழ்ந்திருந்தால், உலகப் பொருளாதாரம் கூடுதலாக 2 த்ரில்லியன் டாலர்கள் பயன்பெற்றிருந்திருக்கும். அத்தொகை உலக மொத்த உற்பத்தியில் 2% ஆகும். அத்தொகையைக் கொண்டு, புவி சூடாதல் நிலையைச் சீர்படுத்தவும், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்துச் செலவுகளை ஏற்கவும், ஐரோப்பாவில் கிரீசு, அயர்லாந்து, போர்த்துகல் போன்ற நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்க்கவும், 2011இல் சப்பானில் நிகழ்ந்த ஆழிப்பேரலையால் உண்டான அழிவைச் சமாளித்து மறுவாழ்வு கொணரவும் முடிந்திருக்கும்.[38]

உலகில் அமைதி நிலவும்போது மனிதரிடையே நல்லுறவுகள் வளரும். இயற்கை வளங்கள் காக்கப்படும். மனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடையின்றி நிகழும்.

உலக அமைதியும் அரசியல்-பொருளாதார-பண்பாட்டு ஆதிக்க நெருக்கடிகளும் தொகு

உலக அமைதி மனித உள்ளத்திலிருந்து உருவாக வேண்டும் என்று சமயங்களும் ஆன்மிகவாதிகளும் கூறுவர். எனினும், நடைமுறையில் உலகளாவிய அமைதி ஏற்பட வேண்டும் என்றால், உலக நாடுகள் அரசியல், பொருளாதாரம், பண்பாடு தொடர்பான ஆதிக்கத்தைத் தம் நாட்டு எல்லைகளுக்கு அப்பால் விரிவடையச் செய்ய முனைகின்றன என்னும் உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்காக இன்று போர்கள் நிகழ்வது குறைவே. ஆனால், பொருளாதாரத்தை வளர்க்க, சக்திப் பொருள்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாடுகள் போரில் ஈடுபடுகின்றன. சில நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் தொடர்ந்து நிகழ ஆதரவு அளிக்கின்றன. போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து, இலாபம் ஈட்டுகின்றன. தமது ஆதிக்கத்தை (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்) விரிவுபடுத்த மூன்றாம் கட்சியினரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இத்தகைய போர்கள் "பிறதரப்புப் போர்கள்" (proxy wars) எனப்படுகின்றன.[39]. அதுபோலவே, அண்டை நாடு அணு ஆயுதம் உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்று, தன்மீது தாக்குதல் நிகழ்த்திவிடுமோ என்னும் அச்சத்தில் அந்நாட்டின்மீது முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல் நிகழ்த்துவது நல்லது என்னும் கருத்தும் உள்ளது.

மேலும், உள்நாட்டுப் போர்கள் இன்று உலக அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கின்றன. சில வேளைகளில், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக மாபெரும் அநீதி இழைக்கப்படும்போது அச்சமுதாய மக்கள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடும். அந்நேரத்தில் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த நீதிப் போராட்டத்தின் நியாயமான குரலை அடக்கப்பார்க்கும். இந்த உள்நாட்டுப் போர்கள் உலக அமைதியைக் குலைக்கின்றன என்று கூற முடியாது. மாறாக, நீதியின் அடிப்படையில் அமைகின்ற உலக அமைதியைக் கட்டி எழுப்ப அத்தகைய போராட்டங்கள் தேவையாகலாம். எனினும், நீதிக்கான போராட்டமும் அகிம்சை முறையில் நிகழ வேண்டும் என்று சிலர் வாதாடுவர். வேறு சிலரோ, தற்பாதுகாப்புக்காக நாடுகளும் மக்களும் அகிம்சைப் போராட்டங்கள் வெற்றி கொணராத நிலையில், வன்முறையைப் பயன்படுத்துவது முறையே என்பர்.

ஏற்கெனவே வன்முறையும் போரும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், ஒடுக்கப்படுகின்ற குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கியும் வேறு விதங்களில் ஆதரவு அளித்தும், குறிப்பாக, உணவு மருந்து ஆகிய இன்றியமையாப் பொருள்களை வழங்கியும் உதவியளித்து, நிகழ்த்துகின்ற போர்முயற்சி "மனிதநலப் போர்" (humanitarian war) என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு, இருபத்தோராம் நூற்றாண்டில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றில் செயலாற்றுகின்ற நேரடி மற்றும் மறைமுக சக்திகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, "உலக அமைதி" என்பது சிக்கல் நிறைந்த ஒரு பொருளாகவே உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 "World Peace: The Impossible Dream?", Interscience, Wiley[தொடர்பிழந்த இணைப்பு].
  2. 2.0 2.1 United Church of God, பார்க்கப்பட்ட நாள் August 2011 {{citation}}: Check date values in: |accessdate= (help).
  3. Humans naturally cooperative, Vision of humanity, archived from the original on 2012-04-21, பார்க்கப்பட்ட நாள் September 2011, altruism and cooperation are inherent in primates, including humans {{citation}}: Check date values in: |accessdate= (help).
  4. "The Myth that War is Intrinsic to Human Nature Discourages Action for Peace by Young People", Culture of peace, பார்க்கப்பட்ட நாள் August 2011 {{citation}}: Check date values in: |accessdate= (help).
  5. "President Meets with Bulgarian President Georgi Purvanov", George W Bush news release, Washington, DC, USA: White House archives, 2005-10-17.
  6. Trotsky, Leon (1914), War and the International, Marxists.
  7. "Ray", International relations, USA: M Tholyoke, archived from the original on 2008-02-17, பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
  8. Smith, "Democracy & peace", Politics (பி.டி.எவ்), USA: New York University.
  9. Woff, Müller (2004), "Democratic Peace Strikes Back", Conference (பி.டி.எவ்), SGIR.
  10. Owen, John M, IV (2005-11-01), "Iraq and the democratic peace", Fareview essay, archived from the original on 2005-12-21, பார்க்கப்பட்ட நாள் 2012-03-08{{citation}}: CS1 maint: multiple names: authors list (link).
  11. ஐக்கிய இராச்சியம்-ஐசுலாந்து: மீன்பிடித்தல் உரிமைப் பிரச்சினை
  12. கானடா-எசுப்பானியா: மீன்பிடித்தல் உரிமைப் பிரச்சினை
  13. ஐசுலாந்து போர்
  14. Rand, Ayn (1966), "2", The Roots of War, Freedom keys.
  15. ————, Capitalism: The Unknown Ideal, pp. 35–43.
  16. "Group", Facebook.
  17. "Mutual Assured Destruction", Strategy, Nuclear files.
  18. Parrington, Col. Alan J (Winter 1997), "Mutually Assured Destruction Revisited, Strategic Doctrine in Question", Airpower Journal, USA: Air Force, archived from the original on 2015-06-20, பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
  19. Preamble to the United Nations Charter
  20. ஐ.நா. மனித உரிமைகள் சாற்றுரை - தமிழில்
  21. சப்பானின் தனித்தியங்கும் கொள்கை
  22. 2020worldpeace, Amazon.
  23. பொருளாதார நெறிக் கொள்கை
  24. 24.0 24.1 Mousseau, Michael (Spring 2009), "The Social Market Roots of Democratic Peace", International Security, vol. 33, pp. 52–86.
  25. ———————— (Winter 2002–3), "Market Civilization and its Clash with Terror", International Security, vol. 27, pp. 5–29 {{citation}}: Check date values in: |date= (help).
  26. 26.0 26.1 ———————— (2003), International Studies Quarterly, 47 (4): 483–510 {{citation}}: |contribution= ignored (help); Missing or empty |title= (help).
  27. Friedman, Milton. 1970. Capitalism and Freedom. Chicago : University of Chicago.
  28. Smith, P. (1999). A Concise Encyclopedia of the Bahá'í Faith. Oxford, UK: Oneworld Publications. பக். 363–364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85168-184-1. 
  29. "Quote by Siddhārtha Gautama". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
  30. கியூபா ஏவுகணை நெருக்கடி
  31. அவனியில் அமைதி - திருத்தந்தை 23ஆம் யோவான்
  32. Dharmic Wisdom Quotes - Page 3 - Hindu Dharma Forums
  33. அமைதியை வளர்க்கும் இசுலாம்
  34. World Peace Order Towards an International State http://www.iecrcna.org/publications/books/World_Peace_Order.pdf
  35. Rambam, Mishneh Torah, Hilkhot Melachim, ch. 11-12
  36. Titze, Kurt, Jainism: A Pictorial Guide to the Religion of Non-Violence, Mohtilal Banarsidass, 1998
  37. "Sikhism: Frequently Asked Questions About Sikhism". Archived from the original on 2009-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
  38. "World less peaceful for third year running". Financial News. 29 May 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110601060604/http://www.financial-news.co.uk/2592/2011/05/world-less-peaceful-for-third-year-running/. பார்த்த நாள்: 22 June 2011. 
  39. பிறதரப்புப் போர்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_அமைதி&oldid=3924226" இலிருந்து மீள்விக்கப்பட்டது