எட்வர்ட் பிளைத்

எட்வர்ட் பிளைத் (23 திசெம்பர் 1810 - 27 திசெம்பர் 1873) ஒரு ஆங்கிலேய விலங்கியலர் ஆவார். அவர் கொல்கத்தாவில் உள்ள இந்திய ஆசியச் சமூகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றினார். ஒரு வகைப்பாட்டியலராகவும் கள ஆய்வாளராகவும் பிளைத் டார்வினின் கவனத்தை ஈர்த்தார்[1]. இருப்பினும், பறவையியலில் அவரது ஆய்வுகளே பிளைத்தின் மிக முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

எட்வர்ட் பிளைத்
எட்வர்ட் பிளைத்
எட்வர்ட் பிளைத்
பிறப்பு (1810-12-23)23 திசம்பர் 1810
இலண்டன்
இறப்பு27 திசம்பர் 1873(1873-12-27) (அகவை 63)
இலண்டன்
குடியுரிமைஇங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
அறியப்பட்டதுஆசியச் சமூகத்தின் அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகளின் பட்டியல் (Catalogue of the Birds in the Asiatic Society Museum), 1849; கொக்குகளின் இயற்கை வரலாறு (The natural history of the Cranes) 1881

ஆசியச் சமூக அருங்காட்சியகத்தில் தொகு

1841ஆம் ஆண்டு பிளைத் ஆசியச் சமூக விலங்கியல் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் அவரது பணிக்காலம் முழுதுமே மிகவும் குறைவாக இருந்தது. எனவே, பத்திரிக்கைகளில் எழுதுவது, உயிருடனுள்ள விலங்குகளை விற்பது[2] போன்ற வேலைகளைத் தன் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு அவர் செய்தார். இதைத் தவிர, ஆசியச் சமூகத்தின் பனுவலுக்காக பறவைகள், பாலூட்டிகள் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பன்னாட்டு ஆய்விதழான இயற்கை வரலாறு பனுவலில் பல்வேறு பறவைகள் குறித்த ஆய்வுகளை வெளியிட்டார். 1857ல் கல்கத்தா ரிவ்யூ என்ற பனுவலுக்காக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையை டார்வின் தம் இயற்கையியல் தேர்வு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் டார்வினுடன் பிளைத் கடிதங்கள் மூலம் வைத்துக்கொண்ட தொடர்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

பல பொறுப்புகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தபோதிலும், மீதமுள்ள பணிகளைப் புறக்கணித்து, பறவையியலுக்கு மட்டும் முக்கியமாகப் பங்களித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

முக்கியப் பங்களிப்புகள் தொகு

அருங்காட்சியகத்தில் பிளைத் பணியிலிருந்த காலத்தில், அங்கிருந்த விலங்கியல் சேகரிப்பை அவர் பெரிதும் வளப்படுத்தியிருந்தார்; அது, அதிக பார்வையாளர்களை அங்கு ஈர்த்தது[3]. உயிரினங்களில் செயற்கைத் தேர்வு என்ற கருத்தியல் சார்ந்து பிளைத் எழுதிய மூன்று ஆய்வுக் கட்டுரைகள் இயற்கை வரலாறு பனுவலில் வெளியிடப்பட்டன. அக்கட்டுரைகளில் மாறுபாடு, இயற்கைத் தேர்வு, மரபுப் பெறுகை, தக்கன பிழைத்தல் போன்ற கருத்தியல்களைக் கூறியிருந்தார்.

பிளைத் எழுதிய சில நூல்கள் தொகு

 • 1849 - ஆசியச் சமூகத்தின் அருங்காட்சியகத்தில் உள்ள பறவைகளின் பட்டியல் (Catalogue of the Birds in the Museum Asiatic Society)
 • 1863 - ஆசியச் சமூகத்தின் அருங்காட்சியகத்தில் உள்ள பாலூட்டிகள் (Mammalia in the Museum Asiatic Society)
 • 1875 - பர்மாவில் உள்ள பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் பட்டியல் (Catalogue of Mammals and Birds of Burma) -- பிளைத் இறந்த பின்னர் வெளியிடப்பட்டது.
 • 1881 - கொக்குகளின் இயற்கை வரலாறு (The Natural History of the Cranes) -- இந்நூல் பிளைத் இறந்த பிறகு, டெகட்மையர் என்பவரால் வெளியிடப்பட்டது.

பிளைத் பெற்ற பட்டங்களும் சிறப்புகளும் தொகு

பட்டங்கள் தொகு

ஜான் கூல்டு என்ற ஆங்கிலேயப் பறவையியலர் பிளைத்தைப் பற்றிக் கூறுகையில் இந்தியாவில் விலங்கியலை நிறுவியவர் என்கிறார்; இந்திய இயற்கையியலர்களில் மிகச் சிறந்தவர் என்று ஹியூம் பாராட்டுகிறார். இந்தியப் பறவைகள் குறித்த பிளைத்தின் செயல்பாடுகள் அவருக்கு இந்தியப் பறவையியலின் தந்தை என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது[4]; ஆனால், பின்னர் இந்த சிறப்பு ஹியூமிற்கு அளிக்கப்பட்டது.

சிறப்புகள் தொகு

பிளைத்தின் பெயர் தாங்கிய பறவைகள்:

 • தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளான, பிளைத் நாணல் கதிர்குருவி, பிளைத் நெட்டைக்காலி
 • இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் -- பிளைத் இலை கதிர்குருவி, Blyth Olive bulbul, பிளைத் கிளி, Blyth rosefinch, Blyth shrike-babbler, Blyth tragopan, பிளைத் மீன்கொத்தி
 • உலகின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகள் -- Blyth hawk-eagle, பிளைத் தவளைவாயன், பிளைத் இருவாயன்

பிளைத்தின் பெயர் தாங்கிய உயிரினங்கள்:

 • பாம்புகள் -- Blythia reticulata, Rhinophius blythii
 • அரணை -- Eumeces blythianus

மேற்கோள்கள் தொகு

 1. https://insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol52_2_2017__Art04.pdf
 2. https://www.rhinoresourcecenter.com/pdf_files/124/1245580480.pdf
 3. https://pubmed.ncbi.nlm.nih.gov/25033527/
 4. Murray, James A. 1888. The avifauna of British India and its dependencies. Truebner. Volume 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_பிளைத்&oldid=3871095" இலிருந்து மீள்விக்கப்பட்டது