எத்தியோப்பிய மேட்டுநிலங்கள்

மலைத் தொடர்கள்

எத்தியோப்பிய மேட்டுநிலங்கள் (Ethiopian Highlands) வடகிழக்கு ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் எத்தியோப்பியாவில் அமைந்துள்ள முரட்டு மலைப்பகுதியாகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக உயரமான தொடர்ச்சியான பகுதியை உருவாக்குகிறது, அதன் மேற்பரப்பில் ஒரு பகுதி 1500 மீட்டருக்குக் (4900 அடி) கீழாகத் தொடங்கி, இதர பகுதிகள் அதிகபட்ச உயரமாக 4550 மீட்டர் (14930 அடி) வரை உயரத்தை எட்டுகின்றன. அதன் உயரம் மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக இது சில நேரங்களில் ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படுகிறது.[1] எத்தியோப்பிய மேட்டுநிலத்தில் பெரும்பாலானவை மத்திய மற்றும் வடக்கின் திக்ரே பிரதேசம் ஒரு பகுதியாகும், மேலும் அதன் வடக்குப் பகுதி எரித்திரியாவை அடைகிறது.

வரலாறு

தொகு
 
காஃபா இராச்சியத்தின் காலத்திலிருந்து ஒரு காபி கோப்பை

எத்தியோப்பிய மேட்டுநிலத்தின் தெற்குப் பகுதிகளில் ஒரு காலத்தில் இடைக்காலத்தின் ஆரம்பகால நவீன மாநிலமான காஃபா இராச்சியம் அமைந்திருந்தது, அந்தக் காலகட்டத்தில் காப்பியானது அரேபிய தீபகற்பத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய காலத்தின் இராச்சியத்தின் நிலம் நீளமான காடுகளைக் கொண்ட மலைப்பாங்கான பகுதியாகும். இங்குள்ள நிலப்பகுதியானது மிகவும் வளமானது, ஆண்டுக்கு மூன்று அறுவடை செய்யுமளவு வளம் நிறைந்தது. "காபி" என்ற சொல் அரபு வார்த்தையானகஹ்வாவிலிருந்து உருவானது ( قهوة) [2] மற்றும் இந்த வார்த்தை காஃபா என்ற வார்த்தை வரை நீள்கிறது [3]

புவியியல் அமைவு

தொகு

இம்மேட்டுநிலங்களானவை வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளாக முதன்மை எத்தியோப்பிய பிளவினால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மேட்டு நிலத்தில் ஏராளமான உப்பு ஏரிகள் உள்ளன. டைக்ரே மற்றும் அம்ஹாரா பிராந்தியங்களை உள்ளடக்கிய வடமேற்கு பகுதியில் செமியன் மலைகள் அடங்கும். இதன் ஒரு பகுதி சிமியன் மலைகள் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் சிகரமானது, ராஸ் டாஷென் (4,550 மீ), எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். நீல நைலின் மூலமான டானா ஏரி எத்தியோப்பிய மேட்டுநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ளது.

தென்கிழக்கு பகுதியின் மிக உயர்ந்த சிகரங்கள் எத்தியோப்பியாவின் ஒரோமியா பகுதியின் பேல் மண்டலத்தில் அமைந்துள்ளன. தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பேல் மலைகள், செமியனை விட உயர்ந்தவை. இம்மலைத் தொடரின் வரம்பில் 4,000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட சிகரங்கள் உள்ளன. இவற்றில் எத்தியோப்பியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் துலு டெம்டு (4,337 மீ), மற்றும் பட்டு மவுண்ட் (4,307 மீ) ஆகியவை அடங்கும்.

நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் (கோண்டார் மற்றும் ஆக்சம் போன்ற வரலாற்றுத் தலைநகரங்களை உள்ளிட்ட) கடல் மட்டத்திற்கு மேலே சுமார் 2000-2500 மீட்டர் (6600 - 8200 அடி) உயரத்தில் அமைந்துள்ளன

காலநிலை

தொகு

எத்தியோப்பிய மேட்டுநிலத்தின் முக்கிய காலநிலை வெப்பமண்டல பருவக்காற்றுக் காலம் ஆகும். இது பொதுவாக மற்ற பகுதிகளை விடக் குளிராக உள்ளது.

சூழ்நிலையியல்

தொகு

பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள எத்தியோப்பியாவானது மலைப்பகுதியாக இருப்பதன் காரணத்தால் (கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதியில் அமைந்துள்ளதால்) இந்த நாட்டிற்கு எதிர்பாராத விதமாக மித வெப்பமண்டல காலநிலை அமைகிறது. மேலும், இந்த மலைகள் இந்தியப் பெருங்கடலிலிருந்து வரும் பருவக்காற்றின் மழையை ஈர்க்கின்றன, இதன் விளைவாக மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கிறது.[4] இந்த கனமழையானது நைல் நதியில் கோடை காலத்தில் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாகிறது, இது பண்டைய கிரேக்கர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் கோடை காலத்தை மத்தியதரைக் கடலில் வறண்ட காலமாகவே அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Paul B. Henze, Layers of Time (New York: Palgrave, 2000), p. 2.
  2. Oxford English Dictionary, 1st ed. "coffee, n." Oxford University Press (Oxford), 1891.
  3. Weinberg & Bealer 2001
  4. An explanation of this unusual rain pattern can be found at Ethiopia: Drought intensifies during corn and sorghum harvest (ReliefWeb)